மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு குஜராத் மாநிலம், ஆமதாபாதில் உள்ள தனியார் மருத்துவமனையில் புதன் கிழமை சிறிய அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதன்பிறகு அவர் தனது இல்லத்துக்கு சென்றார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக குஜராத்துக்கு ஒருநாள் பயணம் மேற்கொண்ட அமித்ஷா, ஆமதாபாதில் உள்ள கே.டி.மருத்துவமனையில் புதன் கிழமை காலை திடீரென அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், இதுதொடர்பாக கே.டி. மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அமித்ஷா புதன்கிழமை  அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவரது கழுத்துப்பகுதியின் பின்புறத்தில் கொழுப்பு சதைகள் வளர்ந்திருப்பது தெரியவந்தது. அதையடுத்து, சிறிய அறுவை சிகிச்சை மூலம் அந்தச் சதைகள் நீக்கப்பட்டன. அதன் பின்னர் அவர் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பாஜக செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,  வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அமித்ஷா மருத்துவமனைக்குச் சென்றார். பரிசோதனை முடிவில், கொழுப்புச்சதை நீக்கத்துக்காக சிறிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின் அவர் வீடு திரும்பினார். அவருக்கு உடலில் எந்தப்பிரச்னையும் இல்லை. உடல்நலம் சீராக உள்ளது என்றார்.குஜராத்தில் உள்ள அமித் ஷா, வியாழக்கிழமை தில்லிதிரும்புவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Comments are closed.