தமிழிசை சவுந்தர ராஜன் குறித்து அவதூறாக பேசிய பெண்மீது வழக்குபதிவு செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் குறித்து பெண் ஒருவர் அவதூறாக பேசும்வீடியோ காட்சிகள், சமூக வலை தளங்களில் பரவி வருகிறது. அந்தப்பெண் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக மாநில செயலாளர் அனு சந்திரமவுலி உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்றுமுன்தினம் டிஜிபி டி.கே.ராஜேந்திரனை நேரில்சந்தித்து புகார் கொடுத்துள்ளனர்.

புகாரின் பேரில் போலீஸார் நடத்திய விசாரணையில், அவதூறாக பேசிய அந்த பெண்ணின் பெயர் சூர்யா என்பது தெரியவந்தது. அவர்மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர். இதனால் அந்தப்பெண் குறித்த விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

இதற்கிடையே, இதேவிவகாரம் குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக மகளிர் அணி தலைவி மகாலட்சுமியும் நேற்று புகார் மனு கொடுத்துள்ளார். டிஜிபியிடம் கொடுக்கப்பட்ட புகாரும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. இரு புகார்களின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக போலீஸார் கூறும் போது, ‘‘தமிழிசை குறித்து அந்தப் பெண்ணின் வீடியோ ஒருநிமிடம் 10 விநாடிகள் ஓடுகிறது. அந்தப்பெண்ணே செல்பி வீடியோவாக எடுத்து முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை வைத்துதான் தற்போது விசாரணை நடந்துவருகிறது. முகநூலில் அந்தப் பெண்ணின் பெயர் சூர்யா ஆரோ என்று பதிவிடப் பட்டுள்ளது. ஆனால், மற்றொரு இடத்தில் அதேபெண் பர்தா அணிந்து நிற்பது போன்றும், 2 இளைஞர்களுடன் அமர்ந்து இருப்பது போன்றும் புகைப்படங்கள் கிடைத்துள்ளன. அந்தப்பெண் சென்னையைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று நினைக்கிறோம்.

விரைவில் அவரைப்பிடித்து விடுவோம். வழக்குப் பதிவு, கைது செய்வது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்’’ என்று தெரிவித்தனர்.

Leave a Reply