வரும் ஆகஸ்ட் 15- ம் தேதிக்குள் நாட்டில் உள்ள அனைத்து வணிகர்களையும் சரக்கு- சேவைவரியின் (ஜிஎஸ்டி) கீழ் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்து மாநில தலைமைச் செயலர்களையும் பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்தியுள்ளார்.


'திறன்மிகு நிர்வாகம், குறித்த காலத்தில் செயலாக்கம்' என்ற தலைப்பில் அனைத்து மாநில தலைமைச் செயலர்கள், உயரதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் காணொலிக் காட்சி முறையில் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திரமோடி தலைமை வகித்தார். இதில் மத்திய அரசால் மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் ரயில்வே, சாலை அமைப்பு, பெட்ரோலிய திட்டங்கள் உள்பட பல்வேறு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் பிரதமர் கேட்டறிந்தார்.


முக்கியமாக தமிழகம், ஆந்திரம், மகாரஷ்டிரம், கர்நாடகம், மேற்கு வங்கம், ஒடிஸா, உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், ஹிமாசலப் பிரதேசம், அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்று வரும் உள்கட்டமைப்பு பணிகளை பிரதமர் ஆய்வு செய்தார்.


தமிழகத்தில் சென்னை கடற்கரை –  கொருக்குப்பேட்டை இடையிலான மூன்றாவது ரயில் வழித்தடம், சென்னை-  அத்திப்பட்டு இடையே நாலாவது ரயில் வழித் தடம் ஆகியவை பிரதமரின் இந்த ஆய்வில் இடம் பெற்றது.
பல்வேறு மாநிலங்களில் 10 ஆண்டுகள் முதல் 40 ஆண்டுகளுக்கு மேல்வரை கிடப்பில் இருக்கும் முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து அதிகாரிகளிடம் மோடி கேட்டறிந்தார்.

இது தொடர்பாகப் பேசிய மோடி, 'உள்கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்றுவதில் கால தாமதம் ஏற்படுவதால் அவற்றுக்கான செலவும் வெகுவாக அதிகரித்து வருகிறது. எனவே, இத்திட்டங்களை முடிந்தளவுக்கு வேகமாக முடிக்க அதிகாரிகள் தீவிர முயற்சி எடுக்க வேண்டும்' என்று வலியுறுத்தினார்.


ஜிஎஸ்டி வரிவிதிப்பு அமலுக்கு வந்துவிட்ட நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் 15- ஆம் தேதிக்குள் நாட்டில் உள்ள அனைத்து வணிகர்களையும் ஜிஎஸ்டி- யில் பதிவுசெய்ய மாநில அரசின் தலைமைச் செயலாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மோடி அறிவுறுத்தினார்.

நகர்ப்புறங்களில் மேற்கொள்ளப்படும் பிரதமர் வீட்டுவசதித் திட்டமும் ஆய்வில் முக்கிய இடம் பெற்றிருந்தது. இத்திட்டத்தில் நவீன கட்டுமானத் தொழில்நுட்பங்களைப் பயன் படுத்த வேண்டுமென்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.

Leave a Reply