பிகார் தேர்தலையொட்டி, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சசாரம், ஒüரங்காபாத் ஆகியபகுதிகளில் பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

ஊழல் வழக்கில் குற்றம் நிரூபணமானதால் மதச்சார்பற்ற மகாகூட்டணியில் இடம்பெற்றுள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவர் லாலுபிரசாத், பிகார் பேரவை தேர்தலில் போட்டியிட முடிய வில்லை. “நானே பெரியதலைவர்’ என்றும், “பிறரை ஆட்டுவிக்கும் ஆற்றல் கொண்ட நபர்’ என்றும் லாலு கூறிவருகிறார்.

ஒருவேளை பிகாரில் மகாகூட்டணி வெற்றிபெற்றால், பின்னணியிலிருந்து ஆட்டுவிக்கும் சக்தியாக லாலு செயல்படுவார்.

பிகாரில் காட்டாட்சி நடை பெறுகிறது என்று பேசினால், அதை லாலு பெரிதாக எடுத்து கொள்வதில்லை. அதேவேளையில், மாநில முதல்வர் நிதீஷ்குமார் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். லாலு பிகார் முதல்வராக இருந்த போது அதை காட்டாட்சி என விமர்சித்த நிதீஷ்குமார், தற்போது அந்த வார்த்தையை கூறினால் வருத்தமடைகிறார்.

ஐக்கிய ஜனதா தளமும், ராஷ்ட்ரீய ஜனதா தளமும் கைகோத்த பிறகு இது வரை இல்லாத அளவு மாநிலத்தில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த ஜனவரியிலிருந்து ஜூலை வரை 4,000 கடத்தல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

பாட்னாவில் காவலர் ஒருவர் வியாழக் கிழமை சுடப்பட்டார். போலீஸாரின் உயிருக்கே உத்தரவாதம் இல்லாதபோது மக்கள் எப்படி பாதுகாப்பாக இருப்பார்கள்? பிகாரில் காட்டாட்சிக் காலம் நடைபெற்றபோது எத்தனை தொழிற்சாலைகள் மாநிலத்தில் நிறுவப்பட்டன? கடத்தல் தொழிற் சாலையாகத்தான் பிகார் மாறியுள்ளது. ஏழைமக்களின் வீடுகள் அபகரிக்கப்பட்டன. புதியகார்கள் திருடப்பட்டன. இத்தகைய மோசமான ஆட்சி மீண்டும் அமையவேண்டுமா?

அவர்களுக்கு வாக்களித்து, மீண்டும் அதேதவறை நீங்கள் செய்தால் பிகாரின் தலைவிதி என்னவாகும் என்பதை யோசித்து பாருங்கள். அழிவிலிருந்து பிகாரை மீட்டெடுங்கள்.

லாலு, நிதீஷ்குமார், சோனியா காந்தி ஆகியோரின் கட்சிகள் 60 ஆண்டுகாலம் பிகாரில் ஆட்சியில் இருந்தன. அந்தக்கால கட்டத்தில் பிகாருக்காகவும், மாநில மக்களுக்காகவும் என்ன செய்துள்ளோம்? என்பதை பிரசாரத்தின் போது அவர்களால் பேச முடிய வில்லை. மாறாக என்னை விமர்சிப்பதையே அவர்கள் இரவும் பகலும் வேலையாக கொண்டுள்ளனர். என்னை எவ்வாறு விமர்சிக்கலாம், இகழ்ந்துரைக்கலாம் என அகராதியைத் தேடிப்பார்த்து திட்டுகின்றனர்.

அதிலுள்ள சொற்கள் தீர்ந்துபோன பிறகு, அவர்களாகவே இகழ்ச்சியுரைகளை உருவாக்கி விமர்சிக்கிறார்கள்.
பிகார் முதல்வர் பதவியிலிருந்து ஜிதன் ராம் மாஞ்சியை நீக்கியதன் மூலம் நிதீஷ்குமார் தலித் மக்களின் முதுகில் குத்திவிட்டார். நிதீஷின் அதிகார மமதையால் அவர் தோல்வியைத் தழுவுவார்.

பிகாரில் நடைபெறவுள்ள தேர்தலானது, அடுத்து யார் ஆட்சியை பிடிக்க வேண்டும்? எந்தக்கட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும்? என்பதைத் தீர்மானிக்க அல்ல.

பிகார் மாநிலத்தை அழிவுப் பாதைக்குக் கொண்டு சென்றவர்களுக்கு தண்டனை வழங்கவேண்டிய தேர்தல் இது. நீங்கள் தான் (மக்கள்) உச்சநீதிமன்றம்; நீங்கள்தான் நீதிபதிகள். வாக்குப்பதிவு நாளின்போது சரியான பொத்தானை அழுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குங்கள்.

வளர்ச்சியின் மூலமே பிகாரில் மாற்றத்தை ஏற்படுத்தமுடியும். உலக வரை படத்தில் பிகார் எத்தகைய இடத்தைப் பிடிக்க போகிறது? என்பதைத் தீர்மானிக்கும் தேர்தல் இது என்றார் பிரதமர் மோடி.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.