ஆர்கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட பாஜக தயாராக இருப்பதாக கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற பாஜக வடசென்னை மாவட்டநிர்வாகிகள் கூட்டத்தில் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் ஒருகாலத்தில் பாஜக என்றால் எங்கே இருக்கிறது என்று கேலிசெய்து கொண்டிருந்தார்கள். ஆனால், இன்று அதிமுக, திமுக, காங்கிரஸ்,இடது சாரிகள் என எந்தக் கட்சியாக இருந்தாலும் பாஜகவை தவிர்த்துவிட்டு அரசியல் நடத்தமுடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எந்த தலைவராக இருந்தாலும் பாஜக என்ற பெயரை உச்சரிக்காமல் அவர்களால் பேசமுடிவதில்லை.

பாஜகவை எப்படி வேண்டுமானாலும் பேசலாம், கேலிபேசலாம், அவதூறு பரப்பலாம், எதிர்த்து கேள்வி கேட்க மாட்டார்கள் என்றநிலை இருந்தது. இனியும் இப்படியே இருப்போம் என நினைக்க வேண்டாம். எங்களை விமர்சித்தால் அதற்குபதில் விமர்சனம் வைக்கும் உரிமை எங்களுக்கு உண்டு.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பாஜகவை தொடர்ந்து கடுமையாக விமர்சித்துவருகிறார். அதற்கு பதிலாக நான் சிலவிமர்சனங்களை முன்வைத்தேன். உடனடியாக சமூக ஊடகங்களில் என்னைப்பற்றி ஆபாசமாக, மிக மோசமாக விமர்சித்து வருகிறார்கள். நள்ளிரவில் எனது வீட்டின் முன்பு திரண்டு எனது உருவபொம்மையை கொளுத்துகிறார்கள். பாஜக நிகழ்ச்சிநடைபெறும் இடங்களுக்கு வந்து வேண்டுமென்றே வன்முறையைத் தூண்டும் வகையில் நடந்துகொள்கிறார்கள்.

இதை எதிர்கொள்ள தற்காப்புக்காக பாஜகவினர் சிலநடவடிக்கைகளை மேற்கொண்டால் வன்முறையை தூண்டுவதாக பிரச்சாரம் செய்கிறார்கள். எங்களுடன் மோதநினைத்தால் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.

ஆர்கே.நகர் தொகுதியில் போட்டியிட தமிழக பாஜக தயாராக உள்ளது. இதுகுறித்து விரைவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Leave a Reply