மாண்புமிகு மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணையமைச்சர் திரு.பொன்.இராதாகிருஷ்ணன் அவர்களின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து செய்தி

முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை சதுர்த்தி விழாவில் அனைவருக்கும் எல்லா நலன்களும், வளங்களும் கிடைக்க வேண்டும் என்றும், நமது நாடு உலகின் மகோன்னதமான முதல்நிலை அடைய வேண்டும் என்றும் வேண்டுகிறேன்.

    125 ஆண்டுகளுக்கு முன்பாக மத வழிபாட்டிற்காக மட்டுமே பயன்படுத்தி வந்த விநாயகர் சதுர்த்தி விழாவை, 1893ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்ட வீரரும், அன்றைய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான பால கங்காதர திலகர் அவர்கள் தேச பக்தியை உருவாக்கும் ஒரு தேசிய விழாவாக விநாயகர் பெருமானை வீதிகள் தோறும் வரச் செய்தார். வீடுகளில் இருந்த விநாகரை மக்கள் தங்கள் கைகளாலேயே வீதியில் எடுத்துவர செய்து அனைவரையும் ஒன்றிணைத்து  வழிபாடு செய்ய வைத்தார். அவ்விழாக்கள் ஆன்மீக எழுச்சிக்கு பயன்பட்டதை விட சுதந்திரப் போராட்ட வேள்விக்கு மக்களை ஒருங்கிணைத்த விழாவாகவே அன்றைய தேசிய காங்கிரஸ் கட்சியினரால் பொதுமக்களால் கொண்டாடப்பட்டது. இன்றும் திலகர் அவர்கள் துவக்கி வைத்த விநாயகர் சதுர்த்தி விழாவின் நோக்கம் சிதறாமல் 125 ஆண்டுகள் கடந்தும் தேசபக்தி விழாவாக நடைபெற்றுக் கொண்டிருப்பது தேசத்திற்கும், தேச பக்தர்களுக்கும் கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றியாகும்.

   இந்த நல்ல நாளில் விநாயகப் பெருமானை வழிபடும்போது நமது நாடு எல்லாத்துறையிலும் வளர்ச்சிபெற்று உலகில் முதல்நிலை நாடாக உருவாக நாம் ஒவ்வொருவரும் பிரார்த்திப்போம். இவ்விழாவை தேசத்திற்காக அர்ப்பணித்த திலகர் அவர்களுக்கு நமது நன்றிகளை காணிக்கையாக்குவோம்.

                விநாயகர் சதுர்த்தி விழா மதங்களை கடந்த ஒரு தேசபக்தி விழாவாக கொண்டாட ஒவ்வொரு இந்தியரும் முன்வர வேண்டும். இதில் அரசியல் தலையீடுகள், மத ரீதியான தலையீடுகள் இல்லாத வண்ணம் அனைவரும் ஒற்றுமையுடன் கொண்டாட வேண்டும். அரசும் இக்கொண்டாட்டதிற்கு துணையாக இருக்க வேண்டும். அனைவருக்கும் என் மனமார்ந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

–     பொன். இராதாகிருஷ்ணன்

Leave a Reply