பாஜகவின் தேசிய பொதுச் செயலாளராகவும், தமிழக பொறுப்பாளராகவும் இயங்கி வரும் முரளிதர ராவ் 'தி இந்து' (ஆங்கிலம்) நாளிதழுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்காது என திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

மேலும், அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டின் மூலம் ஊழலுக்கு எதிரான எங்களது குரலை நாங்கள் உறுதிபடுத்துகிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

பேட்டியின் முக்கிய அம்சங்கள்:

2014-ல் தமிழகத்தில் வண்ணமயமான ஒரு கூட்டணியை உருவாக்கினீர்கள். ஆனால் இப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்திருக்க அவர்கள் யாருமே விரும்பவில்லை. ஏன் இந்த மாற்றம்?

முரளிதர ராவ்: மதிமுக எங்களை விட்டு பிரிந்து சென்றது. ஆனால், அது எங்கே சென்றுள்ளது. இருக்குமிடமே தெரியாமல் இருக்கும் இடதுசாரிகளுடன் தங்களை இணைத்துக் கொண்டுள்ளது. பாமக, தேமுதிக கட்சிகள் தங்களது நிலைப்பாட்டை இன்னும் இறுதி செய்யவில்லை. கூட்டணிகள் அமைவதற்கு இன்னும் காலம் இருக்கிறது.

பாமக, தேமுதிக கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து முற்றிலுமாக விலகிவிடவில்லை. நாங்களும் அவர்களுடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து வருகிறோம். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தூணாக பாஜக விளங்குகிறது. தோழமை கட்சிகள்தான் பாஜகவால் அதிக நன்மையடைந் திருக்கின்றன. எனவே தமிழகத்தில் பாஜக நிச்சயமாக நல்லதொரு கூட்டணியை அமைக்கும்.

ஆனால், அன்புமணியை முதல்வர் வேட்பாளராக ஆதரிப்பவர்களுடனேயே கூட்டணி என பாமக கூறியுள்ளதே..

முரளிதர ராவ்: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. அனைத்து தரப்பு கருத்து களையும் ஆராய்ந்து சரியான நேரத்தில் நல்ல முடிவு எட்டப்படும். பாஜக தலைமையகம் கூட்டணி குறித்து இறுதிமுடிவு எடுக்கும்.

பாஜகவுக்கு என குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு வாக்கு வங்கி இல்லாததால், வரும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவால் பெரிய பயன் இருக்காது எனக் கூறப்படுகிறதே..

முரளிதர ராவ்: மக்களவை தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் மோடியின் தாக்கம் மக்கள் மத்தியில் மேலும் அதிகரித்திருக்கிறது. இதை நான் எதன் அடிப்படையில் கூறுகிறேன் என்றால், தமிழகத்தின் பல்வேறு சமூகத்தினரும் பாஜகவுடன் இணக்கம் காட்டுகின்றனர்.

இன்றைய நிலையில் தமிழகத்தில் பாஜகவின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டியுள்ளது. மக்களவை தேர்தலுக்குப் பின்னர் தமிழகத்தில் பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் இன்னும் பேசவில்லை. பிஹார் தேர்தலுக்குப் பின்னர், அவர் தமிழகத்தில் பிரச்சாரம் செய்வார். அப்போது பெரிய மாற்றம் ஏற்படுவதை நீங்களே பார்ப்பீர்கள்.

திமுக நாங்கள் நல்லாட்சி வழங்குவோம் எனக் கூறுகிறதே..

முரளிதர் ராவ்: திமுக மக்கள் மத்தியில் நம்பிக்கையை இழந்துவிட்டது. எனவே வரும் தேர்தல் திமுகவுக்கு சாதகமாக அமையாது. திமுக ஊழலை ஒழிப்போம், நல்லாட்சி வழங்குவோம் என பிரச்சாரம் செய்கிறது. மு.க.ஸ்டாலின் மாநிலம் முழுவதும் நடைப்பயணம் மேற்கொள்கிறார்.

ஊழலைப் பற்றி மக்களிடம் பேசுகிறார், ஆனால் அவரது கட்சியிலேயே ஊழல் தலைவர்கள் உள்ளனரே? இதனால் அவரது பிரச்சாரப் பயணம் தே.ஜ.கூட்டணிக்கே சாதகமாக அமையும். இதற்காக நான் அவருக்கு நன்றி கூறுகிறேன். அவர் மீது மக்களுக்கு நம்பிக்கை வர வேண்டும் என்றால் கட்சியிலிருந்து ஊழல்வாதிகளை நீக்க வேண்டும். அவரால் அப்படி செய்ய முடியுமா? கனிமொழியை கட்சியில் இருந்து அவரால் நீக்க முடியுமா?

பாஜக அதிமுகவுடன் மறைமுக உடன்படிக்கையில் இருப்பதுபோல் தோன்றுகிறதே. மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக பாஜகவை ஆதரித்தது. ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தபோது அருண் ஜேட்லி ஜெயலலிதாவை சந்தித்தார். இவற்றைப் பற்றி உங்கள் கருத்து?

முரளிதர ராவ்: அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதில்லை என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டின் மூலம் ஊழலுக்கு எதிரான எங்களது குரலை நாங்கள் மேலும் உறுதிபடுத்துகிறோம்.

வெற்றிடத்தில் அரசு இயங்க முடியாது. தமிழகத்தில் ஆளும் கட்சியை இயக்குவது அதிமுக தலைவர் ஜெயலலிதா மட்டுமே. இதை உணர்ந்து கொண்டால்தான் மாநிலத்துக்கான நலத்திட்டங்கள் செயல்படுத்தி மத்திய அரசால் நல்லாட்சி செலுத்த முடியும். எனவே ஒரு கட்சியின் தலைவரான ஜெயலலிதாவை இந்த அடிப்படையில்தான் அருண் ஜேட்லி சந்தித்தார்.

மாநில முதல்வர் இருந்தபோதும் கட்சியின் அனைத்து அதிகாரங்களும் ஜெயலலிதாவிடமே இருந்தன. எனவே, ஜெயலலிதா – ஜேட்லி சந்திப்பை இந்த கோணத்தில்தான் பார்க்கப்பட வேண்டுமே தவிர நீங்கள் ராஜ்யசபா தேர்தலில் எங்களுக்கு உதவினால் அதற்கு பதிலாக நாங்கள் வேறு உதவி செய்வோம் போன்ற கோணத்தில் அல்ல.

இவ்வாறு முரளிதர் ராவ் பேட்டியளித்துள்ளார்.

Leave a Reply