ஆப்பிரிக்க நாடான கென்யாவில், சோமாலியா எல்லையில் காரிசா பல்கலைக் கழக கல்லூரி உள்ளது. 815 மாணவர்கள் படித்துவரும் அந்த கல்லூரிக்குள் நேற்று நுழைந்த தீவிரவாதிகள், தூங்கி கொண்டிருந்த மாணவர்கள் மீது கண்மூடித் தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர்.

இந்தத் தாக்குதலில் 147 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் 80 க்கும் மேற்பட்டோர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர். அவர்களில் பலரது நிலைமை மிகவும் கவலைக் கிடமாகவே உள்ளது.

இந்த தாக்குதல் குறித்த தகவலறிந்ததும் காவல் துறையனரும், ராணுவத்தினரும் காரிசா பல்கலைக்கழக கல்லூரியை சுற்றிவளைத்தனர். அங்கு 12 மணி நேரமாக பதுங்கி இருந்த தீவிரவாதிகள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் தீவிரவாதிகள் 4 பேரை சுட்டுக் கொன்றனர் . பின்னர் பல்கலைக்கழக வளாகத்தை ராணுவம் தங்கள்வசம் கொண்டுவந்தனர்.

இந்நிலையில், கென்யா கல்லூரியில் நடத்தப்பட்ட இந்த தீவிரவாத தாக்குதல் மிகவும் "பயங்கரமானது" என்று பிரதமர் நரேந்திர மோடி கடும்கண்டனம் தெரிவித்துள்ளார்.

"பல்கலைக்கழக வளாகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது மிகவும் வேதனைக் குரியது. முற்றிலும் கண்டிக்கத்தக்கது" என்று பிரதமர் நரேந்திர மோடி டுவிட் செய்துள்ளார். கென்யாவில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு இந்திய தரப்பில் கடும்கண்டனம் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தை சர்வதேச நாடுகள் வலுப்படுத்த வேண்டியதுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "வட கிழக்கு கென்யாவில் பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்ட காட்டு மிராண்டிதனமான தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா கடும்கண்டனம் தெரிவிக்கிறது," என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags:

Leave a Reply