அமித்ஷா இயல்பாக சகோதரத்துவத்துடன் சொன்னதை பெரிதுபடுத்தக் கூடாது. அமித் ஷா, ஓபிஎஸ் மேனரிசத்தை வைத்து முடிவு செய்யக் கூடாது. தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியின் கீழ்தான் பாஜக உள்ளது என தமிழிசை கூறியுள்ளார்.

சென்னையில் முதல்வர் பழனிசாமியைச் சந்தித்த பின் இன்று செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு தமிழிசை பதில் அளித்தார்.

கூட்டணிப் பேச்சு வார்த்தை எப்படி இருக்கிறது?

கூட்டணிக் கட்சி என்று இருக்கும் போது பல கட்சிகள் இணைந்து தொகுதிப் பங்கீடு இருக்கும். எதிரணியினர் பயங்கரமான பதற்றத்தில் இருக்கிறார்கள். அமித்ஷா பேசியதை வைத்து எங்கே போய் எங்கே குழப்பலாம் என்று பெரியவிவாதம் நடக்கிறது. இயல்பாக தலைவர்கள் அன்பாகப் பேசியது அது. சில பேருக்கு ஒரு மேனரிசம் இருக்கும். அதை வைத்து முடிவு செய்யக்கூடாது.

இயல்பாக, அன்பாக, சகோதரத்துவத்துடன் பேசியதைவைத்து அமித் ஷா அதிகாரமாகப் பேசுகிறார், ஓபிஎஸ் பணிந்துபோகிறார் என்பதெல்லாம் ஒன்றுமில்லை. தேசியளவில் மோடி தலைவர். தமிழகத்தில் அதிமுக பிரதான கட்சி. ஆகவே, அதிமுக தலைமையிலான கூட்டணியில் தான் பாஜக உள்ளது.

தேமுதிக உங்களுடன் வருவார்களா?

தேமுதிகவிடம் இழுபறி எல்லாம் இல்லை. தோழமையுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. அந்தக்காலத்தில் பழம் நழுவிப் பாலில் விழுந்தது என்று கூறிய வசனம் எல்லாம் இல்லை. அப்படிப்பேசிவிட்டு தேமுதிகவை உடைத்ததில் திமுகவுக்கு பெரிய பங்கு உள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேசநலனில் அக்கறை கொண்டவர். ஆகவே, அவர் எங்களுடன் வருவார் என்பதில் நம்பிக்கை உள்ளது.

ஸ்டாலின், திருநாவுக்கரசர் போய் விஜய காந்தைச் சந்தித் துள்ளார்களே?

அவர்கள் நலம் விசாரிக்கச் சென்றார்கள். நலம் விசாரிக்கப்போவது வேறு, பேச்சுவார்த்தைக்குப் போவதுவேறு. விஜயகாந்தைச் சந்திப்பதெல்லாம் தேர்தலுக்காக அல்ல. அவர் உடல் தேறுதலுக்கான சந்திப்பு அது.

தேமுதிக உங்கள் கூட்டணியில்தான் வரும் என உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா?

இல்லை. நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம் என்று தான் சொல்கிறேன். தேமுதிக எங்களுடன் வரும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.

Leave a Reply