உலகவங்கியின் பங்களிப்புடன் கூடிய ரூ.2,140 கோடி மதிப்பீட்டிலான தேசிய நீர்மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பொருளாதார விவகாரங் களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அரசின் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கபட்டது. இவற்றில், தேசிய நீர் மேலாண்மை திட்டமும் ஒன்றாகும். இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள தையடுத்து, பிரதமரின் நீர் பாசனத் திட்டத்தின்கீழ் இந்த நீராஞ்சல் நீர் மேலாண்மை திட்டம் கொண்டு வரப்படும். விவசாய நிலங்களுக்கான பாசனவசதியை அதிகரிக்கும் நோக்கில் உருவாக்கப் பட்டுள்ள இத்திட்டமானது ஆந்திரம், சத்தீஸ்கர், குஜராத், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், ஒடிஸா, ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் செயல்படுத்தப்படும்.

ரூ.2,140 கோடி மதிப்பிலான இந்த திட்டத்தில் மத்திய அரசின் பங்கு ரூ.1,071 கோடி ஆகும். மீதத்தொகையை உலக வங்கி வழங்கும்.

வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை நாட்டுக்கு திரும்ப கொண்டு வரும் வகையில் பல்வேறு சீர்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இஸ்ரேல், வியட்நாம் நாடுகளுடனான இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தங்களை திருத்தி யமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

"கருப்பு பணத்தை திரும்ப கொண்டு வருவதற்கான அரசு மேற்கொண்டுள்ள ஒருநடவடிக்கையே இதுவாகும். இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தை தவறாக பயன்படுத்தி ஏராளமான கருப்புப்பணம் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்கிறது. இதனைத் தடுக்கும்விதமாக இந்த ஒப்பந்தங்களை அரசு மாற்றியமைக்கும்.

இதன் மூலம் இரு நாட்டு வங்கிகளின் பண பரிவர்த்தனை குறித்த தகவல்கள், வரிதொடர்பான தகவல்கள் ஆகியவற்றை இந்தியா பெறுவதோடு, அவற்றை அமலாக்க துறையினருக்கும் வழங்க வகை செய்யப்படும்'' என மத்திய மின்சார துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

நாடு சுதந்திரம் அடைந்தபிறகு அண்டை நாடுகளுடான போர், மோதல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 22 ஆயிரத்து 500 ராணுவ வீரர்களுக்கு தேசிய போர் நினைவு சின்னம், அருங்காட்சியகம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த இரண்டும் தில்லியில் இந்தியா கேட் பகுதியில் அமைகிறது.

நாடு முழுவதும் உள்ள ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள்கள் போனஸ்வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. பண்டிகை காலத்தை முன்னிட்டு, இந்த உற்பத்திசார்ந்த போனஸ் தொகையை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் நாடுமுழுவதும் ரயில்வே துறையில் பணிபுரியும் 12.58 லட்சம் ஊழியர்கள் பயனடைவர். இதன் படி, ரயில்வே ஊழியர்களுக்கு இந்தமாத ஊதியத்துடன் சேர்த்து ரூ.8,975 போனஸாக கிடைக்கும்.

ரயில்வே துறையில் நிதி நிலைமையை சீராக்கும் பொருட்டு, ஊழியர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்துவதற்காக இந்தபோனஸ் வழங்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Tags:

Leave a Reply