சுதந்திரமாக சிந்திப் போரை சோனியா காந்தி விரும்புவதில்லை. அதனால்தான் 1991 ஆம் ஆண்டு பவாருக்கு பதில் நரசிம்மராவ் பிரதமராக்கப் பட்டார் என சரத் பவார் பிறந்தநாளை யொட்டி வெளியிடப்பட்ட புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாளை 75 பிறந்தநாளை கொண்டாடும் சரத்பவாருக்கு அரசியல் கட்சிகள் சார்பில் நேற்று புது தில்லியில் பாராட்டுவிழா நடைபெற்றது.

குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

அப்போது 'எனது வாழ்க்கை- அடிமட்டதொண்டர் முதல் ஆட்சி அதிகாரம் வரை' என்ற தலைப்பில் பவார் எழுதியுள்ள புத்தகம் வெளியிடப்பட்டது.

அந்தபுத்தகத்தில், கடந்த 1991 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தியின் திடீர்மரணத்திற்கு பிறகு, உடல் நலம் குன்றியதால் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த பிவி. நரசிம்ம ராவ் பிரதமராக்கப் பட்டார்.

சோனியாவின் விசுவாசிகளான ஆர்.கே. தவன், வி.ஜார்ஜ், அர்ஜூன் சிங் உள்ளிட்டோர் என்னை பின்னுக்குதள்ளி நரசிம்ம ராவை பிரதமராக்கி விட்டனர்  .

நான் பிரதமரானால் நீண்ட நாட்களுக்கு பதவியில் நீடிப்பேன் என்பதாலும், காந்தியின் குடும்பத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்பதாலும் சோனியாவின் விசுவாசிகள் தடுத்து விட்டனர். சுதந்திரமாக சிந்திக்கும் என்னை போன்றோரை சோனியா விரும்ப வில்லை என்று புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்சிக்குள் நடைபெற்ற வாக்கெடுப்பில் பவாரை விட நரசிம்ம ராவ் 35 வாக்குகள் அதிகம் பெற்று பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து பவாருக்கும் நரசிம்ம ராவுக்கு இடையே பேச்சு வார்த்தை நடத்திய இந்திரா காந்தியின் முதன்மை செயலராக இருந்த பி.சி.அலெக்ஸாண்டர், பவாருக்கு முக்கியமான துறையை பெற்றுதந்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மற்றொரு அத்தியாத்தில் 1999 ம் ஆண்டு வாஜபேயி அரசாங்கம் ஒருவாக்கு வித்தியாசத்தில் பதவி இழந்தபோது, சரத் பவார், பகுஜன் சமாஜ்கட்சி தலைவர் மாயாவதியிடம் என்ன பேசினார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாஜக அரசுக்கு எதிராக வாக்களித்தால்தான் உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ்கட்சி எதிர்காலம் இருக்கும் என்று கூறினேன். கடைசிநிமிஷத்தில் 5 எம்.பி.க்களை கொண்ட பகுஜன் சமாஜ் கட்சி, எதிர்த்து வாக்களித்ததால் வாஜபேயி அரசு கவிழ்ந்தது என குறிப்பிடபட்டுள்ளது.

Leave a Reply