வரலாறு தெரிந்து பேச வேண்டும் தமிழிசை என்று தி மு க செய்தி தொடர்பாளர் கூறியதால் வரலாற்றை திரும்பி பார்த்தேன். அந்த வரலாற்று துளிகளில் சில……………

1. பதவிக்காக கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தை தி மு க வரலாறு குறித்து பேசலாமா? 

2. 1991ல் ராஜிவ் காந்தி அவர்களின் மறைவுக்கு பின் அன்றைய மத்திய அமைச்சர் சுபோத் காந்த் சஹாய் அவர்களிடம்  "நான் என்றும் விடுதலைப் புலிகளை ஆதரித்ததே இல்லை,உண்மையான விடுதலைப் புலி ஆதரவாளர் நானில்லை, ஜெயலலிதாதான்" என்று தி மு க தலைவர் கருணாநிதி அவர்கள்  தன் அரசை கலக்கக்கூடாது என்று மன்றாடி கேட்டு கொண்டது உண்மையா, இல்லையா?

3.  ‘இலங்கையில் பல தமிழர்களைக் கொன்றவர்கள் புலிகள்.பிரபாகரன் ஒரு சர்வாதிகார மனப்பான்மை கொண்டவர் என்பதால், புலிகள் என்றாலே புளித்துப் போய்விட்டது’ என்றும் அன்றைய முதல்வர் கருணாநிதி கூறியது உண்மையா இல்லையா?

4."தமிழீழத் தனிநாடு இனிச் சாத்தியமானது அல்ல.
சம உரிமையும் சம அதிகாரமும் கொடுக்குமாறு சிங்களவர்களிடம் வேண்டிக் கொள்ள வேண்டும்" என்று தி மு க தலைவர் சொன்னது உண்மையா இல்லையா?

5."எதிலும் ஒரு நீக்குப் போக்கு வேண்டும் என்பார்கள். அங்கு இருக்கும் தமிழர்களுக்கு நன்மை செய்ய வேண்டுமானால், இ ங்கே நாம் ஆத்திரத்தோடு அல்லது வெறுப்பு உணர்வோடு, அங்குள்ள சிங்கள இனத்தின் மீது ஒன்றைச் சொல்லி அது வேறுவிதமான விளைவுகளை உண்டாக்கினால்… அது நல்லதல்ல! பேசும்போது சுவையாக இருக்கும். வீரமாகப் பேசலாம். சூறாவளிப் பேச்சு, புயல்பேச்சு, கடல் அலைப்பேச்சு, எரிமலைப்பேச்சு என்று புகழாரம் சூட்டலாம். ஆனால், சிங்களவர்களுடைய கோபத்தை அதிகமாக ஆக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதைத்தான் நீக்குப்போக்கு என்று சொன்னேன்'' என்று கூறிய தி மு க தலைவரின் வரலாற்றை மறந்து விட்டீர்களா? மறைத்து விட்டீர்களா?

6. ஸ்டாலினுக்கு விடுதலை புலிகளால் ஆபத்து உள்ளது என்றும் அதனால் அவருக்கு மத்திய அரசின் பாதுகாப்பு வேண்டும் என்றும்  கருணாநிதி அவர்கள் கேட்டது உண்மையா இல்லையா? அதனடிப்படையில் தான் இன்றும் ஸ்டாலினுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுக்கொண்டிருப்பது உண்மையா இல்லையா? தற்போது 7 பேரை விடுதலை செய்ய வேண்டி நாடகம் போடும் ஸ்டாலின் அவர்களே அவர்கள் அனைவரும் விடுதலை புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள் என்பதை மறந்து விட்டீர்களா? மறைத்து விட்டீர்களா?

7. எல்லாவற்றிற்கும் மேலாக போரை முடித்து வைக்கிறேன் என்று ஒரு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தது, பல லட்சக்கணக்கான தமிழர்களை முடித்து வைக்க தான் என்று ராஜபக்சே அவர்கள் கூறியதை உங்களால் மறைக்கவும் முடியாது. தமிழர்களால் மறக்கவும் முடியாது.

கச்சத்தீவை மீட்க பாராளுமன்றத்திலும், நீதிமன்றத்திலும் அன்றைக்கே போராடியது பாஜகவினர் தான் என்பதை உணருங்கள். ஆனால் அன்றைக்கு பதவி சுகத்திற்காக அமைதி காத்த தி முகவினர் இன்று வரலாறு குறித்து பேசுவது வரலாற்று பிழை. 1980களிலேயே மதுரை மாநாட்டில் இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வு கூறியவர் எங்கள் தலைவர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள். பாஜக ஆட்சியில் இலங்கைக்கு ஆயுதம் வழங்கவும் மாட்டோம், விற்கவும் மாட்டோம் என்ற கொள்கை முடிவெடுத்தவர்கள் நாங்கள். எதிர்க்கட்சியாக இருக்கும் போது விடுதலை புலிகளையும், இலங்கை தமிழர்களையும் தூண்டி விட்டு, ஆளும் கட்சியாக இருக்கும் போது பதவியை காப்பாற்றி கொள்ள தாண்டி செல்லும் கொடுங்கோலர்கள் தான் தி மு கவினர் என்பதை உலகறியும். 

நான் கல்லூரியில் படிக்கும் போதே மாணவியாக இலங்கை தமிழர்களுக்காக  களத்தில் இறங்கி போராடியவள். போருக்கு பிறகு இலங்கை தமிழர்களுக்காக வீதி வீதியாக சென்று நிவாரண பொருட்களை  திரட்டி அனுப்பியவள். இது நாள் வரையில் அவதியுறும் இலங்கை தமிழர்களை கண்டு ஆறுதல் சொல்லக்கூட  செல்ல மனமில்லாத, துணிவில்லாத தமிழக அரசியல்வாதிகள், அவர்களின் துயரத்தில் பங்கு கொள்ளாதவர்கள் ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுததிற்கு இணையானவர்கள். ஆனால், நேரடியாக இலங்கை சென்று அங்கே இருக்கும் தமிழர்களின்  நிலையை கண்டறிந்து, அவர்களின் தேவைகளின்  மத்திய அரசின் பார்வைக்கு எடுத்து சென்று தமிழின மக்களின் நல்வாழ்விற்கு  பங்காற்றியவள் நான் என்பதை மறந்து விடாதீர்கள். தமிழகத்தில் இருந்து தேயிலை தோட்ட வேலைக்கு சென்ற  மலையக இலங்கை தமிழர்களின் துயரம்  குறித்து தமிழக அரசியல் கட்சிகள் இன்று வரை ஒரு சிறு துரும்பையும் கிள்ளி போடாத நிலையில், எங்கள் பாஜக அரசு தான் அவர்களுக்கு தேவையான உரிமைகளையும், அடிப்படை தேவைகளையும் நிறைவேற்றி தந்திருக்கிறது என்பதை உங்களால் மறுக்க முடியுமா? மறைக்க முடியுமா?

கபட நாடகம் போடும் உங்களின் தமிழர் பாசம் குறித்து ஒரு சிறிய மாதிரி தான் மேலே கூறியவைகள். உங்களின் தூண்டுதலால், அரசியல் வேட்கையினாலும், பதவி வெறியினாலும் தான் இலங்கை தமிழர்கள் இன்னலுக்குள்ளானார்கள் என்பதை மேலும் வெட்ட வெளிச்சமாக்குவோம். வரலாறு குறித்து எங்களுக்கு பாடம் தேவையில்லை. உண்மையான வரலாறு குறித்த பாடத்தை உங்களுக்கு பாஜக புகட்டும்.

 

டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்

தமிழக பாஜக தலைவர்.

Leave a Reply

Your email address will not be published.