நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது. இதில் எதிர்க் கட்சிகள் பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி அமளியில் ஈடுபட்டுவருகின்றது. எதிர்க் கட்சிகளின் அமளிகளுக்கு நடுவே பல்வேறு மசோதாக்கள் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டு வருகின்றது. இதில், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தொடர்பான சட்டதிருத்த மசோதா நேற்று மாநிலங்களவையில் விவாதத்துக்குவந்தது. விவாதம் முடிவடைந்து திருத்தங்கள் மீது வாக்கெடுப்பும் நடைபெற்றது.

 

வாக்கெடுப்பின்போது, பா.ஜ.க. தரப்பு எம்.பி.க்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளைச்சேர்ந்த சுமார் 30 எம்.பி.க்கள் அவையில் இல்லை. இது எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக மாறிவிட்டது. அவர்கள் கொண்டுவந்த திருத்தங்கள் பெரும்பான்மையுடன் நிறைவேறியது. இது பா.ஜ.க. தரப்புக்கு சங்கடமான நிலையை ஏற்படுத்தியது. 

 

இந்த நிலையில், பா.ஜ.க. பாராளுமன்றக்குழு கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அவை நடைபெறும் போது கண்டிப்பாக உள்ளே இருக்கவேண்டும் என்று பா.ஜ.க. மாநிலங்களவை எம்.பி.களுக்கு அமித்ஷா வலியுறுத்தினார்.  

 

கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பாராளுமன்ற விவகாரங்களுக்கான மந்திரி அனந்த் குமார், ‘பா.ஜ.க. எம்.பி.க்கள்  நிச்சயம் அவையில் இருக்கவேண்டும். அவையில் எம்.பி.க்கள் இல்லாத விவகாரத்தை தலைவர் (அமித்ஷா) தீவிரமாக எடுத்துள்ளார். இதுபோன்று திரும்பவும் நடைபெறக் கூடாது” என்றார்.

 

இன்றைய கூட்டத்தில் பிரதமர் கலந்துகொள்ளவில்லை. இருப்பினும், அவையில் இல்லாத வர்களின் பட்டியல் நேற்று இரவுகேட்டதாக கூறப்படுகிறது.

Leave a Reply