கச்சா எண்ணெய் வளத்தை வைத்து கொண்டு வாலாட்டி வரும் அரபு நாடுகளுக்கு இந்தியா செக் வைத்துள்ளது. இந்தியாவுடன் இணைந்து செயல்பட சீனா, ஜப்பான் உள்பட உலகின் வலுவான நாடுகள் முடிவு செய்திருப்பதால், கச்சா எண்ணெய் விலையில் இனி அரபு நாடுகள் வைத்ததுதான் சட்டம் என்ற நிலை மாறும். இதுகுறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

 

பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் மூலப்பொருளான கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்யும் நாடுகள் ஒருங்கிணைந்து, ஓபெக் என்ற கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. கத்தார், சவுதி அரேபியா, ஈரான், ஈராக், குவைத் உள்பட 14 நாடுகள் ஓபெக் கூட்டமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன.

 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை நிர்ணயிப்பதில் சர்வ வல்லமை பொருந்திய கூட்டமைப்பாக ஓபெக் திகழ்கிறது. தங்களிடம் உள்ள எண்ணெய் வயல்களில் வளம் காரணமாக, உலக பொருளாதாரத்தில், ஓபெக் கூட்டமைப்பு மறைமுகமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

ஓபெக் கூட்டமைப்பு சில சமயங்களில், கச்சா எண்ணெய் உற்பத்தியை திடீரென குறைத்து விடுகிறது. கச்சா எண்ணெய்யின் விலை அதிகரிக்க இது காரணமாகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்தே, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

எனவே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையை குறைக்க உதவும் வகையில், உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என இந்தியா போன்ற நாடுகள் கோரிக்கை வைப்பதும், அதனை ஓபெக் கூட்டமைப்பு மறுப்பதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில், 60 சதவீதத்தை ஓபெக் கூட்டமைப்புதான் பூர்த்தி செய்கிறது. இதனால் ஓபெக் கூட்டமைப்பை எதிர்த்து இந்தியாவால் எதுவும் செய்ய முடியாத நிலை, கடந்த பல வருடங்களாகவே நீடித்து வருகிறது. அவர்களிடம் இந்தியாவால் பேரம் பேசவே முடிவதில்லை.

எனினும் ஓபெக் கூட்டமைப்பின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க, நீண்ட நாட்களாகவே இந்தியா முயன்று வருகிறது. இதற்காக தற்போது சீனா உள்ளிட்ட நாடுகளுடன் கைகோர்க்க இந்தியா முடிவு செய்துள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

! கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளை ஒருங்கிணைத்து, 'ஆயில் பையர்ஸ் கிளப்' என்ற கூட்டமைப்பை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, இந்தியாவும், சீனாவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. கச்சா எண்ணெய்யின் விலையை குறைக்கும்படி ஓபெக் கூட்டமைப்பிடம் பேரம் பேச ஆயில் பையர்ஸ் கிளப் உதவும்.

உலகில் உற்பத்தி செய்யப்படும் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய்யில் 17 சதவீதத்தை, இந்தியாவும், சீனாவும்தான் வாங்குகின்றன. எனவேதான் சீனாவுடன் கைகோர்த்து, ஓபெக் கூட்டமைப்பிற்கு 'செக்' வைக்க இந்தியா தற்போது முயன்று வருகிறது.

சர்வதேச எனர்ஜி ஃபோரம் (IEF) என்ற அமைப்பின் கூட்டம் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. ஓபெக் கூட்டமைப்பிற்கு எதிராக இணைந்து செயல்படுவதற்கு இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும், அந்த கூட்டத்திலேயே சம்மதம் தெரிவித்திருந்தன.

வலுவான ஓபெக் கூட்டணிக்கு எதிராக நாமும் கூட்டணியாக இருந்தால்தான் பேரம் பேசும் சக்தியை பெற முடியும் என்பதை இரு நாடுகளும் புரிந்து கொண்டு விட்டன. அத்துடன் ஆயில் பையர்ஸ் கிளப்பில், ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளையும் இணைக்க முயற்சி நடந்து வருகிறது.

உலகில் அதிகம் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும், சீனா 2வது இடத்திலும், இந்தியா 3வது இடத்திலும், ஜப்பான் 4வது இடத்திலும், தென் கொரியா 5வது இடத்திலும் உள்ளன. எனவே இந்த நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்தால் மட்டுமே ஓபெக்கின் அதிகாரத்தை குறைக்க முடியும்.

இதுதவிர உலக வல்லசரான அமெரிக்காவின் உதவியை நாடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா தனது நாட்டில் தனியாக கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்து வருகிறது. அதனை அதிக அளவில் வாங்கி, ஆசியாவிற்குள் கொண்டு வரவும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

 

 

கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்யும் நாடுகளுக்கு எதிராக, ஆசிய கண்டத்தில் அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் நாடுகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில்  தற்போது இந்தியா ஈடுபட்டுள்ளது.

மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசில், பெட்ரோலிய துறை அமைச்சராக அங்கம் வகிக்கும் தர்மேந்திர பிரதான், இந்த விஷயத்தில் அதிக தீவிரம் காட்டி வருகிறார். இம்முறை வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், ஓபெக் கூட்டமைப்பு பீதியடைந்துள்ளது.

கடந்த 2017ம் ஆண்டில், ஒரு நாளைக்கு 6.9 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் தேவைப்பட்டது. ஆனால் 2023ம் ஆண்டில் கச்சா எண்ணெய் தேவை ஒரு நாளைக்கு 104.7 மில்லியன் பேரல்களாக அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. எனவே இந்தியாவின் முயற்சி வெற்றி பெற்றால் மட்டுமே எதிர்காலத்தில், பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் வைக்க முடியும்.

நன்றி அருண் முத்து

Leave a Reply