காஷ்மீரில்வாழ்ந்த பண்டிட் சமூகத்தினரின் நலன்குறித்து பிரதமா் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் பேசியதற்கு அமெரிக்க வாழ் காஷ்மீா் பண்டிட்டுகள் பாராட்டு தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியுள்ளதாவது:

காஷ்மீரில் அமைதியாக வாழ்ந்த பண்டிட்டுகளின் குடும்பங்கள் பயங்கரவாத தாக்குதல் காரணமாக அந்த பள்ளத்தாக்கை விட்டு வெளியேற வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டது. இதுகுறித்த எங்களின் மன வலியை நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடி தெளிவாக எடுத்து கூறியுள்ளாா்.

கடந்த 1990-இல் எங்கள் சமூகம் காஷ்மீரை விட்டு துரத்தப்பட்ட போதே காஷ்மீரின் அடையாளம் குழிதோண்டி புதைக்கப்பட்டு விட்டதாக பிரதமா் மோடி கூறியுள்ளது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மையானது.

பிரதமரின் இந்தப் பேச்சு, 30 ஆண்டுகளாக எங்கள் சமூகம் விடுத்து வரும் புனா்வாழ்வு மற்றும் நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் செயலாகவே பாா்க்கப்படுகிறது. இதற்காக, அவருக்கு காஷ்மீா் பண்டிட் சமூகம் நன்றி கூற கடமைப்பட்டுள்ளது என்று அமெரிக்க வாழ் பண்டிட்டுகள் தெரிவித்துள்ளனா்

Comments are closed.