பெங்களூருவில் பிரமிக்கவைக்கும் "ஏரோ இந்தியா" விமான சாகச நிகழ்ச்சி மற்றும் கண்காட்சி வருகிற 18-ந்தேதி முதல் தொடங்குகிறது. பிரதமர் நரேந்திரமோடி இதனை தொடங்கி வைக்கிறார்.

பெங்களூரு எலகங்காவில் உள்ள விமானப் படை தளத்தில் வருகிற 18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை 5 நாட்கள் "ஏரோ இந்தியா" விமான கண்காட்சி நடை பெறுகிறது. கண்காட்சி முடியும்வரை தினமும் ஒருமணி நேரத்திற்கு போர் விமானங்கள், ஹெலிகாப்டர்களின் சாகச நிகழ்ச்சியும் நடக்கிறது.

இந்த கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறார். மத்திய ராணுவ மந்திரி மனோகர் பாரிகர், முதல்-மந்திரி சித்தராமையா ஆகியோர் விழாவில் கலந்துகொள்கின்றனர். சர்வதேச அளவில் விமானத்தொழிலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், தொழில்நுட்பங்கள் இந்த கண்காட்சியில் இடம் பெறுகின்றன.

விமானத்துறை மற்றும் உற்பத்தி துறையில் இந்தியா தற்சார்பு அடைந்துவருவதை வெளிப்படுத்தும் வகையில் இந்திய தொழில் நுட்பத்தில் உருவான இலகுரக போர் விமானங்கள், கப்பல்படை விமானங்கள், ஏவுகணைகள், ஹெலிகாப்டர்கள் இந்த கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. இளைஞர்களையும், சிறுவர்களையும் கவரும் ஆளில்லா குட்டிவிமானங்களும் இந்த கண்காட்சியில் இடம் பெறுகிறது.

அதேபோல இந்தியாவில் உள்ள விமான நிறுவனங்களின் விமானங்களும், 78 வெளிநாடுகளை சேர்ந்த 28 நவீன ரக விமானங்களும் கண்காட்சியில் இடம் பெறுகின்றன.

உலக பார்வையாளர்களை கவரும் இந்தபிரமாண்ட கண்காட்சியில், தொழில் ரீதியாக ஒருலட்சத்துக்கு மேற்பட்டோரும், பொதுப் பார்வையாளர்களாக 3 லட்சத்துக்கு மேற்பட்டோரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply