கர்நாடகம், மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் செயல் படுத்தப்பட்டு வரும் கல்வி, மருத்துவம், ரயில்வே, உள்க்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறுதுறைகள் சார்ந்த திட்டங்களின் நிலை குறித்த மாதாந்திர ஆய்வை, பிரதமர் தில்லியில் இருந்தபடி, நவீனதொழில்நுட்ப முறையில் (ஐசிடி) புதன்கிழமை மேற்கொண்டார்.


 இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
 இந்த ஆய்வின் போது, மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் ஊக்கத் தொகையை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாகவும், இதற்கான காரணத்தை அறியவிரும்புவதாகவும் கல்வித்துறை அதிகாரிகளிடம் பிரதமர் மோடி கேட்டார். மேலும், மாணவர்கள் தொடர்பான அனைத்து குறைகளுக்கும் துரிதமாக தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


 இந்தியா-வங்கதேசம் இடையே போக்கு வரத்து இணைப்பை ஏற்படுத்துவதில் முக்கியமாக கருதப்படும் அக்ஹெளரா -அகர்தாலா ரயில்பாதை அமைக்கும் திட்டத்தின் தற்போதைய நிலை குறித்தும் துறை அதிகாரிகளிடம் மோடி கேட்டறிந்தார்.


தூய்மை இந்தியா திட்டம், திருத்தியமைக்கப் பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டம், தாய்சேய் இறப்பு விகிதத்தை குறைக்கும் திட்டம் ஆகிய தேசியளவில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் பற்றியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் மோடி ஆலோசனை மேற்கொண்டார் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply