தஞ்சாவூர் மராட்டியர் வரலாறு தஞ்சை வெ.கோபாலன் எழுதிய “தஞ்சாவூர் மராட்டியர் வரலாறு” நூல் வெளியீடு 6-7-2013 சனி மாலை தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெறவிருக்கிறது. விழாவுக்கு பரிசுத்தம் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் தாளாளர் திரு சே.ப.அந்தோணிசாமி அவர்கள்

தலைமை வகிக்கிறார்கள். முன்னாள் அமைச்சரும், கலை இலக்கிய ஆர்வலருமான குறள்நெறிச்செல்வர் திரு சி.நா.மீ.உபயதுல்லா அவர்கள் நூலை வெளியிட, தஞ்சை இளவரசர் திரு பாபாஜி ராஜா போன்ஸ்லே அவர்களும், கலை பண்பாட்டுத் துறை உதவி இயக்குனர் திரு முத்து அவர்களும், வரலாற்று ஆய்வறிஞர் முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியம் அவர்களும், தில்லைஸ்தானம் மரபு பவுண்டேஷன் அறங்காவலர் முனைவர் இராம.கெளசல்யா அவர்களும் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்த பட்டுக்கோட்டை சூரப்பள்ளம் திரு ஆ.சதாசிவம் அவர்களும், தஞ்சை த.கோ.குருநாதன் அவர்களும் நூலைப் பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்குகிறார்கள். நிறைவில் நூலாசிரியரும் பாரதி இலக்கியப் பயிலகத்தின் இயக்குனருமான திரு வெ.கோபாலன் நன்றியுரை ஆற்றுகிறார். விழா ஏற்பாடுகளை பாரதி இலக்கியப் பயிலகமும் அனன்யா பதிப்பகமும் இணைந்து நடத்துகின்றனர். முன்னதாக பாரதி பவுண்டேஷன் அறங்காவலர் திரு இரா.மோகன் வரவேற்புரையும், கவிஞர் வாதூலன் அவர்கள் நூல் அறிமுகமும் செய்கின்றனர்.

இந்த நூல் பதினேழாம் நூற்றாண்டு இறுதியில் தொடங்கி பத்தொன்பதாம் நூற்றாண்டில் 1855 வரை 178 ஆண்டுகள் தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னர்களைப் பற்றியது. தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்களின் கடைசி மன்னரான விஜயராகவ நாயக்கர் மதுரை நாயக்க மன்னரான சொக்கநாத நாயக்கரிடம் போரில் தோற்று கொல்லப்பட்ட பின் தஞ்சையில் குழப்பம் ஏற்படுகிறது. பிஜப்பூர் சுல்தான் அலிஅடில்ஷா கட்டளைப்படி அவருடைய படைத்தலைவரான ஏகோஜி தஞ்சைக்கு வந்து ஆட்சிப் பொறுப்பை அவரே ஏற்றுக் கொள்ள அவரையடுத்து பல அரசர்கள் வரிசையாக ஆண்டனர். அவர்களில் மிகவும் பெருமை வாய்ந்தவர்களாக பிரதாபசிம்ம ராஜாவும், துளஜேந்திர ராஜாவும், சரபோஜி மன்னரும் விளங்கினர். ராஜா சரபோஜியின் மகனான இரண்டாம் சிவாஜி வாரிசு இல்லாமல் இறந்தபின் ஆங்கிலேயர்கள் லார்ட் டல்ஹவுசியின் நாடுபிடிக்கும் திட்டத்தின்படி இந்த தஞ்சை ராஜ்யத்தைத் தாங்களே அபகரித்துக் கொண்டார்கள். இந்த இடைப்பட்ட 178 ஆண்டுகளில் தஞ்சை சந்தித்த போர்கள், தஞ்சை வளர்த்த கலைகள், மராத்தியர்களின் பங்களிப்பு, இவர்கள் காலத்தில் தஞ்சையின் மகோன்னதமான வளர்ச்சி, இடையில் ஏற்பட்ட பஞ்சம், துளஜா மன்னரே ஆற்காடு நவாபால் கைதுசெய்யப்பட்டு  சிறைப்பட்டது, சரபோஜியின் கலை, இலக்கிய, இசை, மருத்துவப் பணிகள் ஆகியவை இந்த நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. அந்த காலத்திய நாணயங்கள், அதிகாரிகளின் பட்டியல், இந்த வரலாற்றை பதிவு செய்து வைத்த  கர்னல் மெக்கன்சி இவை பற்றிய செய்திகளையும் இதில் காணலாம். அனைவரும் படித்து அறிந்து கொள்ள வேண்டிய அரிய நூல் நாளை வெளியிடப்படுகிறது. வெளியீட்டாளர்: அனன்யா பதிப்பகம், குழந்தை ஏசு ஆலயம் அருகில், புதுக்கோட்டை சாலை, தஞ்சாவூர் 613005. விலை ரூ.100/=.

Leave a Reply