நடைபெறவிருக்கின்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெறவும், 2021 சட்டமன்ற தேர்தலுக்கான அடித்தளத்தை உறுதிப்படுத்தவும் அனைத்து கட்சிகளும் முயல்கின்றன. இதில் தவறேதுமில்லை. ஆனால் 2021-ஆம் ஆண்டு ஆட்சியை பிடிப்பதற்காக இப்போதிருந்தே திராவிட முன்னேற்ற கழகத்தினர், தங்களது பழமையான, பலன்தந்த காழ்ப்புணர்ச்சி அரசியலை, 1967-ல் பயன்படுத்தியது போல மீண்டும் செயல்படுத்த முனைந்துள்ளனர்.

குடியுரிமை திருத்த சட்டம் என்பது நமது நாட்டின் எல்லைப்புற மாகாணங்களில், குறிப்பாக வடகிழக்கு பகுதிகளில், கடந்த 70 ஆண்டுகளாக தீர்க்கப்படாத பெரும் பிரச்சனையை தீர்ப்பதற்காக, பிரதமர் மோடியின் மத்திய அரசு எடுத்த மிகவும் துணிச்சலான, மிகவும் பயன் தரத்தக்க நடவடிக்கை. ஆனால் இச்சட்டத்தின் மூலம் தமிழகத்திலுள்ள இஸ்லாமியர்களை நாடு கடத்த மத்திய அரசு முயல்கிறது என்ற அச்சத்தை உருவாக்கி, அதில் குளிர்காய நினைக்கிறது திராவிட முன்னேற்ற கழகம்.

நாகர்கோவில் பாராளுமன்ற இடைத்தேர்தலில் பெருந்தலைவர் காமராஜரை எதிர்த்து வெற்றி பெற முடியாது என்று தெரிந்தவுடனே, கிட்டு என்கின்ற இளைஞனை-தி.மு.க. தொண்டனை கொலை செய்து, அப்பிணத்தை வைத்து அரசியல் நடத்தியது தி.மு.க. 1967-ல் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, தி.மு.கவிற்கு ஆதரவு நிலையை பெருக்க வேண்டி, இந்தி எதிர்ப்புப்போராட்டங்களை பிரபலப்படுத்தி, நூற்றுக்கணக்கான மக்களையும், மாணவர்களையும் போராட்டங்களில் குதிக்க வைத்து உயிரை இழக்கச்செய்ததோடு அவர்கள் குடும்பத்தினரையும் நிர்கதியாக்கி, தி.மு.க தலைமையில் ஆட்சியமைத்தது.
இதுபோன்று எப்போதெல்லாம் தங்களுக்கு அரசியல் ரீதியான தாழ்வு அல்லது பலவீனம் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் அப்பிரச்சனையிலிருந்து வெளியேறி, தங்கள் ஆட்சியைக் கொண்டு வருவதற்காக அப்பிரச்சனையை பெரிதுபடுத்த தி.மு.க கையாளும் பிணந்தின்னி அரசியலை தற்போதும் அவர்கள் கையிலெடுத்துள்ளனர்.

வரும் 23-ம் தேதி தி.மு.க நடத்தவுள்ள இந்த குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம், முஸ்லீம்கள் மீதோ, இலங்கைத் தமிழர்கள் மீதோ தி.மு.க கொண்டுள்ள பாசத்தின் வெளிப்பாடு என்று நம்பி யாரும் ஏமாற வேண்டாம்.

தி.மு.கவின் இதுபோன்ற சந்தர்ப்பவாத அரசியலால், அவர்களின் பசப்பு வார்த்தைகளை நம்பி, அன்று தெருவுக்கு வந்து போராடி உயிர் துறந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் குடும்பம் நிர்கதி ஆக்கப்பட்டதே தவிர, அவர்களின் குடும்பத்தைக் குறித்து சுமார் 60 ஆண்டுகளாக கிஞ்சித்தும் கவலைப்படவில்லை இந்த தி.மு.கவினர்.

பாட்டனார், தகப்பனார் என இரண்டு தலைமுறைகளை, ஏமாற்றிய தி.மு.கவினர், மூன்றாவது தலைமுறையான இன்றைய மாணவர் சமுதாயத்தின் தலையில் மிளகாய் அரைக்கும் ஏமாற்று வித்தையை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவர்களை நம்பி களமிறங்குவது தமிழகத்தை மீண்டும் அழிவுப்பாதைக்கு அழைத்து செல்லவதாகும்.

கலைத்துறை, வணிகத்துறை உள்ளிட்ட பல பிரிவுகளை சேர்ந்தவர்களை போராட்டத்தில் கலந்து கொள்ள தி.மு.க விடுத்துள்ள அழைப்பு, தமிழகத்தை மரணப்பாறைக்கு அழைத்துச் செல்லும் வஞ்சக அழைப்பு என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். பெரியவர்களையும், வயதானவர்களையும் வீட்டில் விட்டுவிட்டு போராட்டத்திற்கு வாருங்கள் என தி.மு.க. இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்திருப்பது, அமைதிப் பூங்காவான தமிழகத்தை கலவர பூமியாக மாற்றுவதற்காக இந்தப் போராட்டத்தில் வன்முறை வெறியாட்டத்தை நிகழ்த்தத் திட்டமிட்டிருப்பதை வெளிப்படுத்துகிறது.

ஏற்கனவே குடியுரிமை திருத்தசட்டம் குறித்து தமிழக மக்கள் உண்மை நிலையை தெரிந்து கொள்ளும் வகையில், உங்களுக்கு சரியான தகவல்களை மத்திய அரசின் சார்பில் தெளிவாக கூறியிருக்கிறார்கள். மேலும் விவரங்கள் தேவைப்பட்டால் நாங்கள் தருகிறோம். தமிழக பா.ஜ.கவை பொறுத்தவரையில், தமிழக மண்ணில் பிறப்புரிமை அடிப்படையில் வாழ்ந்து வரும் எந்தவொரு தமிழரையும் பாதிக்காத வண்ணம் உங்களுக்கு துணை நிற்பதை எங்கள் கடமையாகக் கருதுகிறோம். ஆனால் உங்களுக்கு அதற்கான தேவை இருக்காது என்பது எங்கள் நம்பிக்கை. காரணம் மத்தியில் ஆளும் பிரதமர் திரு. நரேந்திர மோடி அரசு தமிழக மக்களின் நலன் காப்பதில் உறுதியாக இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
23-ம் தேதி தி.மு.க நடத்தவிருக்கும் அரசியல் சதுரங்க சூழ்ச்சியிலிருந்து தமிழக மக்கள் மீண்டெழுந்து விட்டார்கள் என்ற செய்தியை பார்க்க, படிக்க, கேட்க உங்களை போன்றே நானும் ஆவலாக இருக்கிறேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

என்றும் தாயகப் பணியில்

பொன். இராதாகிருஷ்ணன்

Comments are closed.