மராட்டிய மாநிலத்தின் மதோரன் மலைகளுக்கு இடையே உள்ள ஓர் அழகிய சிறு கிராமம் வேணு. இந்தச் சிற்றூரில் மாதவராவ் நாராயணன் கங்காபாய் தம்பதிகளுக்கு மகனாய் 1824ஆம் ஆண்டு பிறந்தவர்தான் நானாசாகிப்.

இந்தக் காலகட்டத்தில் புனாவை ஆட்சி செய்த பாஜிராவ் பேஷ்வா ஆங்கிலேயரிடம் தனது ஆட்சி உரிமையைப் பறி கொடுத்து விட்டு,

ஆண்டிற்கு எட்டு லட்ச ரூபாய் கருணைத் தொகையைப் பெற்றுக் கொண்டு, புனாவில் இருந்து வெளியேறி, கான்பூர் அருகில் உள்ள பித்தூருக்கு வந்து சேர்ந்தார். அப்போது பாஜிராவ் பேஷ்வாவுடன் இருக்க உறவினர்கள் பலர் வந்து சேர்ந்தனர். அப்படி வந்து சேர்ந்தவர்களில் ஒரு குடும்பம் தான் நானா சாகிப் குடும்பமும்.

பதவியை இழந்த பேஷ்வாவிற்குப் பிள்ளைப் பாசம் ஏற்பட்ட காரணத்தால் 1827இல் விழா நடத்தி நானாசாகிப்பைத் தனது சுவீகாரப் பிள்ளையாகத் தத்து எடுத்துக் கொண்டார். ராஜ்யம் என்று எதுவும் இல்லாவிட்டாலும் பேஷ்வா பட்டம் கிடைத்ததால் நானாசாகிப் பேஷ்வா என அப்போதே அழைக்கப்பட்டார்.

அரச குடும்பத்தைச் சார்ந்தவர் என்பதால் சிறுவயதிலேயே வாட்பயிற்சி, குதிரையேற்றம்,
யானையேற்றம் போன்றவற்றில் சிறந்த தேர்ச்சியுடன் விளங்கினான். இந்தச் சமயத்தில்தான் காசியில் இருந்து குடிபெயர்ந்து பித்தூருக்கு வந்து சேர்ந்த மனு என்கிற (ஜான்சிராணி) லட்சுமிபாயின் நட்பும் கிடைத்தது. இவர்கள் அனைவரும் இணைந்தே யுத்தப் பயிற்சி எடுத்துக் கொண்டனர்.

நானாசாகிப் 1857 மே 22இல் பித்தூரிலிருந்து கான்பூர் வந்து சேர்ந்தார். அப்போது நானாசாகிப்பிடம் 4000 போர்வீரர்கள் இருந்தார்கள். லக்னோ, அம்பாலா ஆகிய நகரங்களுக்கு நானாசாகிப் பயணம் செய்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக மிக ரகசியமாக இந்திய சிப்பாய்களையும் பிரமுகர்களையும் புரட்சிப் போராட்டத்தில் சேர்த்துக்
கொண்டார்.

சென்ற இடங்களில் எல்லாம் நானாசாகிப்பிற்கு உதவியும், ஆதரவும் கிடைத்தது.
1857 ஜூன் 27இல் கான்பூர் கோட்டையின் மீது தாக்குதல் நடத்தி கோட்டையைக்
கைப்பற்றினார். கோட்டை மீது நடத்தப்பட்ட சிப்பாய்களின் புரட்சிப் போரால் ஆயிரக்கணக்கான வெள்ளையர்கள் கொல்லப்பட்டனர். போரின் இறுதியில் நான்கு ஆங்கிலேயர்களும், 125 ஆங்கிலப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமே உயிர்
தப்பினர்.

ஆறு நாட்கள் நடைபெற்ற கடுமையான போரின் இறுதியில் தோல்வியை ஒப்புக் கொண்டு ஜெனரல் வீலர் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டார். சமாதான உடன்படிக்கையை நானாசாகிப் ஏற்றுக் கொண்டார். உடன்படிக்கையை ஆங்கில மொழியில் தயாரிக்கத் தொடங்கியபோது, புரட்சித் தளபதிகளில் ஒருவரான அனிமுல்லாகான், "உடன்படிக்கை எங்கள் நாட்டு மொழியில் எழுதப்படவேண்டும்; அந்நியமொழி ஆங்கிலத்தில் இருக்கக்கூடாது' என எதிர்ப்புத் தெரிவித்தார்.

இதை ஏற்ற ஆங்கிலேயன் இந்தி மொழியில் எழுதி உடன்படிக்கை செய்து கொண்டான். கான்பூர் பகுதியில் கலவரம் நடந்தபோது இந்திய சிப்பாய்கள் நான்கு ஆங்கிலேயப் பெண்களைக் கடத்திச் சென்று விட்டனர். கடத்திச் செல்லப்பட்ட வெள்ளைக்காரிகளிடம் ஆட்டுக்கல்லில் மாவு அரைத்தல் உட்பட பல வேலைகளை வாங்கினர். இதை அறிந்ததும் நானாசாகிப் கொதிப்படைந்தார். அந்தப் பெண்களை விடுவித்து பாதுகாப்பாக உரியவர்களிடம் ஒப்படைக்கச் செய்தார்.

கான்பூர் நகரவாசிகள், பெரிய குடும்பத்துப் பெண்கள் என பலரும் நானாசாகிப்பிற்கு உதவியாக இருந்து வந்தனர். போராளிகளுக்கு உணவு கொடுப்பது, வெடிமருந்து, தோட்டாக்கள், ஆயுதங்கள் சேகரித்துக் கொடுப்பது உட்பட பல வேலைகளில் பெண்கள் உதவி செய்தார்கள்.

நானாசாகிப் தனது ஆட்சி அதிகாரத்திற்கு உட்பட்ட பிரதேசத்தில் சொத்து உரிமை சார்ந்த சிவில் நீதிமன்றங்களை அமைத்திருந்தார். குற்றவியல் நீதிமன்றமும் உண்டு. குற்றம் செய்தவர்களுக்குக் கடும் தண்டனை அளிக்கப்பட்டது. முதல் இந்தியச் சுதந்திரப் போரின் தளபதிகளில் ஒருவரான நானாசாகிப்பின் தீவிர முயற்சியால் ஆங்கிலேயருக்கு எதிரான புரட்சி மீரட், கான்பூரில் இருந்து துவங்கி லக்னோ வரை பரவி விட்டது.

1857 மே 14இல் புரட்சியாளர்கள் தில்லி மாநகரை ஆங்கிலேயரிடமிருந்து விடுவித்தனர். மே 30ஆம் நாள் இரவு லக்னோ ராணுவ முகாம் மீது புரட்சியாளர்கள் பீரங்கித் தாக்குதலைத் துவக்கினார்கள். ஆங்கிலேயருக்கு எதிராக புரட்சி தீவிரம் அடைந்தது. அலிகார், மைன்புரி, இடாவா, பரேலி, முராதாபாத் உட்பட சுமார் 31 ஊர்கள் ஆங்கிலேயர் களிடமிருந்து விடுவிக்கப்பட்டன.

இதற்கெல்லாம் காரணகர்த்தாவாக விளங்கிய நானாசாகிப் மீது கும்பினி அரசு ஆத்திரம்
கொண்டிருந்தது. இதற்கு முன்பே கிழக்கிந்திய கும்பினி அரசு, புரட்சித் தளபதி நானா சாகிப்பைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் இனாம் அளிப்பதாக பிரகடனப்படுத்தி இருந்தது. சுவரொட்டிகளைப் பட்டி தொட்டியெங்கும் ஒட்ட வைத்தது.

"நானாசாகிப்" கூடவே ஒரு காது அறுந்த வேலைக்காரன் இருப்பான் என்றும் அறிவித்திருந்தது. அதுமட்டுமல்ல நானாசாகிப்பின் மனைவியின் அடையாளத்தையும் விளம்பரப்படுத்தி அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

முதல் இந்தியச் சுதந்திரப் போரானது நன்கு ஒருங்கிணைக்க படாததாலும், ஒருங்கிணைந்த தேசியத் தலைமை இல்லாததாலும் தோல்வியை தழுவ வேண்டியதாயிற்று. ஆங்கிலேயர்கள் இழந்திருந்த பல பகுதிகளை மீண்டும் தன் வசப்படுத்திக் கொண்டனர். கான்பூர் கோட்டையும் ஆங்கிலேயர் வசமானது.

நானாசாகிப்பிற்கும் கோட்டை, அரசு என்று எதுவும் இல்லாமல் போனது. இதேபோல் ஜான்சி போருக்குப் பின் லட்சுமிபாய்க்கும் கோட்டையோ, அரசோ இல்லாத நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து குவாலியர் மீது படையெடுத்து குவாலியரைக் கைப்பற்றி
நானாசாகிப் மன்னராக அறிவிக்கப்பட்டார்.

இதுவும் சிலகாலம் தான். ஆங்கிலேயப் படையெடுப்பின் காரணமாக குவாலியரும் வீழ்ந்தது. லட்சுமிபாய் வீரமரணம் அடைய நானாசாகிப் ஆங்கிலேயரிடமிருந்து தப்பி வெளியேறினார். வாழ்நாளின் கடைசிவரை நானாசாகிப் ஆங்கிலேயர்களைத் தொடர்ந்து எதிர்த்துக் கொண்டிருந்தார். ஆனால் கடைசி வரை ஆங்கிலேயர்களால் நானாசாகிப்பைப் பிடிக்க முடியவில்லை.

நானாசாகிப் போன்ற லட்சக்கணக்கான போராளிகளின் உழைப்பும், தியாகமும் அஸ்திவாரமாக அமைந்ததன் காரணத்தால்தான் 1947இல் நாடு விடுதலை அடைந்தது

நன்றி ஈரோடு சண்முகசுந்தரம்

நானா சாகிப், சுதந்திரப் போராட்ட வீரர்கள், சுதந்திரப் போராட்ட வீரர், சுதந்திர, போராட்ட, வீரர், நானாசாகிப்

Leave a Reply