மலைச்சாரலுக்கு அருகில் அழகான காடு ஒன்று இருந்தது. அதில் பல நீர்வீழ்ச்சிகள், ஆறுகள், பழங்கள் நிறைந்த மரங்கள், சோலைகள், விதவிதமான செடிகொடிகள் என அந்தக் காடு மிகவும் ரம்மியமாக அமைந்திருந்தது.

அந்தக் காட்டில் மிகப் பெரிய மரம் ஒன்று இருந்தது. அந்த மரத்திலிருந்த

பொந்தில் சகல வசதிகளுடன் ஒரு கோட்டான் வாழ்ந்து வந்தது. ஒருநாள் கோட்டான் இல்லாத சமயத்தில் பருந்து ஒன்று மரப்பொந்தைப் பிடித்துக் கொண்டது. வெளியே சென்றிருந்த கோட்டான் வந்து பருந்திடம் சண்டையிடத் தொடங்கியது. பிறகு அவை இரண்டும் வழக்கை நீதிமானும், தலைவனுமாகிய ஸ்ரீ இராமரிடம் சென்று முறையிட்டன.

இரண்டு பறவைகளும் மரப்பொந்து தங்களுக்குச் சொந்தம் என்று கூறி தீர்ப்பை
எதிர்பார்த்தன. ஸ்ரீ ராமரும் தன்னுடைய மந்திரிகளைப் பார்த்து இந்த வழக்கில் தீர்ப்பளிக்கத் தாங்கள் உதவ வேண்டும் என்றும், அந்தக் காட்டிற்குச் சென்று பார்த்து வருமாறும் கூறினார். காட்டிற்குச் சென்று மந்திரிகளும் மரப்பொந்தை ஆராய்ந்தனர். பின்னர், பருந்தைப் பார்த்து,

"உண்மையைச் சொல், நீ இந்தக் கூட்டைக் கட்டி எவ்வளவு வருடங்கள் ஆகின்றன?' என்று கேட்டனர். "இந்தப் பூமியில் மனிதர்கள் வாழத் தொடங்கியது முதல் நான் இதில் வாழ்ந்து வருகிறேன்' என்றது. அதேபோல் கோட்டானும், "இந்தக் காட்டில் மரங்கள் உள்ளது முதல் இதில் நான் வாழ்ந்து வருகிறேன்' என்றது.

மந்திரிகள் சபைக்குத் திரும்பி ஸ்ரீ இராமரிடம், "அரசே! கோட்டான் சொல்வது தான் உண்மை' என்றனர். ஸ்ரீ இராமர், "எதன் அடிப்படையில் இதனைக் கூறுகிறீர்கள்?' என்றார். மந்திரிகளும், "அந்த மரப்பொந்தானது உட்புறம் செல்லச் செல்ல கீழ்நோக்கி போகிறது. உள்ளே செல்லச் செல்ல மிகச் சிறியதாகவும் உள்ளது.

அதே சமயம் மரத்திற்கு அருகில் வேறு எந்த பருந்துகளோ இல்லை. பருந்துகளோ கூட்டத்துடன்தான் வாழும். தனியாக வாழாது' என்றனர். இதனைக் கேட்ட ஸ்ரீ இராமர் மகிழ்ச்சியுடன், மிகவும் புத்திசாலிகளான தங்களைப் போன்ற மந்திரிகளால்தான் என்னை எல்லோரும் போற்றிப் புகழ்கின்றனர் என்று கூறினார்.

மந்திரிகளும் "தவறு செய்த பருந்திற்குத் தக்க தண்டனை அளிக்க வேண்டும்' என்று கூறினர். அந்தச் சமயத்தில் அசரீரி ஒன்று, 'ஸ்ரீ இராமா! பருந்தைத் தண்டிக்க வேண்டாம். அது போன ஜென்மத்தில் பிரமதத்தன் என்ற ராஜாவாக இருந்து சிறப்பாக ஆட்சி செய்தவன்.

ஒருநாள் அவன் அரண்மனைக்கு ஸ்ரீ கௌதமர் என்ற முனிவர் வந்தார். அவருக்கு உணவு
அளித்த பொழுது அதில் சிறு மாமிசத் துண்டு ஒன்று கலந்திருந்தது. அதனைக் கண்டு
கோபமடைந்த அவர், "பருந்தாக மாறுக' என்று சாபமிட்டுவிட்டார். பிரமதத்தனும் (பருந்து)
பணிந்து மீள வழி கேட்டான். முனிவரும், "ஸ்ரீ இராமரின் ஸ்பரிசம் பட்டவுடன் உன் சாபம் நீங்கும்' என்றார்.

அதனால் அந்தப் பருந்தைத் தண்டிக்காமல் உன் கையால் அதனைத் தொட்டு சாபவிமோசனம் அளிக்கவேண்டும்' என்றது. ஸ்ரீ இராமரும் அந்தப் பருந்தை அருகே அழைத்துத் தன் கையால் தடவிக் கொடுத்தார். உடனே பருந்து மறைந்து பிரமதத்தன் சர்வ அலங்காரங்களுடன் தோன்றி ஸ்ரீ இராமரின் பாதம் பணிந்து விடை பெற்றுச் சென்றான்

Leave a Reply