"நாட்டு மக்களுக்கு ஒருசாதாரண சேவகனாகப் பணியாற்றிய மகிழ்வோடும், மனநிறைவோடும் விடைபெறுகிறேன்"" என்று குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெறும் பிரணாப் முகர்ஜி(81) கூறினார்.
பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் திங்கள்கிழமை நிறைவடைவதையொட்டி, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அவருக்கு ஞாயிற்றுக் கிழமை பிரிவுபசார விழா நடத்தப்பட்டது. வண்ணமிகு விழாவில் பங்கேற்கவந்த அவரை, குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திரமோடி, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்த்குமார் ஆகியோர் வரவேற்றனர்.

விழாவில், குடியரசுத் தலைவராகப் பிரணாப் முகர்ஜி ஆற்றிய பணிகளை ஹமீதுஅன்சாரி பட்டியலிட்டுப் பேசினார். அவர் பேசுகையில், ""குடியரசுத் தலைவர் பதவிக்கு மதிப்பையும், மரியாதையும் கொண்டுவந்து பெருமை சேர்த்த பிரணாப் முகர்ஜி, நாட்டின் ஜனநாயகப் பண்புகள் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டவர்'' என்றார்.


அதைத் தொடர்ந்து ஏற்புரையாக, பிரணாப் முகர்ஜி பேசியதாவது:நாடு சுதந்திரம் அடைந்த பிறகு நாட்டின் ஒற்றுமை, சகோதரத்துவம் ஆகியவற்றை ஊக்குவிப் பதற்கான பணிகளில் ஈடுபட்டோம். இந்தச் சிந்தனைகளே நாட்டின் வழிகாட்டும் சிந்தனையாக மாறியது.


தெளிவானசிந்தனையும், உறுதியான செயல்பாடுகளையும் கொண்ட முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வழிவந்தவன் நான். இக்கட்டான சூழலில் கூட எந்தக் கருத்தையும் வெளிப்படையாகப் பேசுவதற்குத் தயங்காதவர் அவர்.


அடிக்கடி அமளி வேண்டாமே: 1969}ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த அவைக்குச் சென்ற போதுதான், விவாதத்துக்கான உண்மையான மதிப்பை புரிந்துகொண்டேன். மேலும், நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடுவதால், மக்களின் பிரச்னைகளைப்பற்றி பேசுவதற்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடுவது ஆளும் கட்சியினரை விட எதிர்க்கட்சியினரின் மனதைக் காயப்படுத்துகிறது.


எனவே, நாடாளுமன்றம் என்பது விவாதம்நடத்தவும், மாற்றுக் கருத்துகளைத் தெரிவிப்பதற்கான இடமுமாக இருக்க வேண்டும். அடிக்கடி அமளியில் ஈடுபடுவதையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவிர்க்கவேண்டும்.
கட்டாயச் சூழலில் மட்டுமே அவசரச்சட்டம்..: மத்தியில் ஆளும் அரசு, கட்டாயச் சூழலில் மட்டுமே அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்க வேண்டும். எனவே, அவசரச்சட்டம் வழியாக, சட்டம் இயற்றும் நடைமுறையை மத்திய அரசு தவிர்க்க வேண்டும். நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவேண்டிய விவகாரங்களில், அவசரச் சட்ட வழிமுறையைப் பின்பற்றக்கூடாது. குறிப்பாக, நிதி தொடர்பான விவகாரங்களில் அவசரச் சட்டம் இயற்றக் கூடாது.


நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றுவதற்கு போதியநேரம் ஒதுக்கப்படாதது கவலையை அளிக்கிறது. போதிய அளவில் விவாதம் நடத்தப்பட்டு, ஆய்வுசெய்யப்பட்ட பிறகே சட்டம் இயற்றப்பட வேண்டும்.
ஆற்றல் மிக்கவர் மோடி: நாட்டில்மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி ஆற்றலோடும், தீவிரத்தோடும் செயல்படுகிறார்.


ஒவ்வொரு நடவடிக்கையிலும், அவரிடம் இருந்துகிடைக்கும் ஒத்துழைப்பாலும், அறிவுரையாலும் பெரிதும் பயனடைந்தவன் நான். பிரதமரின் கனிவான நட்பும், மரியாதைக்குரிய பழகுதலும் எப்போதும் என் நினைவில் நிலைத்திருக்கும்.நாட்டு மக்களுக்கு ஒரு சாதாரண சேவகனாகப் பணியாற்றிய மனநிறைவோடும், மகிழ்ச்சியோடும், பசுமையான நினைவுகளோடும் குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து விடைபெறுகிறேன் என்றார் பிரணாப் முகர்ஜி.

Leave a Reply