பொதுக்கூட்டத்திற்கு வந்திருந்த ஒரு சிறுமியின் கையில் இருந்த ஓவியத்தை பார்த்ததும் பிரதமர் நரேந்திர மோடி சட்டென தனது பேச்சை பாதியிலேயே நிறுத்தினார். தனது தாயார் ஹீராபென் மோடியுடன் தான் இருப்பது போல வரையப்பட்டிருந்த ஓவியத்தை பார்த்து பிரதமர் சில கணம் சிலிர்த்துப் போனார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நேற்று (ஜன 23) மதுராந்தகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு திமுகவிற்கு எதிராக கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து உரையாற்றினார்.
அப்போது அங்கு ஒரு சிறுமி, மோடியும் அவர் தாயார் ஹீராபென்னும் ஒன்றாக இருக்கும் படத்தை ஓவியமாக வரைந்து அவரிடம் கொடுப்பதற்காக கொண்டு வந்திருந்தார். மோடி உரையாற்ற ஆரம்பித்த 2 நிமிடங்களிலேயே சிறுமி கையில் இருந்த ஓவியத்தை கண்டு அவர் சிலிர்த்து போனார். இதையடுத்து, தனது உரையை நிறுத்திய மோடி, “நானும் எனது தாயாரும் கோயிலில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை ஓவியமாக வரைந்து வந்துள்ள சிறுமி ஒருவர் அதை என்னிடம் கொடுப்பதற்காக நீண்ட நேரம் கையில் பிடித்துக் கொண்டிருக்கிறார். அவரிடமிருந்து அந்த புகைப்படத்தை பெற்றுக்கொண்டு வாருங்கள். அதில் அவரது பெயர், விவரங்கள் இருந்தால் போதும். நான் மீண்டும் பதில் கடிதம் அனுப்புவேன்” என்று கூறியதோடு, சிறுமியை நோக்கி நன்றி மகளே! என்று கூறினார்.
அங்கு நின்ற சிறுமியை பிரதமர் கவனித்து அவருக்காக பேசியதை கேட்டதும் அங்கு கூடியிருந்த மக்கள் அனைவரும் ஆரவாரத்துடன் கைதட்டினர். உடனடியாக பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் அந்த சிறுமியிடம் ஓவியத்தை வாங்கியதோடு, அவரது விவரங்களையும் பெற்றுச் சென்றனர்.
இதுகுறித்து ஓவியத்தை வரைந்துவந்த சிறுமி ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டியில், “என் பெயர் க.ஷகஷ்ரா. நான் மதுரையில் இருந்து வந்துள்ளேன். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரதமர் மோடிக்கு அவரது தாயார் ஆசிர்வாதம் வழங்குவது போல் படத்தை வரைந்து வண்ணம்தீட்டி கொண்டு வந்திருந்தேன். அந்தப் படத்தை பிரதமர் மோடி வாங்கிக்கொண்டு என்னை வாழ்த்தினார். இந்தத் தருணம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது” என்றார்.
சிறுமியின் தாயார் கவிதா திலீபன் கூறுகையில், “பிரதமர் மோடியை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் எங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். அவர் போன்ற மிகப்பெரிய தலைவரை யாரும் பார்க்க முடியாது. இந்தியாவை மிகப்பெரிய வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்று நிறுத்தியுள்ளார். உலக நாடுகள் இந்தியாவை பார்த்து பயப்படுகிறது என்றால் அது மோடியின் தலைமை தான் காரணம். அவர் மீண்டும் பிரதமராக வாழ்த்தும் வகையில் எனது மகள் ஓவியம் தீட்டி இங்கு கொண்டுவந்து கொடுத்தாள்” எனத் தெரிவித்தார்.
சிறுமியின் சித்தி அருள்மணி கூறுகையில், “பிரதமர் எங்களது மகளின் ஓவியத்தை பார்த்து வாங்குவார் என எதிர்பார்க்கவே இல்லை எனவும், இது ஒரு கனவு போல இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ... |
கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ... |
பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ... |