பண்டிகைக் காலத்தில் சமையல் எண்ணெய் இறக்குமதி வரியைக் குறைத்து, உயர்ந்து வரும் சமையல் எண்ணெய் விலையால் தவித்து வரும் சாமானிய நுகர்வோருக்கு மத்திய அரசு ஓரளவு நிம்மதியை அளித்துள்ளது. இதனால் சமையலறைக்கான மாதாந்திர பட்ஜெட் சற்று குறையும். கச்சா சோயாபீன் மற்றும் கச்சா பாமாயிலுக்கான அடிப்படை சுங்கவரியை 10%-லிருந்து 5% ஆக அரசு குறைத்துள்ளது. கச்சா சூரியகாந்தி எண்ணெய் மீதான இறக்குமதி வரி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், சுத்திகரிக்கப்பட்ட (ரிஃபைண்ட்) சோயா மற்றும் பாமாயில் மீதான வரி 32.5%-லிருந்து 27.5% ஆகவும், சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் மீதான வரி 32.5%-லிருந்து 22.5% ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செலவைக் குறைத்து உள்நாட்டு சந்தையில் சமையல் எண்ணெய் இருப்பை அதிகரிப்பதும், விலை அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதுமே இதன் நோக்கமாகும்.
உணவுப் பொருட்களின் விலை உயர்வு குறித்த கவலைகள் நீடித்து வரும் சூழ்நிலையில் அரசின் இந்த நடவடிக்கை வந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 4.82% ஆக இருந்த நிலையில், உணவுப் பணவீக்கம் 5.95% ஆக எட்டியது. மொத்த விலை குறியீட்டெண்ணில் (WPI) உணவுப் பணவீக்கம் இதைவிட அதிகமாக 7.1% ஆக பதிவானது. உணவுப் பொருட்களின் விலை அழுத்தம் இன்னும் முழுமையாகக் குறையவில்லை என்பதை இந்த புள்ளிவிவரங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. அத்தகைய சூழலில், சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரிக் குறைப்பு நுகர்வோருக்குப் பலனளிக்கும் வழியாக அமையும்.
இந்தியா தனது சமையல் எண்ணெய் தேவையின் பெரும் பகுதியை இறக்குமதி மூலமே பூர்த்தி செய்கிறது. எனவே, சர்வதேச சந்தையில் பாமாயில், சோயா மற்றும் சூரியகாந்தி எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் உள்நாட்டு சந்தையை நேரடியாகப் பாதிக்கின்றன. இதுதவிர, இந்திய ரூபாயின் மாற்று விகிதமும் இறக்குமதி செலவை நிர்ணயிக்கிறது. பலவீனமான ரூபாய் மதிப்பு, வெளிநாட்டு சந்தையிலிருந்து எண்ணெய் வாங்குவதை விலையுயர்ந்ததாக மாற்றும். இதுபோன்ற சூழலில், இறக்குமதி வரி குறைப்பால் இறக்குமதியாளர்களின் செலவு குறைய வாய்ப்புள்ளதுடன், அதன் பலன் நுகர்வோருக்கும் சென்று சேரக்கூடும்.
அதேசமயம், வரிக்கறைப்பின் உண்மையான பலன் எப்போது மற்றும் எவ்வளவு அளவிற்கு சாமானிய மக்களுக்குச் சென்றடையும் என்பதே மிக முக்கியமான கேள்வியாக எழுகிறது. அரசு இறக்குமதி வரியைக் குறைத்துவிட்டது, ஆனால் சில்லறை விற்பனையிலும் அதே விகிதத்தில் விலை குறைகிறதா என்பதை உறுதி செய்வதும் அவசியமாகும். எனவே சப்ளை சங்கிலி முழுவதையும் அரசு உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும். குறிப்பாக பண்டிகைக் காலத்தில் பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தை தடுப்பில் கண்டிப்பு மிக அவசியம். தேவை அதிகரிக்கும் நேரத்தில் வியாபாரிகள் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி சரக்குகளைப் பதுக்கினால், சந்தையில் மீண்டும் விலை உயரக்கூடும்.
சமையல் எண்ணெயின் விலை தாக்கம் சமையலறையுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. பாமாயில் மற்றும் சோயா எண்ணெய் போன்றவை கார வகைகள், பிஸ்கட், பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகள் மற்றும் உணவகங்களில் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. எனவே எண்ணெய் விலை உயரும் போது இதர பல பொருட்களின் விலையும் பாதிக்கப்படுகிறது. இறக்குமதி வரிக் குறைப்பு உடனடி நிவாரணம் தந்தாலும், உள்நாட்டு எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியைப் பெருக்குவதே இதற்கு நிரந்தர தீர்வாக அமையும். கடுகு, சோயாபீன், நிலக்கடலை மற்றும் சூரியகாந்தி போன்ற எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை அதிகரித்து இறக்குமதி மீதான நாட்டின் சார்பைக் குறைக்க வேண்டும்.
விலைவாசி உயர்வுக்கு எதிரான போரில் அரசு அறிவிப்புகளால் மட்டுமே வெற்றி பெற்றுவிட முடியாது. உற்பத்தி முதல் இறக்குமதி, மொத்த சந்தை மற்றும் சில்லறை விற்பனை வரை ஒட்டுமொத்த நடைமுறைகளையும் கண்காணிக்க வேண்டும். சமையல் எண்ணெய் மீதான வரிக் குறைப்பு ஒரு நல்ல முயற்சி, ஆனால் அதன் பலன் எவ்வளவு விரைவாக சாமானியனின் சமையலறைக்குச் சென்று சேர்கிறது என்பதே இதன் வெற்றியைத் தீர்மானிக்கும். ஒருபுறம் இறக்குமதி செலவு குறைந்ததன் பலனை நுகர்வோருக்குக் கொண்டு சேர்க்க வேண்டும்; மறுபுறம் பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தையைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அப்போதுதான் இந்த நிவாரணம் உண்மையாகவே சாமானிய மக்களின் பாக்கெட்டுகளுக்கு நிம்மதி தரும்.
இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ... |
முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ... |
உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ... |