இன்று வாக்கெடுப்பு நடந்தது என்று சொல்வதை விட, நடத்தப்பட்டு, வெற்றி பெற்றிருக்கிறது, தற்போதைய மந்திரி சபை சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகளால் வெற்றி பெற்றார்களா இல்லை என்றால் எதிர்கட்சியினரை தாக்கியதால் வெற்றி பெற்றார்களா? சட்ட சபையா? சட்டையை கிழித்த சபையா? வாக்குகளால் வெற்றியா? வாங்கப்பட்டதால் வெற்றியா? சுதந்திரமாக சட்டமன்ற உறுப்பினர்கள் சிந்தித்தார்களா? தந்திரமாக சிந்திக்க வைக்கப்பட்டார்களா? கூவாத்தூரில் கூட்டி (பூட்டி) வைக்கப்பட்டதன் காரணம் என்ன? எதிர்கட்சி ரகசிய வாக்கெடுப்பு கேட்டார்கள் ஆனால் சபாநாயகர் எதிர்கட்சியை வெளியேற்றிவிட்டு ரகசியமாக வாக்கெடுப்பு நடத்தி வெற்றி பெற்றதாக அறிவித்திருக்கிறார்கள்.


ஆரோக்கியமாக மாற வேண்டும் என அனைவரும் கவலையடைந்திருக்கின்ற நேரத்தில் களங்கப்பட்டு நிற்கிறது. தமிழக அரசியல் களம் கலகலப்பாக நடந்திருக்க வேண்டிய வாக்கெடுப்பு கைகலப்புடன் நடந்திருக்கிறது. சட்டவிதிகளுக்குள் நடந்திருக்க வேண்டிய வாக்கெடுப்பு சட்டை கிழிப்புகளுடன் நடந்திருக்கிறது.


எது எப்படி இருந்தாலும், நிலையான ஆட்சியாக ஊழல் கறைபடியாத ஆட்சியாக நடைபெற வேண்டும் என்பதே ஒவ்வொருவரின் விருப்பமாக இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்….. மக்களுக்கான ஆட்சியாக மலர்கிறதா என்று. இல்லை என்றால் மக்களே புறக்கணிப்பார்கள்.


பொது வாழ்வில் தூய்மை, பொதுமக்களுக்கான சேவை, என்பதே பாரதிய ஜனதா கட்சியின் தாரக மந்திரம். இன்றைய சூழலில் எண்ணம் இருந்தும் ஆண்டவரால் காப்பாற்ற முடியவில்லை. எண்ணிக்கை இருந்ததினால் ஆளுநரால் காப்பாற்ற முடியவில்லை. தமிழ்நாட்டை ஆள்பவர்கள் காப்பாற்றுகிறார்களா? ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். நிலையான ஆட்சி தான் மக்களின் விருப்பமே தவிர நிழல் ஆட்சி அல்ல மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.  என்றும் மக்கள் பணியில்

 

(Dr. தமிழிசை சௌந்தர்ராஜன்)

மாநில தலைவர்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.