அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், கனடா உள்பட பல்வேறு நாடுகள்இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை படிப்படியாக உருவாக்கி உள்ளன. அமெரிக்காவின் 'நாசா' விண்வெளி ஆய்வு நிலையத்தில் இருந்து விண்வெளி ஓடங்கள் மூலம் விண்வெளி வீரர்களும், விஞ்ஞானிகளும் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆய்வுக்கருவிகள் மற்றும் விண்வெளி நிலையத்தை உருவாக்குவதற்கு தேவையான கட்டுமானப்பொருட்களும் இந்த

விண்வெளி ஓடங்கள் மூலமே அனுப்பி வைக்கப்பட்டன. இந்தப்பணியில் ரஷிய நாட்டின் 'சோïஸ்' விண்கலமும் பயன்படுத்தப்பட்டது.

அமெரிக்கா அனுப்பிய விண்வெளி ஓடங்கள் விமானம் போல விண்வெளிக்கு பறந்து சென்று விட்டு மீண்டும் பூமிக்கு திரும்பி வரும் வகையில் செயல்படும். ரஷிய நாட்டின் விண்கலம் ராக்கெட்டு மூலம் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு ஆய்வுப்பணிகள் முடிந்த பின்னர் வீரர்கள் மட்டும் பாதுகாப்பு கவசம் மூலம் தரை இறங்குவார்கள். அதை மீண்டும் பயன்படுத்த முடியாது. இந்த விண்கலங்கள் குறித்த தகவல்களை இங்கு அறிந்துகொள்வோம்.

விண்கலம் என்றால் என்ன?

விண்வெளிக்கு வீரர்கள் மற்றும் ஆய்வுப் பொருட்களை எடுத்துச்செல்லும் வாகனத்துக்கு விண்கலம் என்று பெயர். விண்வெளிக்கு சென்ற முதல் விண்கலத்தின் பெயர் 'கொலம்பியா'. 12-4-1981 அன்று இது விண்ணில் செலுத்தப்பட்டது. தனது முதல் பயணத்தில் இந்த விண்கலம் 36 முறை பூமியை வெற்றிகரமாக சுற்றியது. பின்னர் பத்திரமாக தரை இறங்கியது.

விண்கலத்தின் பணிகள் என்ன?

விண்வெளிக்கு செல்லும் விண்கலத்தின் பணிகள் பல்வேறு வகையானவையாகும். தேவை மற்றும் இலக்கு அடிப்படையில் விண்கலங்களின் பயணம் மற்றும் பணிகள் அமைந்து இருக்கும். ஆரம்ப காலங்களில் செயற்கை கோள்களை சுமந்தபடி செல்லும் விண்கலங்கள் விண்வெளியில் குறிப்பிட்ட உயரம் சென்ற பின்னர், செயற்கைகோள்களை விண்வெளியில் நிலைநிறுத்தும் பணியை செய்தன. பின்னர் விண்வெளி வீரர்கள் மற்றும் விஞ்ஞானிகளுடன் சென்று விண்வெளியில் பறந்தபடி ஆய்வுப்பணிகளை மேற்கொண்டனர். விண்கலத்தில் செல்லும் வீரர்கள், அதில் இருந்து வெளியே வந்து ஆய்வுகள் செய்தனர். விண்வெளியில் சுழன்று கொண்டிருக்கும் செயற்கைகோள்களில் உள்ள பழுதுகளை நீக்கும் பணியையும் இவர்கள் செய்துள்ளனர். உதாரணமாக விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் ஹப்பிள் தொலைநோக்கி செயற்கை கோளில் ஏற்பட்ட பழுதுகளை இவ்வாறு சரி செய்துள்ளார்கள். தற்போது சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கும் பணி தொடங்கிய பின்னர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டுமான பணிகளுக்குரிய பொருட்கள், ஆய்வுக்கருவிகளை எடுத்துச்செல்லும் பணிகளில் விண்கலங்கள் ஈடுபடுத்தப்பட்டன.

 

விண்கலத்தின் அமைப்பு எப்படி இருக்கும்?

விண்கலம் 3 பகுதிகள் கொண்டதாக இருக்கும். வெள்ளை நிறத்தில் விமானம் போல இருக்கும் பகுதி தான் முக்கியமானது. விண்வெளி வீரர்கள் தங்குமிடம், ஆய்வுக்கருவிகள் மற்றும் சரக்கு பகுதி இதில் அமைந்து இருக்கும். இதன் அடிப்பகுதியில் உள்ள ஆரஞ்சு நிற டாங்க் இரண்டாவது முக்கிய பகுதியாகும். எரிபொருள் நிரம்பிய ராக்கெட் வடிவிலான இது தான் விண்கலத்தை பூவிஈர்ப்பு விசையைத்தாண்டி சுமந்து செல்ல உதவுகிறது. இது தவிர விண்கலத்தின் இருபுறங்களிலும் வெள்ளை நிற சிறிய ராக்கெட் வடிவ டாங்க் பொருத்தப்பட்டு இருக்கும். மூன்றாவது முக்கிய பகுதியான இது விண்கலத்தை தரையில் இருந்து விண்வெளிக்கு கொண்டு செல்ல உதவுகிறது. முதலில் இந்த வெள்ளை நிற 2 பூஸ்டர் ராக்கெட்டுகளும் எரிந்து விண்கலத்தை தரையில் இருந்து புறப்படச்செய்து விண்வெளிக்கு உந்தித்தள்ளுகிறது. குறிப்பிட்ட தூரம் சென்றதும், இரு ராக்கெட்டுகளும் முழுமையாக எரிந்து விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்று விடும். அதன்பின்னர் மஞ்சள் நிற ராக்கெட் எரியத்தொடங்கும். இது புவிஈர்ப்பு விசையைத்தாண்டி விண்கலம் செல்ல உதவும். அதன்பிறகு விண்கலத்தில் உள்ள எரிபொருள் மூலம் தனது விண்வெளி பயணத்தை தொடரும்.

விண்வெளிக்கு செல்லும் விண்கலம் அங்கு தனது பணிகளை தொடரும். உதாரணமாக ஆய்வுக்கருவிகளை பொருத்துதல், விண்வெளி நிலையத்துக்கு தேவையான பகுதிகளை இணைத்தல் போன்ற பணிகள் நடைபெறுகின்றன. சிலநேரங்களில் விண்வெளி வீரர்கள் தங்கள் கலத்தில் இருந்து வெளியே வந்து விண்வெளியில் மிதந்தபடி பழுதுபார்க்கும் பணிகளையும் செய்வதுண்டு. சமீப காலமாக விண்கலங்கள் விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்துடன் தன்னை இணைத்துக்கொண்டு பணிகளை செய்து வருகின்றன.

விண்வெளியில் தனது பணிகளை முடித்த பின்னர் விண்கலம் பூமிக்கு திரும்பும். முதலில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும். அதன் பின்னர் விண்வெளியில் தலைகீழாக மிதந்த படி சில கிலோ மீட்டர் தூரம் நகர்ந்து செல்லும். அதன்பின்னர் தனது என்ஜினை இயக்கி பூமியை நோக்கி தரை இறங்கும். பூவிஈர்ப்பு விசை பகுதியை கடக்கும் போது விண்கலம் நெருப்பில் இட்ட இரும்பு போல வெப்பத்தில் தகிதகிக்கும். இந்த வெப்பம் விண்கலத்தை பாதிக்காத அளவுக்கு அதன் வெளிப்புறப்பகுதியில் செராமிக் தகடுகள் பதிக்கப்பட்டுள்ளது. ராக்கெட் ஏவுதளம் அருகே வந்ததும் வழக்கமாக விமானங்கள் தரை இறங்குவது போல விண்கலம் தரைஇறங்கும்.

விண்கலங்கள் பெயர் என்ன?

இதுவரை டிஸ்கவரி, அட்லான்டிஸ், எண்டீவர், கொலம்பியா, சாலஞ்சர் ஆகிய பெயர்களில் விண்கலங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் கொலம்பியா, சாலஞ்சர் விண்கலங்கள் விபத்தில் சிக்கி அழிந்து விட்டன. மீதி உள்ள 3 விண்கலங்களும் மாறிமாறி விண்வெளிக்கு சென்று திரும்பின. டிஸ்கவரி, எண்டீவர் கலங்கள் தங்களது பணிகளை முடித்து ஓய்வுக்கு அனுப்பப்பட்டு விட்டன. தற்போது அட்லாண்டிஸ் தனது கடைசி பயணத்தை மேற்கொண்டுள்ளது. இந்த பயணம் முடிந்ததும் இதுவும் ஓய்வுக்கு அனுப்பப்பட்டு விடும்.

முதன் முதலில் விண்கலம் தயாரிக்கப்பட்ட போது அதற்கு "எண்டர்பிரைசஸ்" என்று பெயரிட்டு இருந்தனர். இது சோதனைக்காக மட்டும் பயன்படுத்தப்பட்டதே தவிர இதை விண்வெளிக்கு அனுப்பவில்லை. ஆரம்ப காலத்தில் பெரிய விமானத்தின் முதுகில் எண்டர்பிரைசஸ் விண்கலத்தை ஏற்றி விண்வெளியில் குறிப்பிட்ட உயரத்துக்கு பறந்து சென்றனர். பின்னர் விண்வெளியில் எண்டர்பிரைசஸ் கலத்தை மட்டும் பிரிந்து போகச்செய்தனர். அதன்படி எண்டர்பிரைசஸ் கலம் விண்வெளியில் பறந்து சென்று மீண்டும் தரை இறங்கியது. இவ்வாறு சோதனைகள் செய்து பார்த்த பின்னர் தான், ராக்கெட்டுகளை பொருத்தி விண்கலத்தை ஏவும் பணிகள் நடைபெற்றது.

TAGS; விண்கலம்,  விண்கலத்தை, விண்வெளிக்கு,  விண்கலத்தில், ஆய்வுப்பணிகள், விண்கல, விண்கலத்தில், கொலம்பியா

Leave a Reply

Your email address will not be published.