சேலத்தில் ஆடிட்டர் வி.ரமேஷ் 4 ஆம் ஆண்டு நினைவுதின நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் கலந்து கொண்டு, அவரது உருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் கொலைசெய்யப்பட்டு 4 ஆண்டுகள் ஆகியும் நீதி கிடைக்கவில்லை. இந்தவழக்கு விசாரணைக்கே வரவில்லை. இதுபோன்ற சம்பவங்களில் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காதது, கொலையில் தொடர்புடைய இயக்கங்களை ஊக்குவிப்பதாக அமைந்துவிட வாய்ப்புள்ளது.

முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவர் கொலைசெய்யப்பட்ட வழக்கில் இனியும் தாமதம் ஏற்படுத்துவது நல்லதல்ல. பாஜகவின் சகோதர இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்குகளுக்கும் தீர்வு கிடைக்க வில்லை என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் மறுக்கப்படுகிறதா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

இந்தவிஷயத்தில் அனைத்து அரசியல் கட்சியினரும் ஒன்றாக குரல்கொடுக்க வேண்டும். அதேபோல, அடுத்த ஆண்டு நினைவஞ்சலி செலுத்துவதற்கு முன்பாக இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.

தமிழகத்தில் மாணவர்களின் போராட்டம் வாயிலாக நக்சலைட்டுகள் ஊடுருவ வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்கக் கூடாது. அதனால் கண்காணிப்பை அதிகரிக்கவேண்டும். தீவிரவாத தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் நடப்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. சிறை அதிகாரி ஒரு தகவலைத் தெரிவித்தால், அதனை விசாரிக்காமல் அவரை மாற்றம் செய்வது தீர்வாகாது. சிறைத்துறையில் ஊழல் இருக்கிறதா என்பதை கர்நாடக அரசு விசாரணை செய்ய வேண்டும்.

 

நடிகர் கமல்ஹாசன், தளத்தில் இருந்து அரசியல்செய்ய வேண்டுமே தவிர, இணையதளத்தில் இருந்து அரசியல் செய்யக் கூடாது. கடந்த ஆண்டுவரை எந்த நடவடிக்கையும் இல்லாமல் இருந்தவருக்கு தற்போது மட்டும் சமுதாய அக்கறை எப்படிவந்தது?


 மக்களுக்காக எப்போதும் சேவைசெய்து வந்தவராக இருந்தால் பரவாயில்லை. கடந்த ஆண்டு கமல்ஹாசனின் சமுதாய உணர்வு எங்கு போனது? ஆனால் ரஜினி 1996 ஆம் ஆண்டே குரல்கொடுத்தார். தேசிய நதிநீர் இணைப்பு குறித்து நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து பேசி வருகிறார். அதனால் அவருக்கு வரவேற்புதெரிவித்தேன். எனவே, ரஜினியோடு கமல்ஹாசனை ஒப்பிட முடியாது என்றார்.

Leave a Reply