அசைவ உணவுகளை உண்பதால் பல்வேறுவகையான புற்று நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார்.


இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்யக்கூடாது என்று மத்திய அரசு பிறப்பித்த உத்தரவால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளநிலையில், இத்தகைய கருத்துகளை ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார்.பசு, எருது, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகளை இறைச்சிக்காக விற்பனை செய்யக்கூடாது என்று மத்திய அரசு அண்மையில் உத்தரவிட்டது.


இந்த உத்தரவானது நாடுமுழுவதும் கடுமையான விமர்சனங்களுக்கு வித்திட்டது.இந்நிலையில், இதுதொடர்பாக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் செய்தியாளர்களிடம் தில்லியில் திங்கள் கிழமை கூறியதாவது:


பொதுவாக அசைவத்தைக் காட்டிலும் சைவ உணவுப்பழக்கமே சிறந்தது. மேலை நாடுகளில் பெரும்பாலானோர் தற்போது சைவ உணவுப் பழக்கத்துக்கு மாறிவருவதே அதற்குச் சான்று.ஆய்வுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, பல்வேறு வகையான புற்றுநோய்கள் வருவதற்கும், அசைவ உணவுப் பழக்கத்துக்கும் நிறைய தொடர்புகள் உள்ளன.


எந்த வகை உணவை உண்ணவேண்டும் என்பது தனிநபர் விருப்பம் சார்ந்தது. இந்த விவகாரத்தைப் பொருத்தவரை மக்களின் உணவுப்பழக்கத்தை மாற்ற வேண்டும் என்பதோ, வர்த்தக நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்த வேண்டும் என்பதோ அரசின் நோக்கமல்ல என்றார் அவர்.

Leave a Reply