இந்தியாவில் இவ்வளவு அதிகமான கார்ப்பரேட் பணம் சமூகப்பொறுப்புணர்வு (CSR) பணிகளுக்காக இதுவரை செலவிடப்பட்டதில்லை. ஆனால், இந்தநிதியை உண்மையான தேவை உள்ள இடங்களில் நாம் சரியாகப் பயன்படுத்துகிறோமா என்பதுதான் தற்போதைய கேள்வியாக உள்ளது.
பிரச்சினையின் பின்னணி: 2024-25 ஆம் ஆண்டில் CSR திட்டங்களுக்காக இந்தியா ரூ. 40,794 கோடியை செலவிட்டுள்ளது. கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம் போன்ற பல சமூகப்பணிகளுக்கு இத்தொகை சென்றடைந்துள்ளது. எனினும், இதன் புவியியல் பகிர்வு மிகவும் வியப்பளிக்கிறது. உதாரணமாக, தில்லியில் தனிநபர் CSR செலவு ரூ. 1,243 ஆக உள்ள நிலையில், பீகாரில் வெறும் ரூ. 35 மட்டுமேயாக உள்ளது. செலவுகள் மற்றும் திறன்கள் வெவ்வேறாக இருக்கலாம் என்றாலும், தேவை அடிப்படையில் கார்ப்பரேட் நிதி ஒதுக்கப்படுகிறதா அல்லது நிதி எங்கு எளிதாகக் கிடைக்கிறதோ அங்கு செலவிடப்படுகிறதா என்ற கேள்வியை இது எழுப்புகிறது.
தேவையிலிருந்து தொடங்குதல்: பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது CSR நிதிக்காக ஒரு செயல்திட்டத்தை முன்கூட்டியே தீர்மானித்துவிட்டு, பின்னர் அதனைச் சமூகத் தேவையுடன் இணைக்கமுயல்கின்றன. ஆனால் இந்த முறையை மாற்ற வேண்டிய காலம் இதுவாகும். ஒரு கிராமத்தில் பள்ளியில் ‘ஸ்மார்ட் வகுப்பறை’ அமைப்பது நல்லதிட்டமாக இருக்கலாம்; ஆனால் அந்த கிராமத்தின் உண்மையான தேவை அதுவாக இல்லாமல், 17 வயதுப்பெண்கள் பள்ளிக்குச் செல்ல பாதுகாப்பான போக்குவரத்து இல்லாமை அல்லது கழிப்பறை வசதியின்மை போன்ற அடிப்படைப்பிரச்சினையாக இருக்கலாம். எனவே, தலையீடுகள் என்பவை தேவையை கண்டறிந்த பின்பே தொடங்கப்பட வேண்டும்.
மக்களை அறிந்துகொள்ளுதல்: பெண்கள், விவசாயிகள், குழந்தைகள் மற்றும் கிராமப்புறசமூகங்கள் போன்ற எளிமையான முத்திரைகளுக்கு அப்பால் உண்மையான வாழ்க்கை மிகவும் சிக்கலானது. விவசாயிக்கு நவீன விவசாயப் பயிற்சி பட்டறையைக் காட்டிலும் பாசனம் அல்லது சந்தை இணைப்பு தேவைப்படலாம். எனவே, “நாம் எதை நிதியளிக்கமுடியும்?” என்று கேட்பதை விடுத்து, “எது இந்தச் சமூகம் முன்னேறத் தடையாக உள்ளது?” என்று கேட்பதே முறையான அணுகுமுறையாகும்.
காட்சிப்படுத்தலின் சிக்கல்: சில CSR திட்டங்கள் எளிதில் விளம்பரப்படுத்தக்கூடியவையாக உள்ளன (எ.கா. பள்ளி கட்டடம், மருத்துவமனைப் பகுதி, புலமைப்பரிசு விழாக்கள்). ஆனால் பெண் குழந்தைகள் கல்வியை பாதியில் விடுவதைத் தடுப்பது அல்லது நீண்ட காலமாக ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கு உதவுவது போன்ற முக்கியமான பணிகளுக்கு எளிதில் விளம்பரம் கிடைக்காது. எளிதில் கண்ணுக்குத் தெரியும் மற்றும் அளவிடக்கூடிய திட்டங்களை மட்டுமே கார்பரேட்டுகள் நாடுவதால், மிக முக்கியமான பிரச்சினைகள் விடுபட்டுப்போகும் அபாயம் உள்ளது.
முடிவுரை: நிறுவனங்கள் அதிக பணம் செலவிடுவதை விட, அந்தப் பணம் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதை உறுதி செய்வதே முக்கியம். ரூ. 40,794 கோடி என்பது சாதாரணத்தொகை அல்ல. கார்ப்பரேட் நிறுவனங்களின் உதவிகள் எளிதில் சென்றடையும் இடங்களை மட்டுமே தேடிச் சென்றால், நாட்டின் உண்மையான தேவைகளைத்தாண்டி வெறும் விளம்பரத்துக்கான திட்டங்கள் மட்டுமே எஞ்சும். இந்தியாவில் இப்போது CSR-க்கான ‘பணப் பிரச்சினை’ இல்லை; மாறாக, எங்கு செலவிட வேண்டும் என்ற ‘இடப் பிரச்சினை’ மட்டுமே உள்ளது.