வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் போடோ இனமக்கள் கணிசமாக வசித்து வருகின்றனர். இந்தமக்கள் அதிகம் வாழும் பகுதியை தனியாக பிரித்து போடோலாந்து என்ற பெயரில் தனிமாநிலம் அமைக்க வேண்டும் என ‘அனைத்து போடோ மாணவர் யூனியன்’ (ஏ.பி.எஸ்.யு.) என்ற அமைப்பு கடந்த 1972-ம் ஆண்டு முதல் போராட்டங்களை நடத்தி வருகிறது.

இதைப்போல ‘போடோ’ தேசியஜனநாயக முன்னணி (என்.டி.எப்.பி.), ஐக்கிய போடோ மக்களின் அமைப்பு என பல குழுக்களும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஆயுதப் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த பயங்கரவாத குழுக்கள் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருப்பதுடன், ஏராளமான அரசு, பொதுசொத்துகளும் சேதமடைந்துள்ளன.

இந்த போராட்டம் மற்றும் தாக்குதல்களை தடுத்து அசாமில் அமைதியை நிலை நாட்டுவதற்காக இந்த கிளர்ச்சி குழுக்களுடன் மத்திய-மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தின. இதன் பலனாக மத்திய அரசு, அசாம் மாநில அரசு மற்றும் ‘போடோ’ குழுக்கள் இடையே முத்தரப்பு ஒப்பந்தம் ஒன்று எட்டப் பட்டது.

இதைத்தொடர்ந்து உள்துறை மந்திரி அமித்ஷா முன்னிலையில் நேற்று மத்திய உள்துறை அமைச்சக இணை செயலாளர் சத்யேந்தர் கார்க், அசாம் முதல்மந்திரி சர்பானந்தா சோனோவால், தலைமை செயலாளர் குமார் சஞ்சய் கிருஷ்ணா மற்றும் என்.டி.எப்.பி., ஏ.பி.எஸ்.யு. உள்ளிட்ட ‘போடோ’ குழுக்களின் பிரதிநிதிகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டனர்.

இந்நிலையில், போராட்டம் நடத்திவந்த, போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி என்ற அமைப்பை சேர்ந்த 1,615 பேர், இன்று (ஜன.,30) முதல்வர் சர்பானந்தா சோனவாலிடம், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை ஒப்படைத்து, சரண் அடைந்தனர்.

Comments are closed.