‘பொருளாதாரம், வர்த்தகம் உள்ளிட்ட  வற்றில், ‘ஆசியான்’ அமைப்பில் உள்ள, 10 நாடுகளுடனான உறவு சிறப்பாக உள்ளது. ”கடலோரபாதுகாப்பு, வேளாண்மை உட்பட பல்வேறு துறைகளில், இந்த நாடுகளுடனான உறவு விரிவுபடுத்தப் பட்டு, வலுப்படுத்தப்படும்,” என, பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்தார்.

தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் பாங்காக் நகரில், ‘இந்தியா – ஆசியான்’ எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான அமைப்பின் மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்க, மூன்று நாள் பயணமாக, பிரதமர் நரேந்திர மோடி வருகைதந்துள்ளார். இந்தோனேஷியா, மலேஷியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புருனே, வியட்நாம், லாவோஸ், மியான்மர், கம்போடியா ஆகிய நாடுகள், ஆசியான் அமைப்பில் இடம் பெற்று உள்ளன.

பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சிக்காக அமைக்கப்பட்டது இந்த அமைப்பு. தென் சீனக் கடல் பகுதியில், சீனா ஆதிக்கம் செலுத்தி வருவதற்கு, அந்த பிராந்தியத்தில் உள்ள பல்வேறு நாடுகள் கடும் எதிர்ப்புதெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், பாங்காக்கில் நேற்று நடந்த இந்தியா – ஆசியான் நாடுகள் மாநாட்டில், பிரதமர் மோடி பேசியதாவது:

ஆசியான் நாடுகளுடனான இந்தியாவின் உறவு மிகவும்சிறப்பாக உள்ளது.ஆசியான் நாடுகள் பொருளாதாரத்தில் மிகவும் வலிமையாக இருக்கவேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம். அதேபோல், இந்தப் பிராந்தியத்தில் அமைதி நிலவவேண்டும்.இந்த, 10 நாடுகளுடன், இந்தியாவும் இணைந்து, நிலம், நீர், ஆகாயம் என, மூன்றிலும் பாதுகாப்பை பலப்படுத்தவேண்டும். குறிப்பாக, கடலோரப் பாதுகாப்பில், நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.

இதன் மூலம், பாதுகாப்பு என்பதோடு, நீலபொருளாதார வளர்ச்சியையும் காணமுடியும். வேளாண்மை, பொறியியல், அறிவியல் ஆராய்ச்சி, டிஜிட்டல் தொழில்நுட்பம் என, பல்வேறு துறைகளில், நாம் இணைந்து செயல்படமுடியும்.

இதன்மூலம், ஆசியான் நாடுகளுடனான உறவு விரிவடைவதுடன், வலுவடையவும் செய்யும்.இவ்வாறு அவர் பேசினார்.

Tags:

Comments are closed.