த்தியப் பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பியாக தேர்வு செய்யப்பட இருக்கிறார் தமிழக பா.ஜ.கவின் மூத்த தலைவரான இல.கணேசன். ' காலதாமதமாக வழங்கப்பட்ட பதவி என்றாலும், ஆர்.எஸ்.எஸ்ஸின் முகமாக பட்டிதொட்டியெல்லாம் உழைத்தவருக்கு கட்சி அங்கீகாரம் கொடுத்திருக்கிறது' என்கின்றனர் தமிழக பா.ஜ.கவினர். 

ஆர்.எஸ்.எஸ் முன்னாள் பிரசாரகர், பா.ஜ.க மாநிலத் தலைவர், பொதுச் செயலர், தேசியச் செயலர், அகில இந்திய செயற்குழு உறுப்பினர் என, தமிழக பா.ஜ.க மூத்த தலைவர் இல.கணேசன் வகிக்காத பதவிகளே இல்லை. சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் கட்சிக்குப் போதிய செல்வாக்கு உள்ள கூட்டணி அமையவில்லை என்றாலும், மனம் கலங்காமல் வேட்பாளர்களின் வெற்றிக்காக வீதிகளில் வலம் வருவார். 

தமிழக பா.ஜ.க மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் பேசினோம். " 1970-ம் ஆண்டில் ஆர்.எஸ்.எஸ் பிரசாரகராக பணியைத் தொடங்கியவர், இன்றுவரையில் ஓய்வில்லாமல் உழைப்பவர். 72-ம் ஆண்டில் அவரை சந்தித்தேன். முதல் சந்திப்பு எப்படி மகிழ்ச்சியாக அமைந்ததோ, அது இன்று வரையில் தொடர்கிறது. இன்றைக்குப் பட்டி தொட்டியெங்கும் தாமரை என்ற சின்னம் தெரிந்திருக்கிறது என்றால், அது எல்.ஜி வகுத்துக் கொடுத்த பாதைதான். மாநில அரசின் வருவாய்த் துறையில் வருவாய் ஆய்வாளராக பணியைத் தொடங்கியவர், ஆர்.எஸ்.எஸ் மீது இருந்த பற்றின் காரணமாக, ஆறே ஆண்டுகளில் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

எமர்ஜென்சி காலத்தில் அவர் எழுதிய பல பாடல்கள், ஆர்.எஸ்.எஸ் முகாம்களில் எதிரொலித்தன. அவர் ஒரு சிறந்த பாடகர் மட்டுமன்றி, அற்புதமாக கவிதை எழுதக் கூடியவர். 91-ம் ஆண்டில் இருந்து 2000-ம் ஆண்டு வரையில் தமிழக பா.ஜ.கவின் பொதுச் செயலாளராக பதவி வகித்தார். ஒருமுறை மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். தொகுதி வாரியாக கட்சிக்காக உழைக்கும் தொண்டர்களை தேடித் தேடி பதவி தருவதில், எல்.ஜிக்கு நிகர் அவர்தான். அவருக்கான அங்கீகாரம் என்பது தமிழக பா.ஜ.க தொண்டர்களுக்குக் கொடுக்கப்படும் கூடுதல் உற்சாகம்" என நெகிழ்ந்தார். 

" தேர்தல் அரசியலில் 2009 மற்றும் 2014 எம்.பி தேர்தல்களில் போட்டியிட்டார். இரண்டு முறையும் தோல்வியைத் தழுவினார். கடந்தமுறை பா.ஜ.க ஆட்சியில் இருந்தபோதும், ராஜ்யசபா எம்.பியை எதிர்பார்த்தார். அதற்கான வாய்ப்பு அமையவில்லை. அரசியலமைப்பு சார்ந்த பதவிகளுக்கு அவர் பெயர் பரிந்துரைக்கப்படும்போதும், ' ராஜ்யசபாவைத் தவிர வேறு எந்தப் பதவியும் வேண்டாம்' என உறுதியாகக் கூறிவிட்டார். 2014 தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ.க ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே, ' அவருக்குப் பதவி வழங்க வேண்டும்' என பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தி வந்தார். மேகாலயா கவர்னராக நியமிக்கப்பட்ட சண்முகநாதனைவிடவும், கட்சியின் சீனியராக இருக்கிறார் எல்.ஜி. அவருடைய நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மத்திய அரசில் 75 வயதைக் கடந்தவர்களுக்கு அமைச்சர் பதவி இல்லை என்பதில் பிரதமர் மோடி உறுதியாக இருக்கிறார். தற்போது இல.கணேசனுக்கு 72 வயதாகிறது. எனவே, அவர் அமைச்சர் பதவியில் அமர்வாரா? அல்லது வேறு ஏதேனும் முக்கியப் பதவிகள் வழங்கப்படுமா என்பதை அகில இந்தியத் தலைமைதான் தீர்மானிக்க வேண்டும்" என்கிறார் பா.ஜ.க முன்னணி நிர்வாகி ஒருவர். 

கட்சித் தலைமையிடம் வைத்த வேண்டுகோள் நிறைவேற்றப்பட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார் இல.கணேசன். இதுகுறித்துப் பேசியவர், ' நீண்ட காலம் உழைப்பவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது. மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றவுடன் மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்வேன்' என நெகிழ்ந்தார்.

நன்றி விகடன்

Leave a Reply