புதிய சிகரம்தொடும் தமிழ்நாட்டை படைக்க மத்தியஅரசிடம் இருந்து தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ரூ.13 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைக்க இன்று (அக்.11) சென்னை வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் விஜய் விமானநிலையத்தில் பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து வரவேற்றார்.
அதனைத்தொடர்ந்து, பூந்தமல்லி – வடபழனி வழித்தட மெட்ரோ ரயில் சேவையைப் பிரதமர் மோடியும், முதலமைச்சர் விஜய்யும் இணைந்து கொடியசைத்துத் தொடங்கிவைத்தனர். அதன் தொடர்ச்சியாகச் சாலை மார்க்கமாகச் சென்னை ஐஐடிக்கு வருகை தந்த பிரதமர் மோடி, ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டேஸ்வரர் சிவன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அங்கு அவருக்கு மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர், சென்னை ஐஐடியில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சுதா கோபாலகிருஷ்ணன் மூளை ஆராய்ச்சி மையத்தை பார்வையிட்டார். அங்கு மூளைசெல்கள் தொடர்பாக நடைபெறும் ஆய்வுகள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் பிரதமருக்கு விளக்கினர். மேலும், அங்கு வைக்கப்பட்டிருந்த பதப்படுத்தப்பட்ட மூளைகளைப் பார்வையிட்டு, பல்வேறு ஆய்வுகள்குறித்தும் மோடி கேட்டறிந்தார்.
இந்நிகழ்வில் முதலமைச்சர் விஜய், மத்திய அமைச்சர் எல்.முருகன், சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நரேந்திரன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர். தொடர்ந்து, ஆராய்ச்சியாளர்களுடன் சேர்ந்து பிரதமர் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
அதன் பின்னர், ரூ.13,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களின் தொடக்கவிழா, நாட்டிற்கு அர்ப்பணித்தல் மற்றும் அடிக்கல் நாட்டுவிழாவில் பிரதமர் மோடி, தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், முதலமைச்சர் விஜய், மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த், தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நகேந்திரன், சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். மேலும், இந்நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
முதலில் இசைக்கப்பட்ட தேசிய கீதம்
முன்னதாக நிகழ்ச்சியின் தொடக்கத்தில் முதலில் தேசிய கீதம், அதனைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. தொடர்ச்சியாக நிகழ்ச்சியின் தொடக்க உரையை நிகழ்த்திய மத்திய அமைச்சர் எல்.முருகன், பிரதமர் மோடியைப் பாராட்டி விழாவிற்கு அனைவரையும் வரவேற்றார்.
அதன் பின்னர் பேசிய முதலமைச்சர் விஜய், சமூக நீதியின் அடிப்படையில் ஊழலற்ற மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்டஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். 2036ஆம் ஆண்டில் 1.5 மில்லியன் பொருளாதாரம் என்ற இலக்கை நோக்கி பல்வேறு திட்டங்களைத் தீட்டி வருவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து, ரூ.13,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்குப் பிரதமர் மோடி அடிக்கல்நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
அதனைத்தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் மோடி, “இன்றைய இந்த நிகழ்ச்சி ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுடன் தொடர்பானது. புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் அதே நேரத்தில் நிறைவடைந்த திட்டங்களையும தொடங்கி வைக்கிறோம்.
இந்த திட்டங்கள் தொழில்துறையையும், வர்த்தகத்தையும் வலுப்படுத்தும். மேலும், வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும். இந்த நேரத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். புண்ணிய பூமியான தமிழ்நாட்டிலிருந்து நவராத்திரி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று பாரத் ரத்னா ஜெயபிரகாஷ் நாராயண், நானாஜி தேஷ்முக் ஆகியவர்களில் பிறந்தநாளும் ஆகும். அவர்களுடைய வாழ்வு தேசபக்தி, தேசசேவை, அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடையாளமாக விளங்குகிறது. அவர்களை இந்த வேலையில் நினைவுகூருகிறேன்” என்றார்.
தொடர்ந்து பேசியவர், “சென்னை மெட்ரோவின் விரிவாக்கத்தை அர்ப்பணிக்கும் வாய்ப்பும் எனக்கு கிட்டியது. சிலநாட்கள் முன்பாக உங்கள் நல்லாசிகளோடும், அன்பு காரணமாகவும் அரசின் முன்னவர் என்றவகையில் 25 ஆண்டுகள் மகத்துவமான பயணம் நிறைவடைந்தது. முதல்வராகப் பதவியேற்றபோதில் இருந்து 25 ஆண்டுகளில் ஜனநாயகத்தின் இரண்டு சக்திகள் மீது நம்பிக்கை வலுப்படுத்தப் பட்டுள்ளது.
முதலாவது நாட்டின் குடிமக்களான நீங்கள். இரண்டாவது கூட்டாட்சி. நான் எப்போதுமே மாநிலங்களின் வளர்ச்சியிலேயே தேசத்தின் முன்னேற்றம் என்ற மந்திரத்தை மனத்தில்வைத்து பயணத்து வருகின்றேன்.
முதல்வராக பணியாற்றினேன் என்ற வகையில் மாநிலங்களின் எதிர்பார்ப்புகளை நான் நன்கு புரிந்து கொண்டேன். ஆகையால் தான் பிரதமரான பின்னர் அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன்.
முதலமைச்சராக இருந்தபோது, பலமுறை கருணாநிதி அவர்களோடும், ஜெயலலிதா அவர்களோடும் உரையாற்றும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. மேலும், நான் பிரதமரான பின்னர்கூட ஜெயலலிதா, பன்னீர்செல்வம், பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகிய தலைவர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
அரசுகள் மாறிக்கொண்டிருந்தன. ஆனால், தமிழ்நாட்டின் வளர்ச்சியும், இங்குச் சேவைப்புரியும் என்னுடைய மனஉறுதியும் எப்போது தொடர்ந்து இருந்து வருகிறது. இன்று இதே உறுதிப்பாட்டினுடனே முதலமைச்சர் விஜய்யுடனும் இணைந்து தமிழ்நாட்டின் வளர்ச்சி பயணத்தை முன்னெடுத்து சென்று கொண்டிருக்கிறோம்.
தமிழ்நாட்டின் நகர்ப்புற மேம்பாடு நமது பிரதானமாகும். நகரமயமாக்கம் என்பது சவால்அல்ல; அது ஒருவாய்ப்பு என நான் எப்போதும் கருதி வந்திருக்கிறேன். மேலும் இதில் பொதுத்துறை போக்குவரத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பு இருக்கிறது. மக்களின் போக்குவரத்து முறைகள் நன்றாக இருக்க வேண்டும்.
சிறப்பான போக்குவரத்துக்குச் சாலைகளை அகலப் படுத்துவது மட்டுமே போதுமானது அல்ல. நவீன நகரங்களில் முழுமையான கட்டமைப்பு அவசியம். அதனால் கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் மெட்ரோவை விரிவாக்கம் செய்துள்ளோம். 2014 ஆம் ஆண்டில் நாட்டின் 5 நகரங்களில் மட்டுமே மெட்ரோ இயங்கி வந்தது.
இன்று 25 நகரங்களில் மெட்ரோ செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. 2014ஆம் ஆண்டில் தேசத்தின் மெட்ரோ வலைப்பின்னலின் தூரம் சுமார் 250 கிலோ மீட்டர் மட்டுமே இருந்தது. இன்று 1,100 கிலோமீட்டருக்கும் அதிகமாக இருக்கிறது. இன்று சென்னை மெட்ரோவின் விரிவாக்கம் காரணத்தினால் இந்த வலைப்பின்னல் மேலும் பெரியதாகி வருகிறது.
சென்னையில் இருக்கும் சாமானியமக்கள், பணிபுரியும் குடும்பங்கள், மாணவர்கள், மூத்த குடிமக்கள் அனைவரின் பயணமும் சுலபமாக வேண்டும். குறைவான நேரத்தில் நிறைவாக வேண்டும் என்பதே இந்த சீரிய பணியில் நோக்கம்.
நமது மாநிலங்களைச் சக்தி படைத்தவையாக மாற்றி, பாரதத்தைச் சக்தி படைத்தவையாக மாற்றவேண்டும். ஆகையால் தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் பொருட்களின் உற்பத்தியை மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது.
தமிழ்நாட்டின் உற்பத்தித் துறையில் வேலை பார்ப்பவர்கள் அனைவர் மீதும் பாரத நாட்டினர் பெருமிதம் கொள்கிறார்கள். உள்ளூர் பொருட்களை ஊக்குவிக்கும் மத்திய அரசின் இயக்கம் தமிழ்நாட்டிற்கும் ஆதாயங்களை அளித்து வருகின்றன.
இன்று நாம் உலகத்தின் இரண்டாவது செல்பேசி தயாரிப்பாளர்களாக வளர்ந்துள்ளோம். 2014 முதல் இதுவரை நமது மின்னணு உற்பத்தி ஏற்றுமதி 11 மடங்கு அதிகரித்திருக்கிறது. பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 50 மடங்கு அதிகரித்திருக்கிறது. பொறியியல் ஏற்றுமதியும் இந்தாண்டு புதிய சாதனையைப் படைத்திருக்கிறது.
தயாரிப்பின் இந்த பயணம் காரணமாக லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. இந்த வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு இருந்து வருகிறது. இன்று அடிக்கல் நாட்டப்பட்டிருக்கும் திட்டங்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முதன்மையானதாக இருக்கும்.
நமது கடல்சார் பொருளாதார தொலைநோக்கில், மீன்பிடி மக்களின் பங்களிப்பு மிகப்பெரியது. ஆகையால்தான், பிரதமரின் மீன் வள திட்டத்துடன், தமிழ்நாட்டிற்கு ஆயிரக்கணக்கான மதிப்புள்ள திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மீன்பிடி துறைமுகங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
மீனவ சகோதரர்களுக்கு, சென்னை மீன்பிடி துறைமுகத்தை நவீனப்படுத்துவது ஆகட்டும், தமிழ்நாட்டில் கடல்பாசி பூங்கா மேம்பாடு ஆகட்டும், மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. கடந்த ஆண்டிலேயே கடல்சார் உணவு ஏற்றுமதி, அளவு மற்றும் மதிப்பு ஆகிய இரண்டிலுமே மிக அதிகளவை எட்டியது. இதனால் நமது மீனவ குடும்பங்கள் மேலும் சிறப்பாகி வருகின்றன.
இன்று என்னென்ன திட்டங்கள் தொடங்கப்பட்டிருக்கிறதோ, அவை நிகழ்காலம் மற்றும் வருங்கால கனவுகளின் பாதைகளை உருவாக்க இருக்கின்றன. தொடர்ந்து பயணித்து புதிய சிகரத்தைத் தொடும் தமிழ்நாட்டைப் படைக்க நாங்கள் விரும்புகிறோம். இதற்காக மத்திய அரசிடம்இருந்து தேவையான உதவிகள் அனைத்து கிடைக்கும். நாம் இதற்காக முழுமூச்சுடன் உங்களுடன் பணியாற்ற இருக்கிறோம்.
தமிழ்நாட்டு மக்களின் உழைப்பும், ஆற்றலும் தேசத்தின் எதிர்காலத்திற்கான திசையளிப் பதில் பெரும் பங்காற்ற வேண்டும். நாம் வளர்ச்சி அடைந்த தமிழ்நாட்டிலிருந்து, வளர்ச்சி அடைந்த பாரதம் படைக்கும் உறுதிப்பாட்டை மெய்யாக்குவோம். நன்றி வணக்கம்” என்றார்.
மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது. |
நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ... |
கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ... |