கறுப்புப்பண ஒழிப்பிற்காக நம் பாரதப்பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்கள் எடுத்த நடவடிக்கையை, பொதுமக்கள் பாராட்டி வருகிறார்கள். அதைப் பொறுக்காத எதிர்க்கட்சியினர் போராடி வருகிறார்கள். வரும் 28ம் தேதி அன்று அவர்கள் அறிவித்திருக்கும் போராட்டம் அவசியமற்றது, அர்த்தமற்றது.  அதை முறியடிக்க நாளைய தினம் பாரதிய ஜனதா கட்சி சகோதரர்கள் கறுப்புப்பண ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திடவும், பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் எந்தத் துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கறுப்புப்பண ஒழிப்பிற்கு ஆதரவு தர வேண்டுமே தவிர அதை எதிர்த்து போராடுபவர்களுக்கு ஆதரவு தரக்கூடாது எனவும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.


இந்த நாட்டிற்கு அவசியம் என்று எடுத்த முடிவை இவர்கள் அரசியலாக்குகிறார்கள்.  இந்த காலக்கட்டத்தில் இந்த சூழ்நிலையை எப்படி இயல்பாகக் கையாள வேண்டுமென மக்களுக்கு உணர்த்துவதே ஆரோக்கியமான சூழ்நிலையாக இருக்குமே தவிர தங்கள் இயலாமைக்காக மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்து போராட்டம் நடத்துவது சரியாக இருக்காது.


தமிழக பாரதிய ஜனதா கட்சியினர், பணமில்லா பரிவர்த்தனையை சாமானிய மக்களிடம் எடுத்து செல்வதற்காகவும், கைபேசியை அதற்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை விளக்கவும் பயிற்சி முகாம்கள் நடத்துவார்கள்.   நாளைய தினம் “மக்களுக்காக மோடி மக்களுடன் மோடி” என்று மக்களின் விமரிசையான வாழ்க்கைக்காக எத்தனை விமர்சனங்களையும் தாங்கிக்கொள்வேன் என்று பணியாற்றும் மோடி அவர்களுக்கு ஆதரவு பிரச்சாரத்தை நாளைய தினம் முதற்கொண்டு பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் மேற்கொள்வார்கள். 

சிறு வணிகத்தில் அந்நிய முதலீட்டை திணிக்க இருந்தவர்கள் காங்கிரஸ்.   அவர்களுக்கு ஆதரவளித்தது திமுக.  ஆனால் அதை அன்று கடுமையாக எதிர்த்து சிறுவணிகத்தைக் காப்பாற்றியது பாரதிய ஜனதா கட்சி.  அதனால் வணிகச் சகோதரர்கள் இந்த கடையடைப்பில் கலந்து கொள்ள கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.
விவாசயிகள் இப்போராட்டத்தில் கலந்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.  சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கக்கூடாது என்று எவ்வளவு தான் கட்டுப்பாடுகள் இருந்தாலும், இன்றைய சூழலை எதிர்கொள்ள பழைய 500 ரூபாய் பயன்படுத்திக் கொள்ளலாம்,  வரி கட்டலாம், கேஸ் வாங்கிக்கொள்ளலாம், பெட்ரோல் போட்டுக்கொள்ளலாம், என்று சாமானியர்களுக்காக பலவற்றைப் பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கும் அரசை எதிர்க்கும் போராட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ள கூடாது.


டோல்கேட் கட்டணம் ரத்து செய்த அரசுக்கு எதிரான போராட்டத்தில் வாகன ஓட்டிகள் கலந்து கொள்ள கூடாது.  எதிர்க் கட்சிகளின் சுயநலப் போராட்டத்தை முறியடிக்க வேண்டியது பொதுமக்களின் கடமை.  அதேபோல் மருத்துவமனைகளில் பழைய ரூபாய் நோட்டு பயன்படுத்தலாம் என்பதோடு, இன்று எய்ம்ஸ் தமிழகத்திற்கு வராது என்ற பொய்ப்பிரச்சாரங்களுக்கு மத்தியில் நிச்சயம் தமிழக மக்களுக்கும் Aims கட்டித்தரப்படும் என்று அறிவித்திருக்கும் மத்திய அரசிற்கு ஆதரவாக மக்கள் இருக்க வேண்டும்.


இந்த சூழ்நிலையில் இருந்து வசதியாக மீள்வதற்கு பழைய 500 ரூபாய்க்கு விதைகள் வாங்கலாம்.  வாரம் அனைவருக்கும் 2000 உச்சவரம்பு இருக்கும் போது விவசாயிகள் மட்டும் 25,000 எடுத்துக்கொள்ளலாம் என்று பல சலுகைகளை விவசாயிகளுக்கு மோடி அவர்கள் அறிவித்துள்ளார்.  மேலும் நபார்டு வங்கி மூலம் பண பரிவர்த்தனைக்கு 21,000 கோடி ஒதுக்கியது மற்றும் விவசாயிகள் பாதிக்ககூடாது என்று மீத்தேன் திட்டத்தை ரத்து செய்தது, சிறுவாணி அணைக்கட்டுவதைத் தடுத்தது மட்டுமல்லாமல் விவசாயிகள் நலனில் தனிக்கவனம் செலுத்துவோம் என்று அறிவித்திருக்கும் மோடி அரசை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தில்,  கறுப்புப்பண ஒழிப்பிற்கு ஆதரவாக நம் பாரதப்பிரதமருடன் கைகோர்ப்பதே நாம் இந்த நாட்டிற்கு செய்யும் மிகப்பெரிய சேவையாகும்.  


நன்றி                     Dr தமிழிசை சௌந்தரராஜன்

பாஜக மாநில தலைவர்

Tags:

Leave a Reply