தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி மாற வேண்டும் என்றால், அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் பா.ஜ.,வுடன் சேர வேண்டும்,” என, முன்னாள் தேசிய தலைவரும், மாநில தேர்தல் பொறுப்பாளருமான பங்காரு லட்சுமணன் தெரிவித்தார்.

மதுரையில், நேற்று நடந்த 20 மாவட்ட சட்டசபை தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர் கூறியதாவது: சட்டசபை தேர்தலில் ஊழல் முக்கிய பிரச்னையாகும். ஸ்பெக்ட்ரம்

ஊழலைத் தொடர்ந்து, மீண்டும் ஒரு மெகா ஊழல் வெளியாகியுள்ளது.விலைவாசி உயர்வுக்கும், ஊழலுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. யூக பேர வணிகத்தால், அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில் விலைவாசி கட்டுப்பாட்டுக்குள் வரும் அறிகுறி இல்லை. அறுபது ஆண்டுகளில் எந்த அரசிலும் இல்லாத அளவுக்கு, தற்போதைய காங்., கூட்டணி அரசில் அதிக பட்ச ஊழல்கள் வெளியாகின்றன.தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கான சிறப்பு நிதியை பயன்படுத்தி, இலவச கலர் “டிவி’, ஒரு ரூபாய்க்கு அரிசி வழங்குகின்றனர். இதைக் கண்டித்து சேலத்தில் பேரணி நடத்தப்படும்.

சட்டசபை தேர்தலில் பா.ஜ., பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி வைக்க பா.ஜ., விரும்புகிறது. தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி மாற வேண்டும் என நினைத்தால், அ.தி.மு.க., பா.ஜ.,வுடன் கூட்டணி வைக்க வேண்டும். அ.தி.மு.க., கூட்டணியில் கம்யூ., கட்சிகள் இருந்தாலும் ஆட்சேபனை இல்லை. தி.மு.க.,வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒரு அணியில் திரள பா.ஜ., விரும்புகிறது. எந்த கட்சியும் வராத பட்சத்தில் பா.ஜ., தனித்து தேர்தலை சந்திக்கும்.இவ்வாறு பங்காருலட்சுமணன் கூறினார்

Tags:

Leave a Reply