தெலுங்கானாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சாலையோரம் இருந்த வீட்டுக்குசென்று தேநீர் குடித்துவிட்டு, உரையாடிய நிகழ்வு அம்மாநிலத்தில் பரவலாக பேசப்பட்டுவருகிறது.

நேற்று  ஹைதராபாத் வந்து சேர்ந்தவர், பின்னர் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள மாமிடிப்பள்ளி என்ற கிராமத்துக்குச் சென்றார். அங்கு பழங்குடியின பெண்ணான ஜாத்வதிசோனி என்பவரின் வீட்டில் உணவு உண்டு, தேநீர் அருந்தினார். அமித் ஷாவை காண ஏராளமானோர் அங்கு குவிந்திருந்தனர்.

தெலுங்கானா மாநில பாஜக. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதை தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக தலைவருமான அமித்ஷா, ரங்கா ரெட்டியில் பாஜகவின் உறுப்பினர் இயக்கத்தை தொடங்கிவைத்தார்.

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு ஹைதராபாத்திற்கு அவர் மேற்கொண்ட முதல்பயணம் இதுவாகும். தெலுங்கானாவில், தற்போது 18 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். 36 லட்சம் உறுப்பினர்களுக்கு குறி வைத்து, மெகா உறுப்பினர் இயக்கத்தை தொடங்கி உள்ளதாக அக்கட்சியின மூத்த தலைவர்கள் கூறியுள்ளனர். அமித் ஷாவின் இந்த சுற்றுப் பயணம், மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கும், எதிர் வரும் 2023 தேர்தலில் தெலுங்கானா மாநிலத்தில் பாஜக அரசாங்கத்தை அமைப்பதற்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று பாஜக எம்எல்சி என்.ராம்சந்தர் ராவ் கூறியுள்ளார்.

பா.ஜ., உறுப்பினர் பதிவு வரும் ஜூலை 11 வரை தொடர்ந்து நடக்கிறது. நாடுமுழுவதும், கடந்த ஆண்டைவிட அதிக உறுப்பினர்களை சேர்த்துசாதிக்க வேண்டுமென கட்சி ஊழியர்கள் ஆர்வமுடன் பணியாற்றி வருகின்றனர்.

Comments are closed.