மத்திய அரசுத்துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் பணி நியமனம், பணியிடமாற்றம் உள்ளிட்ட விவகாரங்களில் இனி முக்கியப்பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோரின் சிபாரிசுகளுக்கு இடமில்லை என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

மேலும், இதுபோன்ற விவகாரங்களில் அரசியல் செல்வாக்கை பயன் படுத்த முயலும் அதிகாரிகள் மீது துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து பிரதமர் அலுவலக வட்டாரங்கள் சனிக் கிழமை தெரிவித்ததாவது: மத்திய அரசின் கீழ் பணியாற்றும் இரண்டு உயரதிகாரிகள், தாங்கள்விரும்பும் பதவிகளைப்பெற குறிப்பிட்ட ஒரு எம்.பி. மூலமாக முயற்சிப்பதாக, பிரதமர் அலுவலகத்துக்கு கடந்தாண்டு ஆகஸ்ட்மாதம் தகவல்கிடைத்தது. அதேபோல், வருமான வரித்துறை அதிகாரிகளின் இடமாற்ற விவகாரங்களில் சில எம்.பி.க்கள் தலையிடுவதாக, அந்தத்துறை சார்ந்த உயரதிகாரிகள் பிரதமர் அலுவலகத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

எனவே, பணிநியமனம், பணியிடமாற்றம் உள்ளிட்ட விவகாரங்களில் அரசியல்தலைவர்களின் சிபாரிசுகளை ஏற்கக்கூடாது. அத்தகைய விவகாரங்களில் விதிமுறையின்படியே உயரதிகாரிகள் செயல்படவேண்டும். விதிமுறைகளை மீறும் அதிகாரிகள் மீது துறை ரீதியிலான ஒழுங்குநடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று அனைத்துத் துறைகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

இதுதொடர்பாக, கடந்த 1964-ஆம் ஆண்டின் மத்திய அரசு ஊழியர்கள் நடத்தைவிதிகள் சட்டத்தின் 20-ஆவது பிரிவை அமல்படுத்தவேண்டும் என்று பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், பிரதமர், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட உயர்பதவிகளில் இருப்பவர்களிடம் சிபாரிசுகளைக் கோரி அணுகுவதும், விதிமுறைமீறலே. மத்திய அரசின்கீழ் பணிபுரியும் எந்தவொரு ஊழியரும் தங்களது பணிசார்ந்த விவகாரங்களில் உயரதி காரிகளை வற்புறுத்தும் விதமாக, அரசியல் சிபாரிசு களையோ அல்லது வேறு வெளிப்புற சிபாரிசுகளையோ பெறுவதோ, பெறமுயற்சிப்பதோ கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக, கடந்த இரண்டாண்டுகளில் தனிப்பட்டகாரணங்கள், பதவிஉயர்வுகள், மாநில அரசுகளின் கோரிக்கைகள் உள்ளிட்ட காரணங்களுக்காக, மத்திய அரசுப்பணிகளில் இருந்த 62 ஐஏஎஸ் அதிகாரிகள் பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே அவரவர் சொந்த மாநிலங்களுக்கே அனுப்பிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply