நடப்பு அரசியல் சூழ்நிலை நெருக்கடி நிலையை விடக் கொடுமையானது இந்தியா விடுதலையடைந்து அறுபத்தைந்து வருடங்கள் முடிந்துவிட்டன. 1975-77 காலத்தில் நிலவிய நெருக்கடி நிலையின்போது தான் மக்களின் விடுதலையுணர்வும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் சுதந்திரமும் நசுக்கப்பட்டன என்று நான் எப்போதும் கருதிவருகிறேன்.

ஆனால் அரசியல் கார்ட்டூனிஸ்டும் ஊழல் எதிர்ப்புப் போராளியுமான அசீம் திரிவேதி கைது செய்யப்பட்டதைப் பார்க்கும்போது நெருக்கடியைவிடத் தற்போதைய அரசியல் சூழ்நிலை மோசமாக இருக்கிறதோ என்று கவலையடைகிறேன். ராஜ துரோகக் குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். அன்னா இயக்கத்தின் போது வெளியான சில கார்ட்டூன்களை குற்றமாக அரசு நினைத்தது தான் திரிவேதி செய்த பாவம். நவம்பர் 2011இல் அவர் வரைந்து பத்திரிகையில் வெளியான கார்ட்டூன்களுக்காக மும்பையில் கடந்த வாரம் திரிவேதி கைது செய்யப்பட்டார். மும்பையில் உள்ள ஒரு என்.ஜி.ஓ.வின் சட்ட ஆலோசகர் கொடுத்த ஒரு புகாரை அடிப்படையாகக் கொண்டு இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

''எனக்கு அரசியல் சட்டத்தின் மீது முழு நம்பிக்கையுள்ளது. ராஜ துரோக வழக்கு திரும்பப்பெறும் வரையில் நான் வெளியே வரப் போவதில்லை'' என்று திரிவேதி கூறிவிட்டார்.

நெருக்கடி நிலை நேரத்தில் மூத்த கார்ட்டூனிஸ்ட் அபு ஆப்ரஹாம் வரைந்த இரண்டு கார்ட்டூன்கள் இந்தச் சமயத்தில் நினைவுக்கு வருகின்றன. ஒரு கார்ட்டூன், இந்திரா காந்தி நீட்டிய  ஜனாதிபதி ஃபக்ருதீன் அலி அஹமது கையெழுத்திட்ட நெருக்கடியை அறிவிக்கும் கோப்புகளில் ஜனாதிபதி ஃபக்ருதீன் அலி அஹமது கையெழுத்திட்ட சில தினங்களில் வெளியானது. மற்றொரு கார்ட்டூனோ, அரசின் இருபது அம்சத் திட்டத்தை ஒரு சாமானிய மனிதன் கேலி செய்யும் விதமாக இருந்தது.

தற்போதைய ஆட்சியாளர்கள் 1975-77 காலகட்டத்தில் இருந்திருந்தால் அபு ஆப்ரஹாமும் அசீன் திரிவேதியைப் போன்றே சிறையில் அடைக்கப்பட்டிருப்பார் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. நெருக்கடி நிலையின்போது அரசு வலிமை பொருந்தியதாக இருந்தது. அந்த அரசிடம் அளவுக்கதிகமான சக்தியும் இருந்தது. ஆனால் தற்போதைய ஆட்சியாளர்களின் கொடுமையான மனநிலையோ தோல்வியாலும் நம்பிக்கையற்ற தன்மையாலும் பிறந்துள்ளது.

நெருக்கடி நிலையின்போது நான் எனது தண்டனைக் காலத்தின் பெரும்பான்மையான பகுதியை பெங்களூரு மத்தியச் சிறையில் கழித்தேன். ஜூலை 17, 1975 முதல் செப்டம்பர் 22, 1977 வரை ரோடக்கில் இருந்தேன். பெங்களூருவில் கைது செய்யப்பட்ட 1975 ஜுன் 26ஆம் தேதி முதல் பெங்களூரு சிறையிலிருந்து வெளியே வந்த 1977 ஜனவரி 18ஆம் தேதி  வரை மிசா கைதியாக சிறையில் கேள்விப்பட்டவற்றை தினசரி டைரியில் எழுதி வைத்திருக்கிறேன்.

1975ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று ரோட்டக்கில், நான் கீழ்கண்டவாறு எழுதியிருந்தேன்:

''இன்று இந்திய பத்திரிக்கைத் துறையின் துக்க தினம். நாட்டின் ஒரே கார்ட்டூன் வார இதழான 'தி சங்கர்ஸ் வீக்லி'யை மூடுவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. சங்கரும் அவரது பத்திரிக்கையும் எந்த கருத்தியலைச் சேர்ந்தவரோ அதே கருத்தியல் பின்னணியில்தான் இந்திரா காந்தியும் இருக்கிறார். ஆனால் தற்போதைய சூழலில் மூச்சுத் திணறி அவரது பத்திரிக்கையை மூட விரும்புகிறார். ஆகஸ்ட் 31ஆம் தேதியிட்ட அவரது தலையங்கம், 'பிரிவுபச்சாரம்' (Farewell) என்று தலைப்பிடப்பட்டுள்ளது. நெருக்கடி என்ற வார்த்தைகூடத் தலையங்கத்தில் இல்லை. ஆனால் நெருக்கடி நிலை குறித்து அந்தத் தலையங்கம் முன்வைத்ததைக் காட்டிலும் கடுமையான விமர்சனத்தைக் காண்பது அரிது. பல விஷயங்களிடையே சங்கர் எழுதுகிறார்:

"எங்களுடைய முதல் தலையங்கத்தில் வாசகர்களை எப்போதும், எந்த நேரத்திலும் சிரிக்க வைப்பதே எங்களது வேலை என்று குறிப்பிட்டிருந்தோம். இந்த உலகைப் பார்த்து, ஆணவம் கொண்ட அரசியல்வாதிகளைப் பார்த்து, போலித்தனங்களைப் பார்த்து, நம்மையே பார்த்து சிரிக்கவைப்பதே எங்கள் வேலை என்று சொன்னோம். மக்கள் நகைச்சுவையுணர்வு நிரம்பியவர்கள். எந்த மக்களிடம் சகிப்புத்தன்மையும் கருணையும் இருக்கின்றனவோ அவர்களிடம் நாகரிகமான நடத்தையும் நெறிமுறைகளும் உள்ளன..

சர்வாதிகாரம் மக்களைச் சிரிக்க விடுவதில்லை. சர்வாதிகாரியின் கீழ் மக்கள் சிரிக்க முடியாது. ஹிட்லரின் ஆட்சியில் நல்ல கார்ட்டூனோ, நல்ல நகைச்சுவையோ ஒன்றுகூட இல்லை.

இன்று உலகம், குறிப்பாக இந்தியா, இறுக்கமானதாக மாறிவிட்டதுதான் சோகம். நகைச்சுவை என்பது மருந்து போன்றது. மொழி வெறும் நடைமுறை சார்ந்த பயன்பாடாக மாறிவிட்டது. ஒவ்வொரு துறையும் தனக்கான சொற்களை உருவாக்கிகொள்கிறது. பொருளியல் சிந்தனையில்லாதவர்கள் மத்தியில் ஒரு பொருளியலாளர் அந்நியர். பழக்கமற்ற அந்தச் சூழலில் அவர் தடுமாறுவார். தன்னைப் பற்றிய குழப்பம் அவருக்கு ஏற்படும். அங்கே புழங்கும் மொழி அவருக்கு அந்நியமானதாக இருக்கும். வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், பத்திரிக்கையாளர்கள் அனைவருக்கும் இது பொருந்தும்.

தற்போதைய சூழலில் அசௌகரியமாக உணரும் பத்திரிக்கையாளர் சங்கர் மட்டுமல்ல. துர்கா தாஸால் துவங்கப்பட்ட 'தி ஸ்டேட்ஸ்' என்ற வார இதழும் மூடப்பட்டுள்ளது. 1975-76 ஆம் ஆண்டின் செய்தித்தாள் பதிவு அலுவலகத்தின் ஆண்டறிக்கை இந்தச் சோகக் கதையைப் பதிவுசெய்திருக்கும். ஹிட்லர் ஜெர்மனியின் ஆட்சியைக் கைப்பற்றியபோது மொத்தம் 4,700 பத்திரிக்கைகள் இருந்தன. நாஜிகளின் இருட்டாட்சி முடிவுக்கு வரும்போது அவை ஆயிரத்துக்கும் குறைவாக இருந்தன. நடப்பு நிலை தொடர்ந்தால் இங்கும் அதேதான் நடக்கும்."

நன்றி ; எல்.கே.அத்வானி

Leave a Reply