உலகளவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய மூன்று நாடுகளுக்கு இணையாக இந்தியா இணைந்ததன் மூலம் அவர்களுக்கு இணையாக பாதுகாப்புத் துறையில் வளர்ந்துள்ளோம் என இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் தெரிவித்துள்ளார்.

“செயற்கைகோள்களை சுட்டு வீழ்த்தும் ஏவுகணை சோதனையில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவின் வான் வல்லமையை நிலைநாட்டும் வகையில் நடந்த இந்த சோதனைக்கு மிஷன் சக்தி என பெயரிடப்பட்டு உள்ளது’’

இது குறித்து இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன்  இந்து தமிழ் திசை இணையதளத்திற்கு  அளித்த பதில்:

இதனால் இந்தியா அடையப் போகும் பயன் என்ன? இந்த சோதனை ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?

ஒட்டுமொத்த இந்திய பாதுகாப்பையும் கையில் வைத்திருக்கும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின்பணி இது. இதன் மூலம் நம் எதிரியின் செயற்கைக் கோளை தேவை ஏற்படும் சமயங்களில் நாம் அழிக்கமுடியும்.

ஒடிஷா மாநிலத்தில் வைத்து நடந்த இந்தசோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது. நமக்குமேலே இருக்கும் செயற்கை கோள்களுக்கு கணக்கே கிடையாது. அதில் சீனா, ரஷ்யா என எல்லா செயற்கை கோள்களும் இருக்கும். நம் நாட்டில் நாம்தான் வானில் செயற்கைகோள் விட்டிருப்போம் என்பதுதான் பொதுவாக மக்கள் மத்தியில் இருக்கும் புரிதல்.

ஆனால் குறிப்பிட்ட வான்தூரத்துக்கு மேலே சென்று விட்டால் அது சர்வதேச வான்வெளியாகிவிடும். இது என் இடம். உன்இடம் என பிரித்தவிட முடியாது. நமக்கு மேலே இருப்பதாலேயே அதை நம் இடம் என சொல்லிவிடவும் முடியாது. அதனால் அங்கெல்லாம் பிற நாட்டின் செயற்கைகோள்கள் பறந்துகொண்டுதான் இருக்கும்.

அங்கே மேலே இருந்து நம்மை வேறு நாடுகள் கண்காணித்து கொண்டிருக்கும் வாய்ப்பும் உண்டு. அந்தவகையில் நமக்குத் தெரியாமலோ, அல்லது நமக்கு இடைஞ்சல்தரும் வகையிலோ ஏதோ ஒன்றை செய்து கொண்டிருந்தால் நாம் இனி அவர்களை வீழ்த்த, இந்த திட்டத்தின்படி மூன்று நிமிடம் முதல் 5 நிமிடங்களே போகும்.

இதை எப்படி புரிந்துகொள்ள வேண்டும் என்றால், நாம் ஒரு ஏவுகணையை அனுப்புகிறோம் என்றால், அது போய்சேர வேண்டிய இடம் அங்கேயேதான் இருக்கும். நாம் தூரத்தை மட்டும் கணக்கிட்டு அனுப்பினால் போதும். ஆனால் இது அப்படியான முறையல்ல. அந்த செயற்கைகோள் நகர்ந்துகொண்டே இருக்கும்.

நமது ஏவுகணையும் நகர்ந்துபோய், இரண்டும் பொருந்தி ஒரே இடத்தில் சந்தித்து அழிக்கவேண்டும். இதில் நொடிகள் தப்பினால்கூட இலக்கு மாறிவிடும். செயற்கைகோள் உத்தேசமாக ஒருநொடிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருக்கும். அதேநேரத்தில் ஏவுகணை 3 கிலோ மீட்டர் செல்லும். இதனால் அங்கு நேர மேலாண்மை ரொம்ப முக்கியம்.

இப்போது வெற்றி பெற்றுள்ள இந்த மிஷின் சக்தி, இந்தியாவின் பாதுகாப்புக்கு நிறைய கைகொடுக்கும். பொதுவாக அணு ஆயுதங்கள் நம்மிடம் இருக்கும்போதுதான் மற்ற நாடுகள் நம்மை பார்த்து பயப்படும். நம் நாட்டின் கருத்துக்கு மதிப்பு இருக்கும். யார் கையில் அதிகாரம் இருக்கிறதோ, அவர்களைப் பார்த்து தானே உலகமே பயப்படுகிறது? இது நமது பலத்தை உலகநாடுகளின் மத்தியில் நிரூபிக்கும்.

இதனால் நமது நாட்டிடம் யாரும் வந்து வாலாட்ட மாட்டார்கள். நாம் ஏதாவது செய்தால் இந்தியா நமது செயற்கைகோளை அழித்து விடுவார்கள் என்னும் பயம் இனி அவர்களுக்குஇருக்கும். உலக அளவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய மூன்று நாடுகளிடம்தான் இந்த திறமை இருந்தது.

இப்போது இந்த பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. நாம் நான்காவதாக இணைந்தோம் என்பதைவிட, அவர்களுக்கு இணையாக பாதுகாப்புத் துறையில் வளர்ந்துள்ளோம் என்று சொல்லலாம். இதனால் நம்மை ‘ஸ்பேஸ் பவர்’ என்று சொல்லலாம்” என்று தெரிவித்தார்.

நன்றி ஹிந்து தமிழ்

Leave a Reply