மத்திய அரசின் திட்டங்கள் உங்கள் வீடு தேடி வர பா.ஜ.க. வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுங்கள் நான் தற்போது ஓசூரில் இருந்துவருகிறேன். இங்குள்ள சூழ்நிலையை பார்க்கும்போது தமிழக மக்கள் திடமான சிந்தனையோடு இருக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள இருகட்சிகள் (தி.மு.க., அ.தி.மு.க.) இடையே சிக்கி இளைஞர்கள் எதிர் காலம் பாதிக்கப்பட்டுள்ளது. அதுபற்றி நாம் சிந்திக்க வேண்டும். 
 
பொதுவாக தேர்தல் என்று சொன்னால், யார் எம்.எல்.ஏ.வாக ஜெயிப்பார்கள்?, யார் ஆட்சியமைக்கப் போகிறார்கள்? என்று கணக்கிடுவார்கள். ஆனால், இந்த தேர்தலில் தமிழகத்தின் எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது என்று எதிர்பார்க்கிறார்கள். 
 
தமிழகத்தின் எதிர்காலத்தை பற்றி நாம் முடிவு எடுக்க வேண்டியதை நினைத்து பார்க்க வேண்டும். நீங்கள் இப்போது டெல்லி அரசாங்கத்தை பார்த்திருக்கிறீர்கள். அங்கே பிரச்சினை என்றால் மாநில அரசைவிட மத்திய அரசு வேகமாக செல்கிறது. 

 

சமீபத்தில் சென்னையில் வெள்ளம் பெருக்கெடுத்தது. மழை நிற்கவில்லை. மக்கள் போராடினார்கள். நாங்கள் விமானப்படை, கப்பல் படையை அனுப்பினோம். நான் உடனே வந்தேன். உங்கள் துயரை போக்க மத்திய அரசாங்கம் ஓடோடி வந்தது. 

 
அரசாங்கம் என்பது என்ன?, எப்படி செயல்பட வேண்டும்?, அரசை நடத்துவது எப்படி? என்பதை 2 ஆண்டுகளில் மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். இலங்கையிலே உள்ள தமிழர்கள் நிலையை எண்ணிப்பார்த்தால் கவலையாக உள்ளது. ஆனால் இலங்கை அரசோடு நல்லுறவுவை ஏற்படுத்த நான் அங்குபோய் தமிழர்களின் கண்ணீரை துடைக்க நடவடிக்கை எடுத்தேன். 

 

 

கடந்த 20 ஆண்டுகளில் அங்குள்ள மக்கள் பட்ட பாட்டை சொல்லிமாளாது. 50 ஆயிரம் வீடு கட்ட திட்டமிடப்பட்டு 30 ஆயிரம் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. அங்கே 5 மீனவர்கள் சிறையில் வாடினார்கள். தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ராஜ்ஜிய உறவின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தி மரண தண்டனையில் இருந்து அவர்கள் காப்பாற்றப்பட்டனர். 
 
தமிழகத்தை சேர்ந்த பாதிரியார் பிரேமை தலீபான்கள் கடத்தி வைத்தனர். அங்கு மாட்டினால் உயிரோடு வரமுடியாத நிலை இருந்தது. இருந்தாலும், தொடர்ந்து 9 மாதங்கள் தேடி அவர் ஆப்கானிஸ்தானில் இருந்தது தெரியவந்தது. அவர் காபூலில் இருந்து விமானத்தில் ஏறும் வரை தகவல் வெளியிடாமல், அதன்பிறகு அந்த தகவலை அவரது சகோதரிக்கு நானே போனில் தெரிவித்தேன். இன்னும் 2லு மணி நேரத்தில் உங்கள் சகோதரர் இந்திய மண்ணில் கால் பதிப்பார் என்ற தகவலை சொன்னேன். 
 
மக்களுக்காக சட்டப்படி உயிரோட்டத்தோடு செயல்படும் அரசாங்கம் எப்படி இருக்க வேண்டும் என்பதைத்தான் நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன். இப்போது நீங்கள் முடிவு செய்ய வேண்டும். உங்களுக் காக வாழ்ந்து, உங்களுக்காக வீழும் அரசாங்கம் வேண்டுமா என்பதை சொல்லுங்கள். 

 

இந்த உலகம் மிகப்பெரிய பொருளாதார சரிவை நோக்கி செல்கிறது. அது சீனாவாக இருக்கலாம். வேறு நாடாக இருக்கலாம். பெரிய சறுக்கலாக சென்று கொண்டிருக்கும்போது, பொருளாதார வளர்ச்சியில் மின்னும் நாடாக இந்தியா உள்ளது. உலகமே பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து கொண்டிருக்கும்போது, வளர்ச்சியில் பாரதம் இருப்பது அதிஷ்டம் அல்ல, கடும் உழைப்பால் தான் அது முடிந்தது. தனிப்பட்ட நாடாக இந்தியா இருந்து கொண்டிருக்கிறது. 

 
இன்று உலகில் வேகமாக பாரதம் வளர்ந்து கொண்டிருக்கிறது. அடுத்த தலைமுறை அதன் பயனை அடையப்போகிறது. அதாவது, இதற்கு முன்பு டெல்லியில் இருந்த அரசாங்கம் புதிய திட்டம் தொடங்க வேண்டும் என்றால், ஏழை குடிசை வரை வந்து சேராது. அந்த மாதிரியான கலாசாரத்தை நாம் முடிவுக்கு கொண்டுவந்தோம். 

 

 

நாம் புதிய திட்டம் கொண்டுவந்தால், திட்டம் தீட்டி மணிக்கணக்கில் கண்காணித்தோம். அதனால் தான் சமுதாயத்தில் கடைசியில் இருப்பவர் வரை அதை கொண்டு செல்ல முடிந்தது. நாம் தூய்மை இந்தியா திட்டத்தை அறிவித்தோம். எதற்காக, 12 வயது பெண் குழந்தைகள் பள்ளி செல்வதை நிறுத்தினார்கள். ஏன்?. பள்ளிகளில் கழிவறை இல்லை. ரூ.125 கோடியில் தற்போது எல்லா பள்ளிகளிலும் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன என்பதை கர்வத்தோடு என்னால் சொல்ல முடியும். 
 
அதைப்போல, வங்கிகள் பணக்காரர்கள் கைப்பிடியில் இருந்தது. நாட்டில் உள்ள 40 சதவீத ஏழைகள் வங்கிகள் கதவைக்கூட பார்க்கவில்லை. இந்த நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகிறது. இன்னும் இந்த நிலை தொடரக்கூடாது என நான் பிரதமராக பதவியேற்றபோது நினைத்தேன். அதனால், ஏழை-எளிய மக்களுக்கு வங்கி கணக்கு தொடங்க நடவடிக்கை எடுத்தோம். இப்போது, வங்கி கணக்கு இல்லாத மக்கள் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. 

 

 

பெரிய தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் மக்கள் மன்றத்தில் வந்து யாராவது கணக்கு சமர்பித்தது உண்டா?. ஆட்சி அமைத்து 2 ஆண்டுகளில் ஒவ்வொரு மேடையிலும் நான் செலவழித்த ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு காட்டுகிறேன். 
 
தமிழக மக்களாகிய நீங்கள் மோசமான அரசாங்கத்தை பார்த்து வருகிறீர்கள். ஒரு நல்ல அரசாங்கம் எப்படி இருக்கும் என்பதை அனுபவிக்காமல் இருக்கிறீர்கள். நல்ல அரசாங் கத்திற்கும், கெட்ட அரசாங்கத்திற்கும் வித்தியாசம் என்ன என்பதை பா.ஜ.க. மத்தியில் வந்தபிறகு தான் எடைபோட்டு மக்கள் பார்க்க தொடங்கியிருக்கிறார்கள். 

 

 

முந்தைய அரசாங்கம் சட்டங்கள் இயற்றியது. ஆனால், அது மக்கள் கையை கட்டிப்போடும் சட்டங்களாக இருந்தது. ஆனால், நாங்கள் 1500 சட்டங்களை நீக்கி மக்கள் கையில் இருந்த கட்டை அகற்றியுள்ளோம். முந்தைய அரசாங்கம் நிலக்கரி சுரங்கத்தில் இருந்து எவ்வளவு காசு சுரண்டலாம் என்று இருந்தது. ஆனால், இந்த அரசாங்கம் அந்த நிலக்கரியில் இருந்து எவ்வளவு எரிசக்தியை கொண்டு வந்து மக்களுக்கு எந்த வகையில் உதவலாம் என்று சிந்தித்தது. 
 
முந்தைய அரசாங்கம் மந்திரவாதிகளை மிஞ்சும் அரசாங்கம். 2ஜி, 3ஜி என்று காற்றில் இருந்து பணத்தை கொள்ளை அடித்தனர். ஆனால், இப்போது அதன் மூலம் அரசுக்கு வருவாய் கொண்டுவரப்பட்டுள்ளது. நிலக்கரி சுரங்கங்கள் ஊழலுக்கு பயன்பட்டது. மக்களுக்கு பயன்படவில்லை. 

 

நான் உங்களிடம் ஒரு கேள்விகேட்க விரும்புகிறேன். உங்களில் யாருக்காவது இத்தாலியில் உறவினர்கள் இருக்கிறார் களா?. இங்குள்ளவர்களில் யாருக்காவது அங்கு உறவினர்கள் இருக்கிறார்களா?. நமக்கு இத்தாலியை பற்றியேதெரியாது. 

 
ஆனால், இத்தாலியில் உள்ள நீதிமன்றம், காங்கிரஸ் அரசாங்கம் ஹெலிகாப்டரில் ஊழல் செய்திருக்கிறது என்று குற்றம்சாட்டியது. இதை நாம் சொல்லவில்லை. ஆனால், அவர்கள் நம்மீது கோபப்படுகிறார்கள். அதாவது, ஊழலுக்கு எதிராக மத்திய அரசாங்கம் ஒவ்வொன்றாக நடவடிக்கை எடுத்து வருகிறது. அது, அரசு கஜானாவை கொள்ளையடித் தவர்களுக்கு வலிக்கிறது. இப்போது அவர்களுக்கு வருமானம் வரவில்லை. எனக்கு எதிராக யாராவது சத்தம்போட்டால், ‘ஸ்குருவால் டைட்’ செய்து கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம். 

 

 

நம்முடைய பிரச்சினைகளுக்கு, கஷ்டங்களுக்கு ஒரேமருந்து முன்னேற்றம். முன்னேற்றம் வந்தால், பிரச்சினைகள் தீரும், கஷ்டங்கள் தீரும். விளையாட்டில் முன்னேற்றம் இல்லாமல் வெற்றியடையாத சூழ்நிலையில், அந்த துறையிலும் நாம் எடுத்தநடவடிக்கையால் முன்னேற்றம் ஏற்பட தொடங்கியுள்ளது. 65 சதவீத மக்கள் 35 வயதுக்கு கீழ் உள்ளவர்கள். இவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். அந்நிய முதலீட்டை ஈர்ப்பதில் நாம் சீனாவை விட முன்னேறிக்கொண்டிருக்கிறோம். அப்போது தான் இவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க முடியும். எப்படி இளைஞர் முன்னேற்றத்திற்காக கவலைப்படுகிறோமோ, அதேபோல் வயதானவர்கள் பற்றியும் கவலைப்படுகிறோம். மலிவான விலையில் அவர்களுக்கு மருந்து கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், முத்ரா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க கொண்டுவரப்பட்டுள்ளது. 

 

நாம் செய்த சாதனைகள் குறித்து ஒரு வாரம் உரையாற்ற முடியும். இந்த திட்டங்கள் தமிழக மக்களின் வீட்டிற்கு செல்லவேண்டும். பாஜக. வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்யுங்கள். அப்போது தான், மத்திய அரசாங்கத்தின் திட்டங்களை உங்கள் வீடுகளுக்கு கொண்டுவர முடியும். இந்த 2 கட்சிகளில்  இருந்து தமிழகத்திற்கு முக்திதாருங்கள். பாஜக.வுக்கு ஆதரவுதாருங்கள்.

 
‘இதனை இவனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்’
 
என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி நிறைவு செய்கிறேன். நன்றி வணக்கம்.
 
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசியது.

Leave a Reply