பிரதமர் மோடியின் கனவுதிட்டமான, 'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தில், எந்தமுறைகேடும் நடக்க கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. சிறு முறைகேடு நடந்தாலும், அதைகண்டுபிடிக்கும் வகையில், 'சாப்ட்வேர்' எனப்படும் மென்பொருளை உருவாக்க, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் உதவியை மத்திய அரசு நாடியுள்ளது.

 

இந்த திட்டத்தின் கீழ், 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு, 5லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவசெலவை, மத்திய அரசே ஏற்கிறது. இந்ததிட்டத்தில் உள்ள பயனாளிகள், அரசு அல்லது தனியார் மருத்துவ மனையில் பணமில்லாமல் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.

 

உலகின் மிக பெரிய சுகாதார திட்டமாக, இது கருதப்படுகிறது. இந்ததிட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டும் என்பதில், மத்திய அரசு உறுதியாக உள்ளது.இந்த திட்டத்தை, எந்தவித முறைகேடும் இன்றி செயல் படுத்துவதற்கான விதிமுறைகளை, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு சமீபத்தில் தெரிவித்தது.

இந்த திட்டம் பற்றி, மத்திய சுகாதாரத் தறை வட்டாரங்கள் கூறியதாவது: ஏழைகளுக்கும், தரமான மருத்துவ சிகிச்சை கிடைக்கவேண்டும் என்பதற்காகவே, மத்திய அரசு இந்ததிட்டத்தை அறிவித்துள்ளது.இதில், முறைகேடு நடப்பதை சிறிதும் சகிக்கமுடியாது என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், ஆயுஷ்மான் திட்டத்தின் பலன், மக்களை முழுமையாக சென்றடைய வேண்டும் என, பிரதமர் மோடி விரும்புகிறார்.

முறைகேடுகள் நடக்காமல் தடுக்கும்வகையில், பயனாளிகளுக்கு தனி அடையாள அட்டை வழங்கப்படும். மருத்துவ சிகிச்சை பெறும்போது, மருத்துவ மனைகளில், இந்த அட்டையை காட்டினால் போதுமானது. அதற்கான தொகையை மருத்துவமனைக்கு, அரசு வழங்கிவிடும்.பயனாளிகளுக்கு தனிஅட்டை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. விரைவில், மாவட்ட தலைநகரங்களுக்கு இந்த அட்டைகள் அனுப்பி வைக்கப்படும்.

'மருத்துவ காப்பீடு திட்டங்களில், மோசடிகள் அதிகளவில் நடக்கின்றன' என, மத்திய சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.அவர்கூறியதாவது: முறைகேடு, தவறாக பயன் படுத்துதல் போன்றவற்றுக்கு, மருத்துவ காப்பீடு திட்டங்கள் பெயர்பெற்றவை. இது திட்டத்தின் நிதிநிலையை மட்டும் பாதிக்கிறது என கருதமுடியாது. மக்களின் உடல் நலத்துக்கே ஆபத்தாக அமைகிறது.அதனால்தான், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில், எந்த முறைகேடுக்கும் இடம் கொடுக்கக் கூடாது என்பதில், அரசு உறுதியாக உள்ளது. முறைகேடுகளை துவக்கத்திலேயே கண்டுபிடித்துதடுக்க, புதிய சாப்ட்வேர் உருவாக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

 

Leave a Reply