அமெரிக்காவிடம் இருந்து  சுமார் ரூ. 5,091 கோடி மதிப்பீட்டில்  145 இலகு ரக பீரங்கி வாகனங்களை கொள்முதல் செய்வதற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், 18 "தனுஷ்' ரக பீரங்கி வாகனங்களை தயாரிப்பதற்கும் ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது.

போஃபர்ஸ் ஊழல் அம்பலமாகி, 30 ஆண்டுகளுக்கு பிறகு, வெளிநாட்டில் இருந்து பீரங்கிவாகனங்கள் கொள்முதல் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். பாதுகாப்பு கொள்முதல்கவுன்சில் கூட்டம், தில்லியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.


 இந்தக்கூட்டத்தில், ரூ.28,000 கோடி மதிப்பிலான புதியதிட்டங்கள் உள்பட 18 திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.  கூட்டத்துக்கு பிறகு, பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்தஅதிகாரி ஒருவர் கூறியதாவது:
 சீன எல்லையை ஒட்டி அமைந்துள்ள அருணாசல பிரதேசம், ஜம்மு-காஷ்மீரின் லடாக் ஆகிய உயரமான பகுதிகளில் பாதுகாப்புப்பணியில் நிறுத்தி வைப்பதற்காக, பீரங்கி வாகனங்களை வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்து அமெரிக்காவுக்கு இந்தியா கடிதம் அனுப்பி யிருந்தது. அந்தக் கடிதத்துக்கு அமெரிக்கா பதில் அனுப்பியிருந்தது.

அதில், அமெரிக்கா குறிப்பிட்டிருந்த நிபந்தனைகளை பாதுகாப்புகொள்முதல் கவுன்சில், விவாதித்து, அவற்றை ஏற்றுக்கொண்டது. அதன்படி, அமெரிக்காவிடம் இருந்து 145 இலகு ரக பீரங்கி வாகனங்களை கொள்முதல் செய்வதற்கு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப் பட்டது. இதற்கான ஒப்புதல் கடிதம் விரைவில் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்படும்.

முதல் கட்டமாக, 25 பீரங்கி வாகனங்கள் தயார்நிலையில், இந்தியாவுக்கு வரும். எஞ்சிய வாகனங்கள், இந்தியாவிலேயே தயார்செய்யப்படும். இதனால், போக்குவரத்து செலவுகுறையும். இதுதவிர, 18 தனுஷ் ரக பீரங்கி வாகனங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கவும் பாதுகாப்பு கொள்முதல்கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்ப்பட்டது என்று அந்த அதிகாரி கூறினார்.

Leave a Reply