பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு பின்னர் மத்திய தரை வழி போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி நிருபர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “நாடு விடுதலையடைந்த பின்னர் வீரமரணம் அடைந்துள்ள

அனைத்து இந்திய வீரர்களின் நினைவாக டெல்லியில் ‘இந்தியா கேட்’ அருகே பிரின்சஸ் பூங்காவில் தேசிய போர் நினைவுச் சின்னமும், அருங்காட்சியகமும் உருவாக்கப்படும். இதன் உத்தேசமதிப்பீடு ரூ.500 கோடி ஆகும். இதற்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் வழங்கியது. இந்த திட்டப்பணிகள் 5 ஆண்டுகளில் நிறைவு அடையும்” என கூறினார்.

கடந்த ஆண்டு பாராளுமன்றத்தில் நிதிமந்திரி அருண் ஜெட்லி, மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசியபோது, போர் நினைவுச் சின்னமும், போர் அருங்காட்சியகமும் டெல்லி பிரின்சஸ் பூங்காவில் அமைக்கப்படும் என அறிவித்தார். அந்த அறிவிப்பு, இப்போது செயலுக்கு வருகிறது.

போர் நினைவுச்சின்னத்தில் 1947-ம் ஆண்டுக்கு பின்னர் உயிர்த் தியாகம் செய்த அனைத்து வீரர்களின் பெயர்களும் பொறிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாடுசுதந்திரம் அடைந்தபின்னர் 1947, 1962, 1965, 1999 ஆகிய ஆண்டுகளில் அண்டை நாடுகளுடன் போர் புரிந்திருந்தாலும், இது வரை போர் வீரர்களுக்கு என ஒரு தேசிய நினைவுச்சின்னம் அமைக்கப்படவில்லை என்றகுறை இருந்து வந்தது. இந்த போர் நினைவுச்சின்னம், அருங்காட்சியகத்தின் மூலம் அந்தகுறை நீங்குகிறது.

‘பிரதம மந்திரி சுவஸ்த்யா சுரக்ஷா யோஜனா’ திட்டத்தின் கீழ் மராட்டிய மாநிலம் நாக்பூர், ஆந்திர மாநிலம் மங்களகிரி, மேற்கு வங்காள மாநிலம் கல்யாணி நகரங்களில் எய்ம்ஸ் என்னும் அகில இந்திய மருத்துவ விஞ்ஞானகழக மருத்துவ மனைகள் அமைக்கப்படும். இந்த திட்டத்துக்கும் மத்திய மந்திரி சபை நேற்று ஒப்புதல் வழங்கி உள்ளது.

இதை மத்திய எரி சக்தி, நிலக்கரித் துறை அமைச்சர் பியுஷ் கோயல் நிருபர்களிடம் தெரிவித்தார். தரமான மருத்துவ கல்வி, செவிலியர் கல்வி, மக்களுக்கு சுகாதார வசதிகள் வழங்குவதற்காக இந்த எய்ம்ஸ் மருத்துவ மனைகள் அமைக்கப்படுகின்றன.

இந்த திட்டத்தை செயல் படுத்துவதற்காக ரூ.4 ஆயிரத்து 949 கோடி செலவாகும் (நாக்பூருக்கு ரூ.1,577 கோடி, மங்களகிரிக்கு ரூ.1,618 கோடி, கல்யாணிக்கு ரூ.1754 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மருத்துவமனையிலும் தலா 960 படுக்கைவசதிகள் செய்துதரப்படும். இது தவிர்த்து வகுப்பறை வளாகம், ஆயுஷ் பிளாக், ஆடிட்டோரியம், நர்சிங் கல்லூரி, இரவு தங்குமிடம், விடுதி, குடியிருப்புகள் என கட்டப்படும் என்று பியுஷ் கோயல் கூறினார். இந்த எய்ம்ஸ் ஆஸ்பத்திரி பற்றிய அறிவிப்பு, கடந்த 2014-15 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதாகும்.

Tags:

Leave a Reply