‘22.12.2018 துக்ளக் இதழ் அட்டைப் படத்திற்குப் பதில் அளிக்கும் வகையில், ராஜஸ்தான், ம.பி., மற்றும் சத்தீஸ்கர் மாநில அரசுகள், அம்மாநில விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்துள்ளது பற்றி எஸ்.வெங்கட்நாராயணன் என்ற வாசகர் திருச்சி – 18 லிருந்து கேள்வி எழுப்பி இருக்கிறார்.

அந்த அரசாங்கங்கள் விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்கிறோம் என்று அறிக்கைகள்தான் விட்டிருக்கின்றன. கடனை தள்ளுபடி செய்வது என்பது அறிவிப்பால் மட்டும் நடந்து விடாது. கடன் கொடுத்த வங்கிகளுக்கு கடனை அரசாங்கம் திரும்பக் கொடுத்தால்தான், கடன் தள்ளுபடியாகியதாகும். அதற்கு அந்த அரசாங்கத்திடம் நிதி தேவை. அந்தத் தொகை பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். இல்லையென்றால், கடன் ரத்து வெற்று அறிவிப்புத் தான்.

உதாரணமாக, கர்நாடகாவில் கடந்த மே மாதம் தேர்தல் நடந்தது. ஜூலை மாதம் 2 லட்சம் ரூபாய் வரைக்கும் கடன் ரத்து ஆனதாக கர்நாடக அரசு அறிவித்தது. ஆனால், ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட மொத்த கடன் ரூ. 45,000 கோடியில் டிஸம்பர் வரை ரூ.8,200 கோடி மட்டும்தான் உண்மையில் அரசாங்கத்தால் திரும்பக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ரூ.8,200 கோடிதான் உண்மையில் ரத்து ஆன கடன். (பிசினஸ் டுடே 24.12.2018 ). அந்த அளவுக்குத்தான் அரசின் கஜானாவில் பணம் இருந்தது. அரசு வங்கிகளுக்குப் பணம் கொடுத்தால் தான் கடன் ரத்து ஆகும்.

கர்நாடகாவில் கடன் ரத்து அறிவிப்பு வந்த பிறகும் வங்கிகள், விவசாயிகளுக்குக் கடன் வசூல் நோட்டீஸ் அனுப்பிக் கொண்டிருக்கின்றன. சொத்துக்களை ஏலத்துக்குக் கொண்டு வருகிறார்கள். அதனால் தினமும் சராசரி 2 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று செய்தி. அதே போல 2017-ல் பஞ்சாபில் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட கடன் தொகை ரூ.10,000 கோடி. ஆனால், பட்ஜெட்டில் அதற்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.3,000 கோடி மட்டுமே.  ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கரில் மொத்த விவசாயக் கடன் தொகை ரூ 1.47 லட்சம் கோடி. இந்த கடன் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்தாகி விட்டது. ஆனால், வரும் ஆண்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கினால்தான் கடன் ரத்து ஆகும். கர்நாடகா, பஞ்சாப் போல ரத்து செய்ததாக அறிவிக்கப்பட்ட கடனை வங்கிகளுக்குக் கொடுக்க, பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை. எனவே, அதற்கு வேண்டிய அளவுக்கு கஜானாவில் பணம் இல்லை.

சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும். எனவே, கடன் ரத்து அறிவிப்பினால் மட்டும் கடன் ரத்து ஆகாது. தவிர, அரசு உடனே பணம் கட்டவில்லையென்றால், அடுத்த ஆண்டு விவசாயிகளுக்கு வங்கிகள் கடன் கொடுக்காது. எனவே, கொடுத்த கடனை அடைத்து புதிய கடனைப் பெறும் சுழற்சி தடைப்படும். எனவே, கடன் ரத்து அறிவிப்புக்கும், பணத்தைக் கொடுப்பதற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். துக்ளக் இதழ் அட்டைப் படத்தில் 10 நாட்களில் கடன் ரத்து செய்யப்படும் என்பதற்குப் பயந்து, ராஹுல் காந்தி முக்காடிட்டு அமர்ந்திருப்பது போல கார்ட்டூன் வந்த பிறகு, கடன் ரத்து அறிவிப்பு வந்ததால், சில வாசகர்கள் அவசரப்பட்டுவிட்டீர்கள் என்றும், சிலர் கேவலமாகவும் கூட விமர்சனம் செய்து கடிதம் எழுதியிருந்தார்கள். ஆனால், நாம் குறிப்பிட்டது கடன் ரத்து அறிவிப்பை அல்ல. உண்மையான கடன் ரத்தை. அதை 10 நாட்களில் செய்யவே முடியாது. இதற்கு பஞ்சாபும், கர்நாடகாவும் உதாரணம். அதை பத்து நாளில் செய்ய முடியாது என்று தெரிந்தும், ராஹுல் காந்தி செய்வோம் என்றும் கூறியதைத்தான் துக்ளக் சுட்டிக் காட்டியது.

 

Leave a Reply