பெண் எம்பி ரமாதேவி குறித்து ஆபாசமாக பேசிய சமாஜ்வாதி எம்பி ஆசம்கானுக்கு எதிராக சபாநாயகர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் ஸ்மிருதி இராணி ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

லோக்சபாவில் நேற்று முத்தலாக்தடை மசோதா குறித்து விவாதம் நடந்தது. அப்போது சபாநாயகர் ஓம் பிர்லா அவையில் இல்லை. இதனால் சபா நாயகர் இருக்கையில் பாஜக எம்பியும் துணை சபாநாயகருமான ரமா தேவி அமர்ந்து இருந்தார். அப்போது சமாஜ்வாதி கட்சி எம்பி ஆசம்கான் பேசும்போது “நான் உங்களை மிகவும் விரும்புகிறேன், எல்லா நேரத்திலும் உங்கள் கண்களைப் பார்ப்பதுபோல் உணர்கிறேன்,” என்று கூறி ஆரம்பித்தார். இதனால் அவையில் இருந்த எம்பிக்கள் அதிர்ச்சி அடைந்ததோடு, ஆசம்கான் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி கூச்சலிட்டனர்.

அப்போது ரமா தேவி ஆசம் கானை நோக்கி கோபமாக இப்படியெல்லாம் பேசக்கூடாது. இந்த கருத்தை உடனே நீக்க வேண்டும் என்றார். இதற்கு பதில் அளித்த கான், உங்கள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். நீங்கள் எனக்கு சகோதரியை போன்றவர் என்றார்.

எனினும் சபாநாயகர் ஓம்பிர்லா நேற்று இருக்கைக்கு வந்து அமர்ந்தபின்னர், ஆசம்கான் மன்னிப்பு கேட்கவேண்டும் என வலியுறுத்தினார். ஆனால் ஆசம்கான் மன்னிப்பு கேட்க முடியாது என மறுத்துவிட்டார்.

இந்நிலையில் இன்று லோக்சபா கூடியதும் எம்பிக்கள் ஆசம்கானுக்கு எதிராக கூச்சலிட்டு அமளியில் ஈடுபட்டனர். ஆசம்கான் பேசியதை ஏற்கமுடியாது என்றும் அவர் ரமா தேவியிடம் உடனே மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் பல எம்பிக்கள் வலியுறுத்தினர்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதராமன் லோக் சபாவில் இந்த விவகாரம் குறித்து பேசுகையில், ரமாதேவிக்கு ஆதரவுதெரிவித்த அனைத்து எம்பிக்களுக்கும் நன்றி. ஆசம் கானின் இந்த செயல் அருவருப்பான செயல். எனவே அவருக்கு எதிராக சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுபோன்ற செயல்கள் தொடராமல் இருப்பதை சபாநாயகர் ஓம்பிர்லா உறுதிசெய்ய வேண்டும் என்றார். இதேபோல் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியும் ஆசம்கானின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, அவர் மீது சபா நாயகர் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதனிடையே துணை சபாநாயகர் ரமாதேவி எம்பி ஆசம் கான் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். சில எம்பிக்கள், ஆசம் கானை எம்பி பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் ஆவேசமாக தெரிவித்தனர்.

Comments are closed.