மத்திய மந்திரி நிதின் கட்காரியுடன் நடந்த பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டதையடுத்து, லாரி உரிமையாளர்கள் தங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை இன்று வாபஸ் பெற்றனர்.

சுங்கக் கட்டணத்தை முறைப்படுத்தவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் 1-ம் தேதி முதல் நாடுதழுவிய அளவில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து 4 நாட்களாக லாரிகள் இயக்கப்படாததால் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. காய்கறி விலை அதிகரிக்கத் தொடங்கியது. ஏராளமான சரக்குகள் முடங்கியதால், அரசுக்கும் லாரி உரிமையாளர்களுக்கும் பலகோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.

இன்று 5-வது நாளாக போராட்டம் நீடித்த நிலையில், லாரி உரிமையாளர்களின் கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும், கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசுக்கு கூடுதல் அவகாசம் கொடுத்து வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறச்செய்ய வேண்டும் என்றும் பல்வேறு தலைவர்கள் கூறி வந்தனர்.

இந்நிலையில், இன்று மாலை டெல்லியில் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது கோரிக்கையை பரிசீலிப்பதாக கூறிய கட்காரி, போக்குவரத்து துறை செயலாளர் விஜய் சிப்பர் தலைமையில் ஒரு கமிட்டி உருவாக்கப் பட்டிருப்பதாகவும், அதில் லாரி உரிமையாளர்கள் சங்க பிரநிநிதிகளும் இடம்பெறுவார்கள் என்றும் தெரிவித்தார். இந்தக் கமிட்டி, லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்து டிசம்பர் 15ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும். அதன்பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். இதனை லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டனர்.

இந்த பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு ஏற்பட்டதையடுத்து, ஸ்டிரைக்கை வாபஸ் பெறுவதாக அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் பீம் வத்வா அறிவித்துள்ளார். இதன்மூலம் 5 நாள் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.