செஞ்சி:தமிழக அமைச்சர் மீது அரசியல் ரீதியாக பழிவாங்கும் நடவடிக்கை எடுத்தவர் யார் என பா.ஜ., தமிழக தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் கேள்ளி எழுப்பியுள்ளார்.தமிழக பா.ஜ., தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் கடந்த 19ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் இந்து மாணவர்களுக்கு கல்வியில் சமநீதி (நிதி) கிடைக்க வேண்டும் என தாமரை யாத்திரை நடத்தி வருகிறார்.

நேற்று காலை யாத்திரையாக செஞ்சிக்கு வந்த பொன் ராதாகிருஷ்ணன் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:பா.ஜ., வின் இந்த யாத்திரை அடிப்படையில் உங்கள் குடும்பத்தையும், குழந்தைகளின் எதிர்காலத்தையும் காப்பதற்காக நடத்தப்படுகிறது.காங்., அரசு கடந்த 2007ம் ஆண்டு முதல் கல்வி உதவித்தொகை வழங்குகிறது. இது யாருக்கு என்றால் சிறுபான்மை முஸ்லிம், கிறிஸ்த்துவர்களுக்கு. எந்த ஒரு தலித்துக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கும் இல்லை.இதை வேண்டாம் என்று சொல்லவில்லை. அந்த உதவித்தொகையை ஏழை தலித், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கும் வழங்க வேண்டும் என கேட்கிறோம்.இதற்காக ஜூலை மாதத்தில் போராட்டம் நடத்தினோம். எந்த அரசும் செவி சாய்க்கவில்லை.

அ.தி.மு.க.,- ம.தி.மு.க.,- வி.சி.,- பா.ம.க., யாரும் கண்டு கொள்ளவில்லை. இவர்களுக்கு சிறுபான்மையினத்தவரின் ஓட்டு தேவை. 85 சதவீதம் உள்ள இந்துக்களை, ஜாதி, ஊர் என பிரித்து எப்படி வேண்டுமானாலும் ஓட்டு வாங்கி விடலாம் என நினைக்கின்றனர். இந்த ஆண்டு சிறுபான்மையினருக்கு 60 கோடி ரூபாய் தொழில் துவக்க கடன் கொடுக்க உள்ளார்கள். கொடுக்கட்டும், முஸ்லிம் சகோதரர்கள் கேட்டு வாங்கட்டும்.அதே போல் ஏழை இந்து தொழிலாளர்களுக்கும் தரக்கூடாதா… பொங்கல் வந்தால் இந்துக்களுக்கு இனாமாக 60 ரூபாய் மதிப்புள்ள வேட்டியும், சேலையும் கொடுக்கின்றீர்கள். இன்னமும் இந்துக்களை இலவச வேட்டியையும், சேலையும் வாங்கும் நிலையில் தான் வைத்திருக்கின்றனர்.

சிறுபான்மையினருக்கு 2005ல் கல்வி உதவித்தொகை 1 கோடி ரூபாய் கொடுத்தார்கள். இந்த ஆண்டு 40 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதை இந்து ஆட்டோ ஓட்டுபவரின் மகன், குப்பை அள்ளுபவனின் மகன், சாக்கடை சுத்தம் செய்பவரின் மகன், வயலில் உழும் விவசாயியின் மகன், களை எடுக்கும் பெண்ணின் மகன் படிப்பதற்கு ஏன் கொடுக்க வில்லை. இந்த ஏழைகளுக்கு துரோகம் செய்வது ஏன்.அப்துல் கலாம் இந்தியாவின் உயர்ந்த மனிதர். அவர் எல்லோரும் படிக்க வேண்டும் என்றுதான் சொன்னார். அதை காங்., அரசு செய்ய வில்லை. உங்கள் குழந்தைகளுக்கு துரோகம் செய்யும் அரசு உங்களுக்கு வேண்டுமா என்பதை சிந்தித்து பாருங்கள்.தமிழகத்தில் தமிழர்களுக்கு துரோகம் செய்யும் கட்சி தி.மு.க., இலங்கை தமிழகர்களுக்கு துரோகம் செய்தவர்களில் முதலிடத்தில் திகழ்கின்றனர்.

தமிழகத்தில் கடந்த ஒன்றரை மாதத்தில் ஐந்து இடங்களில் குழந்தைகளை கடத்தி உள்ளனர். காவல் துறையினரே பணத்தை கொடுத்து மீட்டுக் கொள்ளுங்கள் என்று சொல்கின்றனர்.திருடன், கொலைகாரன் சுதந்திரமாக திரிகிறான். போலீஸ் உயர் அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லை. சேலத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியின் குடும்பத்தில் குழந்தையை கூட விட்டு வைக்காமல் 6 பேரை கொலை செய்துள்ளனர்.இதில் அமைச்சரின் உறவினரை கைது செய்துள்ளனர். அந்த அமைச்சர் அரசியல் ரீதியாக தன்னை பழிவாங்க எடுத்துள்ள நடவடிக்கை என்று கூறுகிறார். ஒரு அமைச்சரை யாரால் அசைத்து பார்க்க முடியும்.பா.ஜ., மாநில தலைவராக உள்ள என் மீது இங்குள்ளவர்கள் நடவடிக்கை எடுக்க முடியாது. தேசிய தலைவர் தான் நடவடிக்கை எடுக்க முடியும். அப்படி இருக்கும் போது இங்கே தமிழக அமைச்சர் மீது அரசியல் ரீதியாக பழிவாங்கும் நடவடிக்கை எடுத்தவர் யார்.

பீகார் தேர்தலில் 90 சதவீதம் ஓட்டுக்களை பா.ஜ., கூட்டணி பெற்று விட்டது. வெறும் 1.5 சதவீதம் ஓட்டுக்களை காங்., பெற்றுள்ளது. இந்துக்கள் மட்டும் ஓட்டுப்போட வில்லை. மற்ற மதத்தை சேர்ந்தவர்களும் பா.ஜ., கூட்டணிக்கு ஓட்டு போட்டுள்ளனர்.உலக நாடுகள், ஐக்கிய நாடுகள் எல்லாம் உலகத்தில் 2வது சிறந்த மாநிலமாக குஜராத்தை தேர்வு செய்துள்ளனர்.குஜராத்தில் பா.ஜ.,வால் சிறப்பான ஆட்சி நடத்த முடியும் போது, தமிழகத்தில் ஏன் முடியாது. உங்களுக்கு விழிப்புணர்வு வேண்டும். சென்னையில் ஜன. 29ல் மாபெரும் போராட்டம் நடத்த உள்ளோம். நமது ஏழை குழந்தைகளுக்காக போராட நீங்கள் எல்லோரும் அங்கு வர வேண்டும்.இவ்வாறு பா.ஜ., மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் பேசினார்.

Tags:

Leave a Reply