கிரிக்கெட்டும் Conflict of interestம் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சீனிவாசனின் மருமகன்மீது சூதாட்டப்புகார் இருக்கிறது. தன் மருமகனை காப்பாற்ற அவர்முயல்கிறார். இதில் Conflict of interest இருக்கிறது. எனவே உடனடியாக சீனிவாசன் பதவி விலகவேண்டும். சரத்பவார் மீண்டும் வலியுறுத்தல்.

சரியான வாதம். நியாயமானகோரிக்கை. ஆனால் சீனிவாசனை பதவி விலக்கு வதற்காக வைக்கப்படும் இந்த conflict of interest என்கிறவாதம் சீனிவாசனுக்கு மட்டும்தான் பொருந்துமா? அவரை பதவி விலக்கத் துடிக்கும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருக்கு இது பொருந்தாதா?

காரணம் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த ஆர் ஆர் பாடில்தான் மஹாராஷ்ட்ர மாநில உள்துறை அமைச்சர். அவர் நேரடிகட்டுப்பாட்டில் வரும் மஹாராஷ்டிர காவல் துறைதான் இந்த கிரிக்கெட் சூதாட்ட புகார்களை விசாரிக்கிறது. சீனிவாசன் மருமகனை கைதுசெய்திருக்கிறது.

சரத்பவாருக்கும் சீனிவாசனுக்கும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகள் தொடர்பில் ஏற்கெனவே தொடர்ச்சியான முன்விரோதம் இருக்கிறது. காரணம் இந்திய கிரிக்கெட்வாரியம் என்கிற பணம்காய்ச்சி மரம் இதுவரை மஹாராஷ்ட்ராவின் சரத்பவார் குமபலின் கட்டுப்பாட்டில்தான் இருந்துவந்தது. வங்காளிகள் சிலர் இதில் இடம்பிடித்திருந்தாலும் இந்தியகிரிக்கெட் என்பது அடிப்படையில் மஹாராஷ்ட்ர மாபியாக்களின் கட்டுப்பாட்டிலேயே தொடர்ந்து இருந்தது என்பதுவரலாறு.

அதில் சீனிவாசன் சின்னஓட்டையை போட்டு உள்ளே புகுந்து அதை முழுமையாக தன்கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார். பவார் இதை ஆரம்பத்திலிருந்தே விரும்ப வில்லை. சீனிவாசனை கழுத்தருக்க கருவறுக்க காத்திருந்தார்.

இந்த பின்னணியில், சீனிவாசனை சிக்கலில்சிக்கவைக்க தன் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள மஹாராஷ்ட்ர மாநில காவல் துறையை சரத்பவார் பயன் படுத்துகிறார். எனவே அதுவும் conflict of interest என ஒருவர் சந்தேகம் எழுப்பினால் சரத்பவாரின் பதிலென்ன?

கிரிக்கெட் சூதாட்டத்தில் சீனிவாசனுக்கு நேரடிதொடர்பு இருந்ததற்கான ஆதாரம் எதுவும் இதுவரைக்கும் கிடைக்காத நிலையிலும் அவர் தன்மருமகனை காப்பாற்ற தன்பதவியை பயன்படுத்துவார் என்று சரத்பவார் சந்தேகிக்கலாம் என்றால், சீனிவாசனுடனான தன் முன்விரோதத்தை தீர்த்துக்கொள்ள சரத்பவார் தன் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் மஹாராஷ்ட்ர மாநில காவல் துறையை பயன் படுத்துவார் என்று மற்றவர்கள் சந்தேகிக்கலாம் தானே?

Leave a Reply