ஹிமாச்சல பிரதேசம், ஷிம்லா – தலைநகர் டில்லி இடையிலான, மலிவுவிலை விமான பயண திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.


ஹிமாச்சல பிரதேசத்தில், காங்கிரசைச்சேர்ந்த, வீர்பத்ரசிங் முதல்வராக உள்ளார். இந்தமாநிலத்தின் ஷிம்லா நகரையும், நாட்டின் தலைநகர் டில்லியையும் இணைக்கும் வகையில், மலிவுவிலை விமான பயண திட்டத்தை, பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

ஆந்திர மாநிலம், கடப்பா – தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் மற்றும் மஹாராஷ்டிர மாநிலம், நான்டெட் – ஐதராபாத் இடையிலான, மலிவுவிலை விமான பயண திட்டத்தையும், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், பிரதமர் மோடி துவக்கிவைத்தார்.

நாட்டின் ஏழை, எளியமக்களும் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்ற என் கனவு, தற்போது பலித்துள்ளது. மத்திய அரசின் இந்ததிட்டத்தால், 'ஹவாய்' செருப்பு அணிந்தவர் கூட, 'ஹாவாயி ஜஹாஜ்' எனப்படும், ஆகாய விமானத்தில் பறக்க முடிந்துள்ளது. தற்போது இயக்கத்தில் இல்லாத, பல்வேறு விமான நிலையங்களை, இந்த திட்டத்தின்கீழ் இயங்க வைக்க முடியும்.

இந்தத் திட்டத்தில் தற்போதுவரை ஐந்து விமான நிறுவனங்கள் இணைந்துள்ளன. அவை,
ஏர் இந்தியா, ஸ்பைஸ்ஜெட், ஏர் டெக்கான், ஏர் ஒடிசா மற்றும் டர்போ மெகா ஏர்வேஸ். இந்தநிறுவனங்கள், 70 விமான நிலையங்களை இணைக்கும் வகையில் தங்களது சேவையை அளிக்க முடிவு செய்துள்ளன. இதன்மூலம் 22 மாநிலங்கள், இரண்டு யூனியன்பிரதேசங்கள் பயனடைய உள்ளன.

“இந்த `உடான்' திட்டத்தில் விமானசேவை வழங்கும் விமானங்களுக்கு, விமானநிலையக் கட்டணம் மூன்று வருடங்களுக்கு இல்லை. மேலும், பலசலுகைகளையும் அளிக்க உள்ளது'' என இந்திய KPMG ரோஸ்பேஸ் மற்றும் பாதுகாப்பு நிறுவனத்தின் துணைத்தலைவர் அம்பர் துபே தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தின் மூலம் ஒருவர் 2,500 ரூபாய்க்குக் கிட்டத்தட்ட ஒரு மணிநேர விமானப் பயணத்தில் 500 கிலோமீட்டர் வரை பயணம் செய்யலாம்  அல்லது ஹெலிகாப்டரில் அரை மணிநேரம் பயணம் செய்யலாம். இந்தத் திட்டன் அடிப்படையில் இயங்கும் விமானங்களில் இருக்கை எண்ணிக்கைகள் 19 முதல் 78 வரை இருக்கும்.

சென்னையிலிருந்து கோயம்புத்தூர் செல்ல பண்டிகை காலங்களில் பேருந்துகள் வசூலிக்கும்கட்டணமே 2,000 ரூபாய்க்குமேல் இருக்கிறது. பேருந்துக் கட்டணத்தைக் காட்டிலும் விமானக் கட்டணம்குறைவாக இருந்தால், எல்லோரும் விமானத்திலேயே பயணிப்பார்கள். இந்த `உடான்' திட்டம் எல்லா நகரங்களையும் இணைக்கும் வகையில் வளர்ச்சியடைந்தால், பயணிகளுக்கு நிச்சயம் இது ஒரு வரப் பிரசாதமாக இருக்கும்.

Leave a Reply