தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் மட்டும் செய்தால் தவ ஆற்றல் கூடும். அவர்கள் நினைக்கும் கெட்ட எண்ணங்கள் நிறைவேறும். சபித்தால் பலிக்கும். ஆனால், அதற்குமுன் அவர்கள் கெடுவார்கள். உதாரணம்:

 

இராவணனும், விசுவாமித்தரரும்

எனவே, தியானத்திற்கு தற்சோதனை அவசியமானதாகும். நம்மை நாமே அறிந்தால்தான், மனிதப் பிறவியின் நோக்கத்தை அறிய முடியும். "உன்னையே நீ அறிவாய்!" என்றார் சாக்ரடீஸ். நான் யார்? என் மூலமென்ன? உடல் – உயிர் – மனம் – தெய்வம் – என்றால் என்ன? நம்மை நாமே அறியவேண்டும். "தன்னையறிதலே இன்பம்" என்றார் வள்ளலார்.

தன்னை அறிந்து இன்புறவே வெண்ணிலாவே – ஒரு
தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே!
தன்னை அறிய நம் குணங்களைச் சீரமைக்க வேண்டும்.

தற்சோதனை என்பது மனத்தூய்மையை நாடிச் செல்லும் ஒரு தெய்வீகப் பயணம். ஆன்மாவானது புலன் மயக்கத்தில் கட்டுப்பட்டுள்ளது. ஐயுணர்வின் வசப்பட்டுள்ளது. உணர்ச்சிப் பெருக்கில் பல செயல்களைப் புரிந்து துன்பத்தைத் தந்துவிடுகிறது. தற்சோதனை செய்து, விழிப்பு நிலை அடையாத வரையில் பழக்கதின் வழிதான் ஆன்மா பயனிக்கும்.

இந்தப் பயணத்தின் பாதையில், நல்ல வழியில் திருப்புவதே தற்சோதனை நம்மைப் பற்றி நம் குணங்களைப் பற்றி, நம்மிடம் எழும் எண்ணங்களைப் பற்றி, நம்முடைய இருப்பு பற்றி, இயக்க நிலை பற்றி உணர வேண்டும். உணர்ந்த பின்னர் நல்லது எது? தீயது எது? என்று அறிய வேண்டும். நல்லவற்றைப் பெருக்கவேண்டும். தீமைகளை அகற்ற வேண்டும்.

இத்தகைய உளப்பயிற்சி, தன்னைத் தானே அறியும் சுய பரிசோதனைப் பயிற்சி ஆன்மீக வாழ்வில் மட்டுமல்ல. வாழ்க்கைத் தரத்தில் நம்மை உயர வைக்கும். வாழ்க்கையை வளம்பெற வைக்கும்.

நம் எண்ணங்களை ஆராய வேண்டும். நல்ல எண்ணங்களைப் பெருக்க வேண்டும் நமக்கும், சமுதாயத்துக்கும் பயன்படும் ஆசைகளை வைத்துக் கொண்டு பேராசையை ஒழிக்க வேண்டும். ஆசை சீரமைப்பு ஆன்மீகத்திற்கு அவசியம்.

கவலை கொண்டு சீரழிவதைவிட கவலையை ஒழிக்கப் பயிற்சி பெற வேண்டும். கவலைக்கான காரணங்கள் அறிந்து, அதனைத் துடைக்க வேண்டும். கோபம் என்பது கொடிய நோய். அது நம் உடலையும், உள்ளத்தையும் உருக்கி விடும். கோபத்தை மன்னிப்பாக மாற்ற தற்சோதனை செய்ய வேண்டும்.

பொறாமை, எதிர்பார்த்தல், ஆணவம், வஞ்சம் போன்ற தீய குணங்களை அகற்ற தற்சோதனை செய்ய வேண்டும்.

தியானம் தற்சோதனைக்கு உதவுகிறதா? தற்சோதனை தியானத்திற்கு உதவுகிறதா? இரண்டுமே ஒன்றுக்கு ஒன்று உதவக் கூடியது தான். ஒருவன் தன்னிடமுள்ள உணர்ச்சிமயமான மிருக குணத்தைக் கண்டறிந்து, அது காரணமாக அவன் செய்து வந்த தவறுகளை உணர்ந்து, 'அவற்றை இனியேனும் செய்யக்கூடாது' என முடிவெடுத்துக் கொள்வது, அம்முடிவைச் செயல்படுத்துவதும் தற்சோதனை.

இந்த தற்சோதனையை வெற்றிகரமாகச் செய்து முடிப்பதற்கு தான் தியானம் உதவுகிறது. வெளிச்சத்தில் ஒரு பொருளை தேடி எடுப்பது போல், தவம் தரும் மனஅமைதி நிலையில் தனது குறைகள் தெரிய வரும். பிறகு அதே தியானம் தந்த மன உறுதியைக் கொண்டு, அவற்றை நீக்கவும் முடியும்.

அதேபோல், தற்சோதனையால் தூய்மையடைந்து விட்டால், தியானம் எளிதாகவும், சிறப்பாகவும் அமைகிறது. இந்த இரண்டையும் கொண்டு, மனித குல வாழ்க்கையைத் தெய்வீக வாழ்க்கையாக மாற்றிக் கொள்ளலாம்.

இதிகாசங்களில் இராமாயணம், மகாபாரதம் இவற்றில் படைத்த கதாநாயகர்கள், கதாநாயகிகள் கூட கற்பனையே. ஆனால், அதன் உட்கருத்துக்கள் மிக மிக சிறப்பானது. இராமாயணத்தில் ஆசைக்கு ராவணனைக் காட்டினார்கள். அவனிடம் பெண்ணாசை மேலோங்கி இருந்தது. சினத்திற்கு பரதனுடைய தாயார் கைகேயியைக் குறிப்பிடலாம். கடும் பற்றிற்கு வாலியைக் குறிப்பிட்டார்கள். முறையற்ற பால் கவர்ச்சிக்கு இராவணனின் தங்கை சூர்ப்பனகையைக் காட்டினார்கள். வஞ்சத்திற்குக் கூனியைக் காட்டினார்கள்.

மாற்று வழியில் நிறை மனதிற்கு விபீஷணன், பொறுமைக்கு இலக்குமணன், விட்டுக் கொடுத்தலுக்கு பரதனையும் கற்பு நெறிக்குச் சீதையையும், மன்னிப்புக்கு "இன்றுபோய் நாளை வா" என்ற இராமனையே குறிப்பிடலாம். அறுகுண வரிசையில் உணர்சி நிலைக்கு இராவணனையும் அமைதி நிலைக்கு இராமனையும் காட்டி அறுகுண சீரமைப்பையும் காட்டினார்கள். மகாபாரதத்தில் ஆறு குணத்திற்கு துரியோதனையும், ஆறு குணம் அற்றவனாக கிருஷ்ண பரமாத்மாவையும் காட்டியது சிறப்புடையதாகும்.

நன்றி : பானுகுமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *